பொழுதுபோக்கு உலகில் புதிய புரட்சி: கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் ‘கதைஷார்ட்ஸ்’!

வேகமாக மாறிவரும் இன்றைய டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப, மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளும் மொபைல் திரைகளுக்குள் சுருங்கிவிட்டன. இந்தச் சூழலில், மொபைல் பயன்பாட்டாளர்களைக் கவரும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கென (Micro-Drama) உருவாகும் தமிழ்நாட்டின் முதல் பிரத்யேக டிஜிட்டல் கதைத் தளமான ‘கதைஷார்ட்ஸ்’ (KadhaiShorts) இன்று முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (மே 29, 2026) நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இத்தளத்தின் நிறுவனரான கரண் தயாநிதி மாறன் ‘கதைஷார்ட்ஸ்’ செயலியை அறிமுகப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

மொபைல் உலகிற்கான ‘குட்டி சீரிஸ்’

மொபைல் திரைகளில் செங்குத்தாகப் பார்க்கும் ‘வெர்டிக்கல்’ (Vertical Video) வடிவத்தில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட எபிசோடுகளைக் கொண்ட கதைகளை ‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் கதைஷார்ட்ஸ் வழங்குகிறது. இவை வெறும் சாதாரண ரீல்ஸ் வடிவம் போல இல்லாமல், அக்மார்க் சினிமா தரத்திலான (Cinema-grade quality) உயரிய தொழில்நுட்ப வல்லமையுடன் உருவாக்கப்படுகின்றன.

தொடக்கத்தில் முழுக்க முழுக்கத் தமிழ் மொழியிலும், தமிழ்நாட்டுப் பண்பாட்டுச் சூழலிலும் கவனம் செலுத்தவுள்ள கதைஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்திற்குள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய பிற இந்திய மொழிகளிலும் அந்தந்த நிலத்தின் கலாச்சாரத் தன்மையுடன் கூடிய ஒரிஜினல் படைப்புகளாகத் தனது சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஒரே ஆண்டில் 100+ மைக்ரோ டிராமாக்கள்: வெறும் ₹20 கட்டணம்!

உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் முக்கிய நோக்கமாகும். தெளிவான திட்டமிடலுடன், களமிறங்கும் முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை வெளியிட இத்தளம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் சில நிமிட இடைவெளிகளில், மிகக் குறைந்த செலவில் தரமான பொழுதுபோக்கைப் பெறும் வகையில், வெறும் 20 ரூபாய் செலுத்தி கதைஷார்ட்ஸ் செயலியில் இந்த மைக்ரோ டிராமாக்களைக் கண்டுகளிக்கும் எளிய வசதியை நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

தலைமைப் பொறுப்பாளர்களின் உரை

கதைஷார்ட்ஸ் நிறுவனத்தின் தொடக்கம் குறித்து அதன் நிறுவனர் கரண் தயாநிதி மாறன் பேசுகையில்:

“டிஜிட்டல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளும் ரசனைகளும் நாளுக்கு நாள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களின் விருப்பத்தை நூறு சதவீதம் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம். மிகக் குறுகிய காலத்தில் கதைஷார்ட்ஸ் இந்த பொழுதுபோக்குத் துறையில் முன்னணி வகிக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உண்டு.”

இதேபோல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சபரிஷ் வெங்கட் கூறுகையில்:

“தனித்துவமான மற்றும் சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான (Personalized Entertainment) தேவை மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதைக் கருத்தில் கொண்டே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளைச் சிறந்த தொழில்நுட்பத் தரத்தில் உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்.”

திறமையாளர்களை உருவாக்கும் ‘கதை கிளப்’ & 4000 வேலைவாய்ப்புகள்

வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்குத் துறைக்கான அடுத்த தலைமுறைத் திறமைகளைக் கண்டறிந்து வளர்க்கும் நோக்கில், “கதை கிளப்” (Kadhai Club) எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் தொடங்கியுள்ளது. இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கல் டிராமாக்களுக்கான பிரத்யேக தொழில்நுட்ப வல்லமையையும் வளர்க்கும் இடமாக இது செயல்படும்.

ஏற்கனவே 12,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் இணைந்துள்ள நிலையில், வளரும் மற்றும் திறமையான எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ-டிராமா சூழலியலில் (Micro-drama ecosystem) மிகப்பெரிய மற்றும் நிலையான நல்வாய்ப்புகளை வழங்க இது வழிவகை செய்யும். இதன் மூலம் வருகிற 2027 மார்ச் மாதத்திற்குள் 4,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை கதைஷார்ட்ஸ் தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும், வெறும் கதைகளோடு நின்றுவிடாமல், கதைசொல்லலுடன் இயல்பாக இணையும் ‘பிராண்ட் இன்டக்ரேஷன்’ (Brand Integration) வர்த்தக முறையையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வணிக பிராண்டுகளுக்கான அதிநவீன மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது. மொபைல் பொழுதுபோக்குத் துறையில் கதைஷார்ட்ஸின் இந்த அதிரடி வரவு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:

இந்த காதலர் தினத்தன்று, *ஆஹா தமிழ்* அதன் புதிய வெப் சீரிஸ்  *"மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்"* மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிற...

ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் 'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரள...

நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!

நாங்கல்-- விமர்சனம்!

கோட் -- விமர்சனம்.!

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் 'டீன்ஸ்' டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!