இந்தியாவின் மின்சார கார் மார்க்கெட் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அண்மையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் தனிநபர் சந்தையை குறிவைத்து களமிறக்கப்பட்டது. அடுத்து, எம்ஜி மோட்டார் நிறுவனம் இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இச்சூழ்நிலையில், அரசுத்துறை நிறுவனங்களுக்கு டிகோர் மின்சார கார்களை சப்ளை செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த வாரம் புதிய மாடல் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியானது 144 கிமீ வரை பயணிக்கும் திறனை வழங்குகிறது. ஆனால், புதிதாக வரும் மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.
அதாவது, தனிப்பட்ட பயன்பாட்டுக்கான சந்தையில் இது சிறந்ததாக இருக்கும். தற்போதைய டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் 72 வோல்ட் ஏசி இன்டக்க்ஷன் மின்மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின் மோட்டார் 40.23 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் பிடிக்கும். டிசி பாஸ்ட் சார்ஜர் மூலமாக 90 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும். இந்த கார், ₹11.58 லட்சம் முதல் ₹11.92 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.