ஸ்மார்ட் சிட்டி ஊழல் ? சிக்குகிறார் வேலுமணி?
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்னு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அந்தப் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனங்கள் இப்போது ஆடிப் போயிருக்காங்க. மேலும் ஒப்பந்தத்தை நிறுவனங்களுக்கு கொடுக்க காரணமான அதிகாரிகள் முதல் அப்போது அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி வரை பலர் இந்த விவகாரத்தில் சிக்குவாங்கங்கிறாங்க.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானதாக கூறப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தத்தில் பணிகள் கொடுக்கப்பட்டதாக தெரியுது. அந்த வகையில் சென்னை தி.நகர் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தப் பணியை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்ட பெரிய நிறுவனத்துக்கு மொத்தமாக கொடுக்கப்பட்டு, பிறகு அந்த நிறுவனம் பணிகளை சப் காண்ட்டிராக்ட் முறையில் பிரித்து கொடுத்ததாக சொல்லப்படுது. மனிதர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் உருவாக்குவதன் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்தவகையில் எங்கு ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படுகிறதோ, அங்கு கழிவுநீர் வடிகால் முறையாக அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒண்ணு. இந்நிலையில் சென்னை தியாகராயர் நகர் பாண்டிபஜாரில் வரலாறு காணாத வகையில் இப்போ மழைநீர் தேங்கி நிற்குது.. எடப்பாடி யார் தேர்தல் பிரச்சாரத்தில ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பத்தி ரொம்ப பெருமையா திநகரை சிங்கப்பூர் மாதிரி மாத்தியிருக்கோம்னு பெருமையா பேசுனாரு.சிங்கப்பூர் பிரதமர் மட்டும் அந்த வீடியோவில் பேசுனதப் பார்த்திருந்தாருன்னா எடப்பாடியார் மேல் ஒரு மானநஷ்ட வழங்கப் போட்டிருப்பாரு. வடிகால் இல்லை இதற்கு காரணம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களின் அஜாக்கிரதை தான்ன்னு சொல்லபப்படுது. அகண்ட நடைபாதை, வைஃபை, பாதசாரிகளுக்கு இருக்கைகள், வண்ண வண்ண ஓவியங்கள், மல்டி லெவல் கார் பார்க்கிங், என அழகூட்டிய ஒப்பந்ததாரர்களுக்கு மழை பெய்தால் அந்த நீரை எவ்வாறு வெளியேத்தணும்ங்கிற எண்ணம் தோணலை போல. அதனால் தான் மொத்தமாக சிமெண்ட் கலவையை கரைத்து ஊற்றி வடிகால் பகுதி காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை பொறுத்தவரை குறிப்பிட ஒரு நிறுவனம் என்றில்லாமல் சிண்டிகேட் முறையில் பல ஒப்பந்த நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்திருக்குது. பாண்டி பஜார் மல்டி லெவர் கார் பார்க்கிங் கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானதாக கூறப்படும் கே.சி.பி. இஞ்சினியர்ஸ் நிறுவனம் மேற்கொண்டதாக சொல்லப்படுது. இதேபோல் ஏஸ் டெக், குருமூர்த்தி இஞ்சினியரிங், ஜி.சி. இன்ப்ராஸ்ட்ரக்சர், உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏற்கனவே சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளை செய்து வருவதால், மேற்கண்ட இந்த நிறுவனங்களுக்கும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பல வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்னு தெரிவிக்கப்படுகிறது. சென்னை தியாகராயநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நிதியை எந்தெந்த பணிகளுக்கு எப்படியெல்லாம் பிரித்து செலவிடப்பட்டது என்ற தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளதாகச் சொல்றாங்க. மொத்தத்தில் சென்னை தி.நகர் ஸ்மார்ட் சிட்டி பணிகளை சப் காண்ட்ராக்ட் முறையில் நான்கு நிறுவனங்கள் செய்திருக்கிறதால அந்த 4 நிறுவனங்களுமே விரைவில் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படும்னு தலைமை செயலக வட்டாரங்கள் சொல்லுது. பிளாக் லிஸ்டில் நிறுவனத்தின் பெயர் வந்திறக் கூடாதுங்கிறதால அவங்க தரப்பிலிருந்து இவ்விவகாரத்தில் மேலும் சில தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்னு எதிர்பார்க்கிறாங்க. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஏக கோபத்தில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார்னு சொல்றாங்க உள் விவரமறிந்தவர்கள். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக எதுவும் சிக்காததால், ஸ்மார்ட் சிட்டி ஊழல் விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி மீது முதல்வர் தனது பிடியை இறுக்குவார்ன்னு சொல்லப்படுது. சென்னை மட்டுமல்லாமல மதுரையிலிருந்தும் புகார்கள் குவிஞ்சு வர்றதால ஸ்மார்ட் சிட்டி ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் னு தெரிய வந்திருக்குது.
