’காட்டாளன்’ திரைப்பட விமர்சனம் !

கேரளாவில் உள்ள ஒரு வனப்பகுதியையும், அங்கு வாழும் பழங்குடியின மக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கடத்தல்காரன் சுனில், அங்கிருக்கும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தி வருகிறார். அவரது இடத்தை பிடிக்க துடிக்கும் கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் தந்தங்களை காவல்துறை உதவியுடன் கைப்பற்றுவதோடு, அவரது கடத்தல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறார். பறிபோன தனது தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸை சுனில் களம் இறக்குகிறார். அவரது தந்திரமான திட்டத்தால் சுனில் இழந்த தந்தங்களை பெறுவதோடு, காவல்துறையை ஏமாற்றி விட்டு மீண்டும் தந்தங்களை கடத்துகிறார்.

இதற்கிடையே சுனிலுக்கு உதவி செய்து வந்த நாயகன் ஆண்டனி வர்கீஸ், அவருக்கு எதிராக செயல்படுவதோடு, பழங்குடியின மக்களுக்கு உதவியாகவும் இருக்கிறார். ஆண்டனி வர்கீஸை அழிக்க முடிவு செய்யும் சுனில், தனது எதிரியான கபீர் துகான் சிங் உடன் கைகோர்க்கிறார். அதே சமயம், பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி கடத்தல்காரர்களுக்கு எதிராக மாபெரும் யுத்தம் நடத்த தயாராகிறார் ஆண்டனி வர்கீஸ். இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றது யார் ?, கடத்தல்காரர்களை அழிக்கும் ஆண்டனி வர்கீஸ் யார் ?, என்பதை பல ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களின் வடிவமைப்புடன் சொல்வதே ‘காட்டாளன்’.

நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸின் தோற்றம், நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஸன் ஆகியவை மோகன்லாலின் ஜெராக்ஸாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருப்பவர், அதிகம் பேசாமல், அளவான நடிப்பின் மூலம் அழுத்தமான கதாபாத்திரத்திற்கு இறுக்கமான முகத்தோடு பலம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சுனில், வழக்கம் போல் தனது முரட்டுத்தனமான வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங், ஸ்டைலிஷ் வில்லனாக கவனம் ஈர்க்கிறார்.

திடீர் எண்ட்ரி கொடுக்கும் துஷாரா விஜயன், உடை மற்றும் உடல் தோற்ற அமைப்பில் சற்று உறுத்தலாக தெரிந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார்.

பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ரெனாடைவ் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களம். கதாபாத்திரங்கள் அறிமுகம் மற்றும் அவர்களுக்கான பில்டப் கொஞ்சம் அதிகம் என்றாலும், அதை ரசிக்கும்படியும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்படியும் ஒளிப்பதிவாளர் ரெனாடைவ் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இப்படியே தொடர்ந்து வெறும் ஆக்‌ஷன் படங்களுக்கு மட்டுமே இசையமைத்துக் கொண்டிருந்தால் ரவி பஸ்ரூரும், சாம்.சி.எஸ் போல் சத்தமான பின்னணி இசைக்கானவர் என்ற முத்திரை குத்தப்படுவார். எனவே, இத்தகைய படங்களை குறைத்துக் கொண்டு பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கு வலிமை சேர்க்கும் பின்னணி இசைக்கான கதைகளங்களை தேர்வு செய்வது நல்லது.

சமீர் முகமதுவின் படத்தொகுப்பு காட்சிகளை வேகமாக நகர்த்தியிருப்பதோடு, படத்தின் நீளத்தை முடிந்தளவு குறைத்து பார்வையாளர்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.

பவுல் ஜார்ஜ், ஜோபி வர்க்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோரின் கதை, திரைக்கதை மற்றும் உன்னி.ஆரின் வசனம் ஆகியவற்றை விட ஆக்‌ஷன் காட்சிகள் தான் திரையை அதிகம் ஆட்கொள்கிறது. இருப்பினும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பின்னணியில் அழுத்தமான திரைக்கதை இல்லாததால் அதுவும் ஓரளவுக்கு மேல் சலிப்படைய செய்து விடுகிறது.

’கே.ஜி.எப்’, ’புஷ்பா’, ‘விக்ரம்’ போன்ற படங்களால் பாதிக்கப்பட்டு இப்படி ஒரு படத்தை இயக்குநர் பவுல் ஜார்ஜ் இயக்கியிருக்கிறார் என்பது படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை தெரிகிறது. அதிலும், இப்படி ஒரு உலகத்தை உருவாக்கி தொடர்ந்து அதே பாணியிலான படங்களை இயக்கி வரும் ஒரு தமிழ் சினிமா இயக்குநரையே சிறப்பு தோற்றத்தில் தோன்ற வைத்து, அவர் மூலம் இரண்டாம் பாகம் இருக்கு, என்று சொல்லியிருக்கிறார்.

யானை தந்தம் கடத்தல் மற்றும் அதன் பின்னனியை கருவாக எடுத்துக் கொண்ட இயக்குநர் பவுல் ஜார்ஜ், அதைப் பற்றியும், அதனை சார்ந்த மக்களைப் பற்றியும் அழுத்தமாக பேசாமல், ஆக்‌ஷன் காட்சிகளையும், கதாபாத்திரங்களை ஸ்லோமோஷனில் நடக்க விட்டும் காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை. இத்தகைய மேக்கிங்கை பார்வையாளர்கள் ஏற்கனவே பலமுறை பார்த்திருப்பதால், இவை அனைத்தும் பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறதே தவிர கவர வில்லை.

Related posts:

*சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'*!

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐசரி கே கணேஷ் & சுரேஷ் ப...

உங்கள் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். !

கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் தகவல் திருட்டு ? அதிர்ச்சி தகவல் ?

’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’.!

நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக மாறிய தூர்தர்ஷன் !

'ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!