கோட் — விமர்சனம்.!

தமிழ் திரைப்பட உலகில் கலெக்ஷன் கிங் ஆக இருக்கும் நடிகர் விஜய் இனி கடைசியாக இரண்டு படம் நடித்துவிட்டு அதோடு சினிமாவில் இருந்து ரிட்டயர்ட் ஆகி விடுவதாக தெரிவித்திருந்த நிலையில் அதில் முதல் படமாக ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ படம் உருவானது. இப்படம் தொடங்கியது முதல் இறுதி வரை பல்வேறு எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டு வெளியாகி இருக்கும் இந்த கோட் படம் பல்வேறு நாடுகளில் பயணிக்கும் ஸ்கீரின் பிளேயுடன் பேமிலி சென்டிமெண்ட் , ஆக்‌ஷன், காமெடி ஆகியவற்றுடன் ஏகப்பட்ட ட்விட்ஸூகளுடன் உருவாக்கி விஜய் ரசிகர்களை முழுமையாக திருப்திப் படுத்தி டைரக்டர் வெங்கட் பிரபு முழுசாக பாஸ் ஆகி விட்டார் என்று தான் சொல்லணும். இப்போதெல்லாம் ஒவ்வொரு நொடியையும் பார்த்து பார்த்து செலவிடும் இன்றைய தலைமுறை இளசுகளுக்கே இந்த கோட் சுமார் மூன்று மணி நேர படம் என்றாலும் எந்த இடத்திலும் பெரிதாக சலிப்பூட்டவில்லை என்பதே ஆச்சரியம்.

கதை என்னவென்றால் நம் நாட்டு உளவுத்துறையின் கீழ் இயங்கும் SATS (Special Anti Terrorists Squad) எனப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றும் விஜய், ஒரு அசைன்மென்ட் காரணமாக தாய்லாந்து போகும் போது 2 nd ஹனிமூன் என்று சொல்லி தனது மனைவி சினேகா மற்றும் தனது மகனை உடன் அழைத்துச் செல்கிறார்.

அங்கு விஜயின் மகனை மர்ம நபர்கள் கடத்தி விடுகிறார்கள். பிள்ளையை காப்பாற்றும் முயற்சியில் விஜய் ஈடுபடும் போது, குழந்தையை கடத்தி சென்ற வாகனம் விபத்தில் சிக்கி அதில் இருந்த குழந்தைகள் இறந்து விடுகிறார்கள். பிள்ளையை பறிகொடுத்ததால் அவரை விட்டு சினேகா பிரிந்து விடுகிறார். விஜயும் தனது வேலையை விட்டுவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு எம்பசியில் வேலை செய்கிறார்.தனது வேலை விசயமாக ரஷ்யாவுக்கு செல்லும் விஜய் அங்கே தன்னைப் போல் உருவம் கொண்ட ஒரு இளைஞரைச் சந்திக்கிறார்.

அவரைப் பற்றி அறிந்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் விஜய்க்கு,  இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருந்த தனது மகன் தான் என்பது தெரிய வருகிறது. மகனைக் காப்பாற்றி தன்னுடன் சென்னைக்கு அழைத்து வரும்  விஜய், தனது மகன் மூலம் இழந்த அனைத்தையும் திரும்ப பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் போது, திடீரென்று அவருடன் இருப்பவர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலையாளி யார்?,  எதற்காக விஜய் மற்றும் அவரது குழுவினரை குறிவைத்து கொலை செய்கிறார்கள்?  என்பதை அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் சேர்த்து கமர்ஷியலாக சொல்லியிருப்பது தான் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் அடைம்’ (கோட் )

காந்தி மற்றும் ஜீவன் என அப்பா, மகன் வேடங்களில் நடித்திருக்கும் விஜய், அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பு மற்றும் உடல் மொழியில் முதிர்ச்சியை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பதோடு, மகன் கதாபாத்திரத்தில் நடிப்பில் வேகத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். வழக்கம் போல் சில இடங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பையும், கிண்டலான வசன உச்சரிப்பின் மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பவர், படம் முழுவதும் ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வலம் வந்திருக்கிறார்.

