சிறு வயதில் இருந்தே எதிர்த்து எதிர்த்து பேசும் நாயகன் ஜெயம் ரவியை சட்டம் படிக்க வைத்த நிலையில், தன்னை சுற்றி நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்டு நியாயம் கேட்கிறார். அவரது இந்த குணம் அவருக்கு மட்டும் இன்றி அவரது பெற்றோருக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால், அவரது அக்கா பூமிகா அவரை நல்வழிப்படுத்துவதற்காக தன்னுடன் ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார். போன இடத்திலும் ஜெயம் ரவியின் செயல்களால் அவரது அக்கா வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட, அதனால் அவர் தனது கணவரை பிரிய நேரிடுகிறது. அக்காவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தனது செயல் தான் காரணம் என்பதை உணராத ஜெயம் ரவி, தனது செயலால் பிரச்சனையை பெரிதாக்க முயற்சிக்க, அவர் பற்றிய ஒரு உண்மை அவரது தந்தை மூலம் தெரிய வருகிறது. அதன் பிறகு தனது சுபாவத்தை மாற்றிக் கொள்ளும் ஜெயம் ரவி, தன்னால் பிரிந்த தனது அக்கா மற்றும் அவரது கணவரை சேர்த்து வைக்க முயற்சிக்க, அதில் எப்படி வெற்றி பெற்றார், அவரை மாற்றிய உண்மை என்ன? என்பதே பிரதர் படத்தின் கதை.
முன்னரே சந்தோஷ் சுப்பிரமணியம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற குடும்ப படங்களில் நடித்த ஜெயம் ரவிக்கு அந்தப் பட்டியலில் இணையும் ஒரு படமாக பிரதர் அமைந்திருக்கிறது.வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாயே என்று தந்தை கேட்கும் போது அவரது வாயை அடைத்து விட்டு நான் விளையாடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு போகும் ஜெயம் ரவி முதல் காட்சியிலேயே அவரது கதாபாத்திரம் என்ன என்பதை கோடிட்டு காட்டுகிறார்.வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவியை திருத்துவதாக கூறி பூமிகா அவரை ஊட்டிக்கு அழைத்து செல்வதும் அதன்பிறகு அங்கு நிகழும் கூத்துக்களும் காட்சிகளை நீயா நானா ரேஞ்சுக்கு ஜிவ்வென பறக்கிறது.காமெடியை விட உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பதோடு, நடனக் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.
வழக்கமான நாயகியாக வந்து செல்லும் பிரியங்கா மோகனுக்கு நடிக்கும் வாய்ப்பே இல்லை.எப்போதும் போல வழக்கமான நடிப்பை படத்தில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அக்கா பூமிகாவுக்கு மிக அழுத்தமான ஒரு கதாபாத்திரம். இவருக்கும் ஜெயம் ரவிக்குமான கெமிஸ்ட்ரி இரண்டாம் பாதியில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதற்கு இவர்களுக்குள் இருக்கும் அந்த பாண்ட் காரணமாக பார்க்கப்பட்டாலும் பூமிகாவின் நடிப்பு ஓரளவுக்கு வரவேற்பு தரும்படி இருக்கிறது. தனது வசன உச்சரிப்பில் மிகவும் கவனமாக இருக்கும் அவர் மிகவும் அழுத்தமாக வசனங்களை பேசுவது போல் வாய் அசைக்கிறார். அது பல இடங்களில் எதார்த்தமாக அமைந்திருந்தாலும் சில இடங்களில் மிகவும் செயர்க்கையாக இருக்கின்றது. மற்றபடி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். பூமிகாவின் கணவராக நடித்த நடராஜன் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கோபமான காட்சியாக இருந்தாலும் சரி, பாசத்தை வெளிப்படுத்தும் காட்சியாக இருந்தாலும் சரி பிரமாதமான நடிப்பு. மாமியாராக நடித்த சரண்யா பொன்வண்ணன் அந்த ரோலுக்கு கொஞ்சம் ஓவராக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. மாமனார் ஐஏஎஸ் அதிகாரியான ராவ் ரமேஷ் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில் வழக்கமான ராஜேஷ் படங்கள் போல் இந்த படமும் மிகவும் கலர்ஃபுல்லாக இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மகா மெஷின் பாடல் இந்த கால ட்ரெண்டில் ஹிட் அடித்து இருக்கிறது. மற்றபடி அவரின் வழக்கமான பாடல்கள் ஓரளவு வரவேற்பு பெற்று இருக்கின்றன. பின்னணியில் எப்பொழுதும் போல் குடும்பங்கள் ரசிக்கும் படியான இசையை கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் எம் ராஜேஷ் குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதலின் விளைவுகளால் குடும்பம் எப்படி சிதறிப் போகிறது என்பதை அப்பட்டமாக சொல்லி இருக்கிறார். இது பிரிந்து கிடக்கும் ஒன்று இரண்டு குடும்பங்களையாவது சேர்த்து வைத்தால் அது படத்துக்கு கிடைத்த பெரிய வெற்றியாக இருக்கும் என்றாலும் இந்த பிரதர் பார்க்கும்படியாக இருக்கிறது.
நடிப்பு: ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், சரண்யா, வி டிவி கணேஷ், பூமிகா சாவ்லா, நட்டி, ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா , பேபி விர்த்தி, மாஸ்டர் அஸ்வின், சதீஷ் கிருஷ்ணன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: பேபி விர்த்தி, மாஸ்டர் அஸ்வின்
தயாரிப்பு: சுந்தர் ஆறுமுகம்
இயக்கம்: ராஜேஷ். எம்
பிஆர்ஓ: நிகில் முருகன்