தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ரஜினிக்கு சம்மன்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட்டு திரும்பும் போது ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் தூத்துக்குடி அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சீமான் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்திய நிலையில் தற்போது ரஜினிக்கும் அனுப்பியுள்ளனராம்.

அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூடு தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஒரு சிலக் குறியீடுகளை பேசியுள்ளதாக ஆணையத்தில் சாட்சிகளாக ஆஜரானவர்கள் வாக்குமூலம் அளித்திருந்ததாகத் தெரிகிறது. அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனராம். அதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு ஆஜராகும்படி ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.