நாளைய முதல்வர் விஜய் காந்தி மற்றும் ஜீவன் என அப்பா-மகன் இரட்டை கேரக்டர்களில் வழக்கம் போல் கலக்குகிறார். படம் முழுக்க தன் இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றிதான் படம் முழுக்க கதை நகருகிறது என்பதை உணர்ந்து ஆட்டம், பாட்டம், சண்டை, நடிப்பு, வசனம் என சகல ரூட்டிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் விஜய்.! ஏகப்பட்ட காட்சிகளுக்கு ரசிகர்களின் ஆரவாரம் அடங்க சில நிமிட நேரமாகிறது. வழக்கமான கதாநாயகியாக வந்து செல்கிறார் நடிகை மீனாட்சி சௌத்ரி. மெயின் கதாநாயகியாக வரும் சினேகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார்.

ஹீரோவுக்கு சமமான ரோலில் வரும் மோகன் அமைதியான நடிப்பில் மிரட்டி இருக்கிறார். விஜய்யின் நண்பர்களாக வரும் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகியோர் படத்திற்கு பக்கபலமாக தன் நடிப்பை வழங்கி இருக்கின்றனர். இவர்களின் தலைமை அதிகாரியாக வரும் ஜெயராம் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். மற்றபடி வழக்கம் போல் வெங்கட் பிரபு படத்தில் அவரின் நண்பர்கள் யார் எல்லாம் இருப்பார்களோ அவர்கள் அனைவரும் இப்படத்தில் இருக்கின்றனர். அவரவர்களுக்கான வேலையை செய்கின்றனர். கூடவே மூன்று டாப் ஸ்டார்ஸ் கேமியோ செய்துள்ளனர். ஒருவர் கேப்டன் விஜயகாந்த், இன்னொருவர் த்ரிஷா, மற்றொருவர் சிவகார்த்திகேயன். இவர்கள் மூவரும் வரும் காட்சிகள் தியேட்டரே அதிர்கிறது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் ‘தல’ என்றபடி வரும் எம் எஸ் தோனி காட்சி தூள் .

மாஸ்கோ, பாங்காக், சென்னை எனப் பயணம் செய்யும் சித்தார்த்தாவின் கேமரா ஒர்க் படத்தின் தரத்தை ஒரு படி உயர்த்தி விடுகிறது. யுவனின் பின்னணி இசையும் விசில் போடு, சின்ன சின்ன கண்கள் பாடல் ஆகியவை மட்டுமே அதிலும் தியேட்டரில் பார்க்கும் போது மட்டுமே தேறுகிறது. ஆனால் பின்னணி இசையை அபாரமாக அமைந்து கோட் மாபெரும் வெற்றி படமாக மாற்ற பெரும் பங்கைக் கொடுத்து தப்பித்து விட்டார் .

ஆரம்பத்திலேயே ரசிகர்களின் ஆரவாரத்தை அள்ளும் நோக்கில் விஜயகாந்த் சர்ப்ரைஸூடன் தொடங்குகிறது படம். அதன் பின்னான ஆக்‌ஷன் காட்சிகளால் தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களைக் கட்டிப் போடுகிறது.அதிலும் ‘டிஏஜிங் மற்றும் ஏஐ’ தொழில்நுட்பம் எந்தளவு வந்துள்ளது என்பதை இந்த படம் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இளவயது விஜய் கோலிவுட்டில் என்ட்ரி ஆன போது தோற்றமளித்த விஜய்யை மீண்டும் பக்காவாக ஸ்கீரினில் கொண்டு வந்து அசர வைத்திருக்கிறார்கள்.தி கோட் படத்தில் விஜய்யை தவிர இன்னும் சில முக்கிய கதாப்பாத்திரங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் முழுக்க விஜய்யை வைத்து மட்டும்தான் கதை இயக்கப்பட்டிருக்கிறது. பிரசாந்த், அஜ்மல், சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா ஆகியோருக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம். எதிர்பாராத சில நடிகர்களின் கேமியோக்கள் ரசிகர்களை வியப்படைய செய்தது.

எப்பேர் பட்ட படமென்றாலும் குறைகள் சொல்ல சில விஷயங்கள் இருப்பதைப் போல் இதிலும் கொஞ்சம் குறைகள் இருந்தாலும் முழு பொழுது போக்கு படமிது என்பதை உரக்கச் சொல்ல வைத்து விட்டார்கள்.