கோட்…சூட்…வெளிநாட்டு பயணம்; அதிமுக மாஜிக்களை கலங்க வைத்த ஸ்டாலின் உத்தரவு!
கோட், சூட் அணிந்து எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சரவையினரும் வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் சென்றார்களா அல்லது இன்பச் சுற்றுலா சென்றார்களா என்ற அளவுக்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அதிமுக ஆட்சியில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த விசயங்களையும் தூசு தட்டி, அதிமுக மாஜிக்களை அலற விடும் பணிகளையும் செய்து வருவதாக திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதிமுக வின் முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை தற்போதைய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதோடு, மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான லிஸ்டுகளையும் கை வசம் வைத்துள்ளது. ஆனால், கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரம் காட்டி வரும் ஸ்டாலின், தற்போது இந்த பிரச்னைகளை கிளறினால், மக்கள் மத்தியில் நமக்கிருக்கும் நன் மதிப்புக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்பதற்காக, அதிகாரிகளை காத்திருக்க சொல்லியுள்ளாராம்.
தமிழக முதல்வராக இருந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆரின் 1978ம் ஆண்டிற்குப் பிறகாக, 40 ஆண்டுகளாக தமிழக முதலமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகத்திலேயே நடத்தி வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா, லண்டன், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு, முதலீட்டாளர் மாநாட்டை வெளிநாட்டில் நடத்தினார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் உள்பட சில முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திடீர் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. கோட், சூட் அணிந்து எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சரவையினரும் வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் சென்றார்களா அல்லது இன்பச் சுற்றுலா சென்றார்களா என்ற அளவுக்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், பழனிச்சாமியின் அரசு முறை வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளையறிக்கை சமர்பிக்கும் படி வலியுறுத்தினார். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, வெளிநாட்டு பயணத்தின் மூலம் ரூ.8,835 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முதலீடுகள் மூலம் சுமார் 35,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஸ்டாலினின் வெள்ளையறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பழனிச்சாமி, திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளையறிக்கைகள் வெளியிடப்பட்டன? எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
இந்த சலசலப்புகள் எல்லாம் மறந்து போக, தமிழகத்தில் திமுக ஆட்சியை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அரசு வட்டாரங்களில் பேசபட்டு வருகிறது. முதலமைச்சரின் உத்தரவை அடுத்து, அதிகாரிகளும் மும்முரமாக அந்த தகவல்களை திரட்ட ஆரம்பித்துவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிர்வாகிகளின் வெளிநாட்டு பயணத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால், இதை வைத்தும் அதிமுக வுக்கு செக் வைக்க திமுக அரசு காத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் லிஸ்ட் ரெடியாகி உள்ள நிலையில், வெளிநாட்டு பயணம் விவகாரத்தையும் ஸ்டாலின் ஆராய உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.