கோவை மேயர் பதவிஅடித்துக்கொள்ளும் 3 பேர்.. ?

கோவை மேயர் பதவி எனக்குதான்.. அடித்துக்கொள்ளும் 3 பேர்.. கோவை திமுக ரேஸில் முந்துவது யார் ?

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி மாநகராட்சியில் 50 வார்டுகள் பெண்களுக்கும், 50 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து வேட்பாளர்கள் உற்சாகத்துடன் தங்கள் வார்டுகளில் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதில் கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில் 11, தெற்கு மண்டலத்தில் 4, வடக்கு மண்டலத்தில் 14, மத்திய மண்டலத்தில் 13 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுபிரிவிலும் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

இதன்படி கோவை கிழக்கு 63, மேற்கு 78, தெற்கு 43, வடக்கு 95, மத்திய மண்டலத்தில் 93 என மொத்தம் 372 வேட்பாளர்கள் கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். கோவை வடக்கு மண்டலத்தில் 14 வார்டுகளுக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 12 வார்டுகள் பொதுப்பிரிவிலும், இரு வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் தான் அதிக வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வடக்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 95 பெண்கள் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக மத்திய மண்டலத்தில் 93 பெண்கள் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக நிர்வாகிகளிடையே உட்கட்சி பூசல் விவகாரம் வெடித்து வருகிறது. யார் மேயராக தேர்ந்தெடுப்பார்கள் ? என்ற கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை திமுக வேட்பாளர் பட்டியலில் கட்சி நிர்வாகி மனைவிகளுக்கும், கட்சியில் பாடுபடாத பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மீனா ஜெயக்குமார் கோவையில் உள்ள 57வது வார்டில், தேர்தல் அலுவலகத்தை திறந்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ஆனால், அந்த வார்டில், திமுக சாந்தாமணியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

ஆளுங்கட்சியான திமுகவில் மேயர் பதவிக்கான போட்டியில் 3 பேர் இருக்கிறார்கள். 46-வது வார்டில் போட்டியிடக் கூடிய மீனா லோகு ஏற்கனவே மாமன்ற உறுப்பினராக இருந்தவர், ஆசிரியர் பணியை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். மேயர் ரேஸில் தற்போது முன்னணியில் இருக்கிறார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வியும் மேயர் ரேஸில் பிரதான இடத்தில் இருக்கிறார். கார்த்திக் ஏற்கனவே கோவை மாநகராட்சி துணை மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மகேந்திரனால் தனது வெற்றிவாய்ப்பை சிங்காநல்லூரில் இழந்த கார்த்திக், அமைச்சராகும் வாய்ப்பையும் நழுவவிட்டார். இந்நிலையில் இந்த முறை தனது மனைவி இளஞ்செல்வியை கோவை மேயராக்குவது என்று முடிவில் இருக்கிறார்.

22 வயதே ஆன இளம் பெண் ஒருவரும் கோவை மேயர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகளான நிவேதா சேனாதிபதி 97-வது வார்டில் போட்டியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.அநேகமாக இவரை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர். எப்படி இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் தான் ‘கோவை’ மேயர் யார் என்று தேர்ந்தெடுப்பார் என்றும் கூறுகின்றனர்.