அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், குடும்பஸ்தன். இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்தின் மீது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்குது. படத்தின் டிரைலர் பலரையும் கவர்ந்திருந்தது. நவீன்(மணிகண்டன்) மற்றும் வெண்ணிலா(சான்வி மேகனா) இடையே காதல் ஏற்படுகிறது. சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொள்கிறார்கள். இதையடுத்து அவர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார்கள் என்பது தானே கதை என்று நினைத்தால் அது தான் தவறு. கிராபிக் டிசைனரான நவீன் வேலையின்போது நகைக்கடை பிரதிநிதியை அறைந்துவிடுகிறார். இதையடுத்து அவருக்கு வேலை போகிறது. பத்தாக்குறைக்கு நவீனின் நண்பர் வேறு அவர்களின் முதலாளியை அறைந்துவிடுகிறார்.
ஹீரோவுக்கு ஒரு அக்கா, அவரையும் வசதியான இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். பெற்றோர்களுக்கும் சரியான வருமானம் இல்லை. எனவே, ஹீரோவின் வருமானத்தை நம்பிதான், மொத்த குடும்பமும் இருக்குது. அக்கா வீட்டுக்காரர் எப்போதுமே ஹீரோ குடும்பத்தை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்.
இந்த நெருக்கடியான சூழலில் கதாநாயகி, தான் யுபிஎஸ்சி தேர்வு எழுதப் போகின்றேன், லேப்டாப் வேண்டும் என்கிறார். அம்மா ஆன்மீக சுற்றூலா போக பணம் வேண்டும் என்கின்றார். அப்பா வீட்டை பழுது பார்க்கவேண்டும் என்கின்றார். எல்லாவற்றிக்கும் சரி எனச் சொல்கின்றார் ஹீரோ. இந்த நெருக்கடியான சூழலில் ஹீரோவுக்கு வேலை போகின்றது.நவீனின் வேலை தேடும் படலம் சுவாரஸ்யமாக இல்லை. ஒரு திறமையான கிராபிக் டிசைனருக்கு வேலை போனால் இன்னொரு வேலை கிடைப்பது இவ்வளவு கஷ்டமா என வியக்க வைக்கிறார்கள்.படத்தில் லாஜிக்கையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. தனக்கு வேலை போன விஷயம் அக்காவின் கணவருக்கு தெரியக்கூடாது என நினைக்கின்றார். இது இல்லாமல், தனது குடும்பம் நடத்த கடன் வாங்குகின்றார். கடன் நாளுக்கு நாள் அதிகமாவதால் என்ன நடக்கின்றது, என்பதுதான் கதை. கதையாக பார்த்தால், இது மிகவும் சீரியஸான கதைதான். ஆனால் அந்த சீரியஸான கதையை வழக்கம்போல், குடும்பதைக் காப்பாற்ற, கதாநாயகன் எவ்வளவு சிரமப்படுகின்றார் என்பது போன்ற காட்சிகளை சீரியஸாக வைக்காமல், படம் முழுக்க காமெடிக் காட்சிகளாகவே படத்தை நகர்த்திச் சென்றுள்ளனர். ஒரு அறிமுக இயக்குநர், இவ்வளவு சிக்கலான கதையை இந்த அளவுக்கு சுவாரஸ்யமாக கொடுத்தது, ஆச்சரியமாக இருந்தது. படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்க காரணமே, படத்தின் டயலாக் தான்.
படத்தில் கதாபாத்திரத் தேர்வும் நடிப்பும் சிறப்பாக இருந்தது. பெரும்பாலும் நக்கலைட்ஸ் டீம் தான் நடித்துள்ளார்கள்.படம் முழுக்க காமெடி ஒரே மாதிரி இல்லாமல், பல வகைகளில் கொடுத்திருந்தார்கள். படம் முழுக்க கலகல எனக் கொண்டு போய்விட்டு, ஒரு கட்டத்தில் ஹீரோ வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையிடம் பேசுவதைப் போல் ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் தியேட்டரே நிசப்தம் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு மிகவும் சீரியஸான சீனாக அது இருந்தது. அதன் பின்னர், மீண்டும் காமெடி, கலகலப்பு என ஜாலியாக படம் போனது.இசையமைப்பாளர் வைசாக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
படம் முழுவதும் நிறைந்திருக்கும் கதாபாத்திரங்கள், அவர்களுடைய பேச்சு தான் காட்சிகள் என்று இருந்தாலும், அதை ரசிக்குபடி தொகுத்து படத்தை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கண்னன் பாலு.
படத்தின் குறை என்று சொல்ல வேண்டும் என்றால், ஆரம்பத்தில் ஹீரோ கல்யாணம் செய்கின்றார், குடும்ப வாழ்க்கைக்குள் செல்கின்றார், அதனால் அவருக்கு கடனும் கஷ்டமுமாக இருக்கின்றார், அதை எப்படி அவர் எதிர்கொள்ளப்போகின்றார் என காட்சிகளை அமைத்திருந்தனர். ஆரம்பத்தில் கதை எதை நோக்கி போகின்றது என தெரிவதற்கே நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என இருப்பவர்களுக்கு மத்தியில், இப்படித்தான் வாழ்வேன் என வாழ்பவனின் கதையாக இதைக் கொண்டு போயிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இதனால் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு இருந்தது.மேலும் ஹீரோவுக்கு ஒரே மாதிரியான பிரச்சினைகள் திரும்ப திரும்ப வருவதும், அதுவரை மோசமானவர்களாக காட்டப்பட்ட கடன்காரர்கள் திடீரென சாதுவானவர்களாக மாறுவதும் ஏற்கும்படி இல்லை
நவீன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மணிகண்டன். ஸ்டேட்டஸ் பைத்தியம் பிடித்த மைத்துனராக அசத்தியிருக்கிறார் குரு சோமசுந்தரம். தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் சான்வி மேகனா. மணிகண்டனின் பெற்றோராக வரும் சுந்தர்ராஜன், குடசநாடு கனகம் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.குடும்பஸ்தன்- சிரிக்க வைக்கிறான்