’நல்ல படம்’ திரைப்பட விமர்சனம்!

நாயகன் ஹரிஷ், டாஸ்மாக் பார் நடத்தி வருவதோடு ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பொதுவாக பார் நடத்துபவர்கள் அனைத்து பணிகளும் முடிந்த பிறகே மது அருந்துவார்கள், ஆனால் நாயகன் ஹரிஷ், அவரது பாரை திறப்பதற்கு முன்பாகவே மது குடிக்கிறார். எந்த நேரத்திலும் போதையிலேயே இருக்கும் அவரை மருத்துவம் படிக்கும் நாயகி தனலக்‌ஷ்மி காதலிக்கிறார்.எந்நேரமும் குடியில் மூழ்கி இருக்கும் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு மது கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். அதன் பிறகு அவர்களது வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை.

சமூகப் பொறுப்புடன் இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் மது பழக்கத்தால் பலரது வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சொல்வதற்காக மதுவை குடிப்பதற்கு என்று ஒரு கூட்டத்தை படத்தில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். ஹீரோ ஹரிஷ் தலைமையில் இயங்கும் அந்தக் கூட்டம் எந்நேரமும் குடியும் கும்மாளமுமாக இருப்பது சற்று அலுப்பை ஏற்படுத்துகிறது என்றாலும் அது தான் இன்றைய தமிழகத்தின் நிலமை.

திடீரென்று இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்ற அறிவிப்பு வந்தவுடன் இதன் பிறகு இந்த கதையை எப்படி இயக்குனர் கொண்டு செல்லப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் குடிகாரர்களுக்கு மறுவாழ்வுக்கான என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை ஓரளவுக்கு செயல்முறை மூலமாக படத்தில் காட்டி இருப்பது பயனுள்ள விஷயம்.

ஹீரோ ஹரிஷ் குடிப்பழக்கத்தை விட்டு ஒரு புதிய வியாபாரத்தில் ஈடுபடுவது பலருக்கு நம்பிக்கை தரும். முடாக்குடி குடித்தாலும் ஹரிஷை வெறுக்காமல் காதலிக்கும் கதாநாயகி தனலட்சுமி போல் எல்லோருக்கும் காதலி கிடைத்து விட்டால் பிரச்சனைகள் எளிதில் தீர்வாகும் ஆனால் அப்படிப்பட்ட காதலியை எங்கே தேடி கண்டுபிடிப்பது என்பது தான் கேள்வி குறி.

மொட்டை ராஜேந்திரன் கவுன்சிலராக வருவதும் பின்னர் கள்ளச்சாராயம் காய்ச்சி தருவதாக கூறி பூண்டு ரசம் வைப்பதும் சிரிப்பலையை அரங்கில் ஏற்படுகிறது.ஏ அழகு பாண்டியன் படத்தை தயாரித்திருக்கிறார். சகிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் ஓகே ரகம். இனியன் ஜே ஹரிஷ் கேமரா, குடிகார காட்சிகளை கலாட்டாவாக படமாக்கி இருக்கிறது

இயக்குனர் பிரபு ராம் சி தொடக்க காட்சிகளிலிருந்து இடைவேளை வரை குடியைப் பற்றி சொல்லும்போது என்னடா படம் என்று அங்கலாய்க்கும் நிலையில் திடீரென்று மதுவிலக்கு பார்முலாவை அமல்படுத்தி கிளைமாக்ஸ் முடியும் போது நல்ல படம் என்று சொல்ல வைக்கிறார் இயக்குநர்.