“மைலாஞ்சி” – திரை விமர்சனம்!

அஜயன் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “மைலாஞ்சி” திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா கருப், முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பை இசைஞானி இளையராஜா மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை செழியன் கவனித்துள்ள நிலையில், தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் செய்துள்ளார். ஊட்டியில் ’மைலாஞ்சி’ என்ற பெயரில் பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் நாயகி கிரிஷா குரூப், தனக்கு பிடிக்காதவர் உடனான திருமணத்தில் இருந்து தப்பிப்பதற்காக தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவரை காதலிக்கிறார். அவரிடம் காதலை சொல்ல நினைக்கும் போது, அவர் சென்னைக்கு சென்று விடுகிறார். வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, பறவை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அவருக்கு கிரிஷா குரூப் உடனான நட்பு கிடைக்கிறது. நட்பு காதலாக மாறுகிறது. தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும் போது, கிரிஷா குரூப் தன் மனதில் உள்ள காதலை சொல்லி, தன்னை சென்னையில் இருக்கும் காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஸ்ரீராம் கார்த்திக்கிடம் கேட்கிறார். தொலைபேசி எண், முகவரி என்று எதுவும் தெரியாத ஒருவரை தேடிப் பிடித்து சேர்த்து வைப்பதாக சொன்னாலும், அவர் மனதில் உள்ள காதலை வளர்க்கும் ஸ்ரீராம் கார்த்திக், மறுபக்கம் கிரிஷா குரூப்பின் காதலை சேர்த்து வைக்கும் முயற்சியில் போலியாக ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் கிரிஷா குரூப்பின் மனதில் இருக்கும் காதலை அழிக்க முடியாது, என்ற முடிவுக்கு வரும் ஸ்ரீராம் கார்த்திக், அவரது காதலனை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி, அவரை கண்டுபிடிப்பதோடு, அவரிடம் கிரிஷா குரூப்பின் காதலை தெரியப்படுத்தி, அவரை மீண்டும் ஊட்டிக்கு வர வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். மறுபக்கம் சந்தர்ப்ப சூழ்நிலையால் மனதில் ஏற்பட்டது காதல் அல்ல, ஸ்ரீராம் கார்த்திக் உடனான மனதை பாதித்த பழக்கம் தான் நிஜமான காதல் என்பதை கிரிஷா குரூப் உணர்கிறார். அவர் தன் மனதில் ஏற்பட்ட நிஜ காதலை ஸ்ரீராம் கார்த்திக்கிடம் சொல்லி விட வேண்டும் என்று முயற்சிக்க, அதை புரிந்துக் கொள்ளாத ஸ்ரீராம் கார்த்திக், காதல் வலியோடு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். இதற்கிடையே, அவர் தேடிய கிரிஷா குரூப்பின் காதலன் மீண்டும் ஊட்டிக்கு வருவதோடு, கிரிஷா குரூப்பின் குடும்பத்தாரிடம் அனைத்தையும் சொல்லி, திருமண ஏற்பாட்டுகளை செய்கிறார்.ஒருவரை ஒருவர் காதலித்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதே சமயம் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் தவிப்புகளோடு பயணிக்கும் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் கிரிஷா குரூப்பின் காதல் என்னவானது ?, இவர்களது காதல் விவகாரம் தெரியாமல், இவர்களது அழைப்பின் பேரில் வந்து திருமணத்திற்கு தயாராகும் சென்னை வாசியின் காதல் என்னவானது ? என்பதை  சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘மயிலாஞ்சி’.நாயகியாக நடித்திருக்கும் கிரிஷா குரூப், குமரி பருவத்தில் குழந்தைத்தனமான செயல்பாடுகளோடு நடித்திருப்பதும், அவர் அணிந்திருக்கும் உடையில் இருக்கும் நேர்த்தி, அவரது கதாபாத்திர வடிவமைப்பில் இல்லாததும், அவரது கதாபாத்திரத்தை கதையோடு ஒட்ட விடாமல் செய்கிறது. அவரை சுற்றி கதை நகர்ந்தாலும், அவர் பார்வையாளர்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.கிரிஷா குரூப்பின் ஒருதலை காதலனாக நடித்திருக்கும் நடிகருக்கு வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி வரும் காட்சிகளில் லேசாக சிரிக்க முடிகிறது. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி, நாயகியின் சித்தியாக நடித்திருக்கும் நடிகை, மாமனாக நடித்திருக்கும் கலையரசன் கன்னுசாமி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் செழியனின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பசுமை நிறைந்த ஊட்டியில் எங்கு கேமரா வைத்தாலும் அழகாக தெரிந்தாலும், அதை தன் கோணங்கள் மூலம் கூடுதல் அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் செழியன், காதல் காட்சிகளில் சொல்லாத கவிதையை தன் கேமரா மூலம் காட்சிகளாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.இசைஞானி இளையராஜா என்பது டைட்டிலில் தான் இருக்கிறது. படத்தில் அது இல்லை என்பது சோகம். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், காதலர்களின் மனதில் இருக்கும் காதலை மெல்லிசையாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறது. பின்னணி இசையும் இனிமை.
மனிதர்களின் மனதில் இருக்கும் காதல் மற்றும் அதன் மூலம் ஏற்படும் உணர்வுகளை மட்டுமே வைத்துக் கொண்டு, பார்வையாளர்களை படத்துடன் பயணிக்க வைக்க, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், கடுமையாக முயற்சித்திருக்கிறார். ஆனால், அதற்கான வாய்ப்புகள் திரைக்கதையில் மிக குறைவாக இருப்பதால் அவரது முயற்சி பல இடங்களில் தோல்வியடைந்து விடுகிறது.எழுதி இயக்கியிருக்கும் அஜயன் பாலா, காதல் கதையை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். 
தான் காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் நாயகனின் காதல் உணர்வுகளையும், நாயகியின் காதல் உணர்வுகளையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் அஜயன் பாலா, அதை மிக எளிமையான திரைக்கதை மூலம் மட்டும் இன்றி அழகியலோடும் சொல்லியிருப்பது ரசிக்க வைத்தாலும், தற்போதைய நவீன காலக்கட்டத்திற்கு ஏற்ப சொல்ல தவறியிருப்பது படத்தின் குறையாக அமைந்திருக்கிறது.வலுவான கதை மற்றும் திரைக்கதை இல்லாததால் முழுமையான திரைப்பயணத்தை வழங்க முடியாத படமாகவே தோன்றுகிறது.

Related posts:

Samsung ‘Solve for Tomorrow’ Conducts First Ever Design Thinking Workshop to Develop Problem 1

மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

கடன் வாங்கப் போறீங்களா... இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!

'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது!

துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், ’லக்கி பாஸ்கர்’ படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் பாடலான ‘ஸ்ரீமதி காரு’ வெள...

நடிகர் ரங்கராஜ் நடிக்கும் 'கட்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா1

*நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம் 'கண்மணி அன்னதான விருந்து'!*