அடேங்கப்பா! 4.87 கிலோ தங்கம், ரூ.23 லட்சம் ரொக்கம் பறிமுதல்.. விஜயபாஸ்கர் வீடுகளில் தொடரும் சோதனை
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 23 லட்சம், 4.87 கிலோ தங்க நகைகள், 136 கன ரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நடவடிக்கை என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்தச் சூழலில் இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை, சென்னை, திருச்சி எனத் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் இருக்கும் அவரது மாமனார் வீட்டிலும் ரெய்டு தீவிரமாக நடந்து வருகிறது. அமைச்சராக இருந்த போது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், லஞ்ச பணத்தை வைத்து அறக்கட்டளை தொடங்கி, கல்லூரி கட்டியதாகவும் புகார் உள்ளது. இவருக்குச் சொந்தமான 14 கல்வி நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முறைகேடாக அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பு செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .சென்னையில் உள்ள வீட்டில் இருக்கும் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா மற்றும் அவரது மூத்த மகள் கொரோனா பாதிப்பால் தனிமையில் உள்ளனர். இதனால் அந்த வீட்டில் பிபிஇ கிட் அணிந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் இந்த ரெய்டில் மொத்தம் 23 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரூ 27 கோடி சொத்து
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்ட மன்றத் தொகுதி உறுப்பினர் மற்றும் தமிழக அரசின் முன்னாள் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தான் பொது ஊழியராகப் பணிபுரிந்த 01.04.2016 முதல் 31.03.2021 வரையிலான காலகட்டத்தில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.27.22.56,736/- அளவில் சொத்து சேர்த்துள்ளதாகக் கிடைக்கப்பெற்ற நம்பத் தகுந்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு குற்ற எண். 04/2021 சட்டப்பிரிவுகள் 13(2) உ/இ 13(1)(e) ஊழல் தடுப்புச்சட்டம் 1988 மற்றும் 109 இ.த.ச மற்றும் சட்டப்பிரிவுகள் 13(2) r/w 13(1)(b), 12 திருத்தியமைக்கப்பட்ட ஊழல் தடுப்புச்சட்டம் 2018இன் படி 17.10.2021 அன்று சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 18.10.2021 திரு.சி.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் நிர்வகிக்கும் அறக்கட்டளை மூலமாக நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 50 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை-32, திருச்சி-4, மதுரை-1, கோயம்புத்தூர்-2, காஞ்சிபுரம்-1, செங்கல்பட்டு-2 மற்றும் சென்னை-8 இடங்களில் சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் பணம் ரூ.23,85,700/-, தங்க நகைகள் 4870 கிராம் (4.87 கிலோ), 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டு, வழக்கிற்குத் தொடர்புடைய பணம் ரூ.23,82,700/-, 19 ஹார்டு டிஸ்குகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.