ஒரு வருமான வரித்துறை நோட்டீஸ், ஒட்டுமொத்த அ.தி.மு.க கூடாரத்தையும் கலகலக்கவைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 14 பேருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸில், சேகர் ரெட்டி வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டிருக்கிறது வருமான வரித்துறை. ‘நான்கு ஆண்டுகளாகத் தொடரும் சேகர் ரெட்டி வழக்கில், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்மீது நோட்டீஸ் அஸ்திரம் ஏவப்படுவதன் காரணமென்ன?’ என்பதுதான் அரசியல் புதிர்

கடந்த 2016, டிசம்பரில் தொழிலதிபர் சேகர் ரெட்டி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை 176 கிலோ தங்கம், 147 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைக் கைப்பற்றியது. இந்தச் சோதனையைத் தொடர்ந்து சி.பி.ஐ மூன்று வழக்குகளையும், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மூன்று வழக்குகளையும் பதிவுசெய்தன. சி.பி.ஐ தொடர்ந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லையென இழுத்து மூடப்பட்டாலும், வருமான வரித்துறையிலும் அமலாக்கத் துறையிலும் வழக்குகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. சேகர் ரெட்டி இடங்களில் நடந்த இந்தச் சோதனையில் வருமான வரித்துறையிடம் ஒரு டைரியும் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

அதைப் பற்றி நம்மிடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர், ‘‘சேகர் ரெட்டியின் இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட அந்த டைரியில் 87 நபர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, வைத்திலிங்கம் ஆகியோரின் பெயர்களும் இருந்ததாகத் தெரியவந்தது. இவர்களுக்குச் சில உதவிகள் செய்தது தொடர்பான பதிவுகளும் அந்த டைரியில் இருந்தன. அதன் அடிப்படையில், உரிய விளக்கமளிக்குமாறு 12 அ.தி.மு.க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், இந்நாள் தி.மு.க அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து வரும் விளக்கத்தைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை தொடரும்’’ என்றார்கள் சுருக்கமாக.

இந்த நோட்டீஸ் பத்து நாள்களுக்கு முன்னரே அ.தி.மு.க தலைவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாம். இதன் விவரங்கள் தற்போதுதான் மீடியா வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. “அ.தி.மு.க தலைவர்களை கன்ட்ரோலில் வைத்திருப்பதற்காக, டெல்லி மேலிடத்தின் கண்ணசைவிலேயே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்றபடி நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ‘‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை தி.மு.க நடத்தியதுபோலத்தான், ஆரம்பத்தில் எங்களை அ.தி.மு.க-வும் சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் நடத்தியது. பின்னர் இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்றதும்தான், அ.தி.மு.க-வின் அணுகுமுறையில் மாற்றங்கள் தென்பட்டன. வட மாவட்டங்களில்கூட மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இடங்களை எங்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.

இந்த நோட்டீஸ் அஸ்திரம் ஏவப்பட்டிருக்காவிட்டால், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வும் ஒரு டம்மி கட்சியாகத்தான் போயிருக்கும். எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தலில் எங்களை மதித்திருக்கக்கூட மாட்டார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் எங்களைக் கழற்றிவிட்டிருப்பார்கள். அதற்காகத்தான், இந்த மறைமுக நோட்டீஸ் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் லகான் எப்போதும் தங்கள் கையில்தான் இருக்க வேண்டுமென்று டெல்லி நினைக்கிறது. வழக்குகளை எதிர்கொள்வதற்கு பா.ஜ.க என்ற கவசம் அ.தி.மு.க தலைவர்களுக்கு அவசியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தத்தான் இந்த நோட்டீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்றார்.

சேகர் ரெட்டி மீதுள்ள இந்த வருமான வரித்துறை வழக்கு இப்போது தூசு தட்டப்படுவதற்கு மற்றொரு காரணத்தையும் அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள். ‘‘அ.தி.மு.க-வுக்கு அனுசரணையாக இருந்த சேகர் ரெட்டி தரப்பு, இப்போது தி.மு.க பக்கம் சாய்கிறது. அதனால், ரெட்டி தரப்புக்கு ‘செக்’ வைக்கத்தான் வழக்குக்கு உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அபராதமாக சேகர் ரெட்டி தரப்பு செலுத்தவேண்டிவரும்’’ என்கிறார்கள் அதிகாரிகள்