செப்டம்பர் 7-ம் தேதி இரவு. சென்னையிலுள்ள மிக முக்கியப் பத்திரிகையாளர்களின் வாட்ஸ்அப்களுக்கு ஒரு மெசேஜ் வந்தது. ‘சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை வருமான வரித்துறை கையகப்படுத்தப் போகிறது’ என்பதே அந்தத் தகவல். ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடத்த எந்தத் தடையுமில்லை’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த 12 மணி நேரத்தில், வருமான வரித்துறை தரப்பிலிருந்து இப்படியொரு பரபரப்பு தகவல் லீக் ஆனது. தகவலை மெய்ப்பிக்கும்விதமாக, அடுத்த நாள் பையனூர் பங்களாவை முடக்கியது வருமான வரித்துறை. “கொடநாடு வழக்கு மூலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க ‘செக்’ வைக்கும் நிலையில், சசிகலாவுக்கு வருமான வரித்துறை மூலமாக ‘செக்’ வைத்திருக்கிறது மத்திய அரசு” என்கிறார்கள் இந்த விவகாரங்களை முழுவதுமாக அறிந்தவர்கள். ‘பையனூர் பங்களா முடக்கம் ஏன் நடந்தது… எடப்பாடிக்கு இருக்கும் சிக்கல் என்ன?’ என்பதை அறிய களமிறங்கினோம்.
எடப்பாடிக்கு என்ன சிக்கல்?
“கொடநாடு விவகாரத்தைத் தேவையில்லாமல் எடப்பாடி ஊதிப் பெரிதாக்குகிறார்” என்றபடியே நம்மிடம் பேசினார்கள் அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர். “கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை கேட்டு அ.தி.மு.க பிரமுகர் அனுபவ் ரவி உச்ச நீதிமன்றம் சென்றதே தவறு. சிறிய அளவில் தெரிந்திருந்த இந்த விவகாரத்தை, இப்போது தேசிய அளவில் பேசுபொருளாக்கி விட்டார்கள். அனுபவ் ரவி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாட, பிரபல மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹட்கியை அமர்த்தியிருக்கிறார்கள். ஒரு அமர்வில் வாதாட சில லட்சங்களில் சம்பளம் பெறும் முகுல் ரோஹட்கி, பெரிய நிதிப் பின்னணி இல்லாத அனுபவ் ரவிக்காக வாதாட எப்படிச் சம்மதித்தார்… அனுபவ் ரவிக்கு ‘சப்போர்ட்’ செய்வது யார் என்பதையெல்லாம் தி.மு.க தோண்ட ஆரம்பித்திருக்கிறது. இதெல்லாம் தேவையில்லாத சிக்கல்.
இப்போது கொடநாடு வழக்கு மேல் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை அறுபது நாள்களுக்குள் முடித்துவிட்டு இரண்டாவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தீவிரமாகியிருக்கிறது காவல்துறை. இதுவரை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரிக்கப்படாமலிருந்த கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் போலீஸாரால் விசாரிக்கப்பட்டிருக்கிறார். விசாரணையின்போது, ‘அ.தி.மு.க பிரமுகர் கூடலூர் சஜ்ஜீவனை ஏன் நீங்கள் விசாரிக்கவில்லை?’ என்றும் அவர் கேட்டிருக்கிறார். எஸ்டேட் பங்களாவின் கணினி ஆபரேட்டர் தினேஷ், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் இருவரின் மரணங்களையும் சந்தேக மரணங்களாக மாற்றி, அந்த வழக்குகளில் புதியவர்களைச் சேர்க்கவும் காவல்துறை வேகமெடுக்கவிருக்கிறது. சஜ்ஜீவனுடன் சேர்த்து சேலத்து காவியத்தலைவரும் காவல்துறையால் வளைக்கப்பட்டு, ‘தன்னை கொடநாடு வழக்கில் கோத்துவிட்டு, இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம்பெற வைத்துவிடுவார்களோ?’ என்கிற பதற்றத்தில் எடப்பாடி இருக்கிறார். தவிர, கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும், எடப்பாடி உறவினரின் நிறுவனம் செய்திருந்த கட்டட ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் சில கோப்புகள் ஆளும் தரப்புக்குக் கிடைத்துள்ளன. கொடநாடு இரண்டாவது குற்றப்பத்திரிகை மூலம், வலுவாக செக் வைத்திருக்கும் ஆளும் தரப்பு, கூடுதலாக நெடுஞ்சாலைத்துறை கோப்புகளையும் அடுத்தகட்ட அஸ்திரமாக எடுத்து வைத்திருக்கிறது” என்றவர்கள், அடுத்து சொன்ன விஷயம்தான் ‘டைம் பாம்’ ரகம்!
ரகசிய ஆலோசனையில் 25 எம்.எல்.ஏ-க்கள்!
“ ‘எடப்பாடி பழனிசாமியின் மீது காவல்துறை நடவடிக்கை பாய்ந்தால், அடுத்தகட்டமாக என்ன செய்வது?’ என்று 25 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சமீபத்தில் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு மூத்த டெல்டா மாவட்டத் தலைவர்தான், சென்னையிலுள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். டெல்டா தலைவருக்கும், கொங்கு மண்டல உச்ச அமைச்சர் ஒருவருக்கும் ஏற்கெனவே கட்சிக்குள் ஏழாம் பொருத்தம். இவர்களுக்கு இடையிலான பஞ்சாயத்து, கட்சித் தலைமை வரை சென்றும், டெல்டா தலைவருக்கு நியாயம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், ஆற்றாமையிலிருந்த அந்த டெல்டா தலைவர், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கூட்டத்தைத் திரட்ட ஆரம்பித்திருக்கிறார். ஐந்து எம்.எல்.ஏ-க்கள் வீதம் மொத்தம் 25 பேரைச் சந்தித்துப் பேசியிருக்கும் அந்தத் தலைவர், ‘காவல்துறை ரொம்ப வேகமா இருக்கு. எப்படியும் சிக்கல் வரும். சில பேர் தங்களோட சுயலாபத்துக்காகக் கட்சியை அடமானம்வெச்சுட்டாங்க. கட்சியைக் காப்பாற்ற நாம ஒத்துமையா இருக்கணும்’ என்று உருக்கமாகவே பேசியிருக்கிறார். இந்த ரகசியக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில், பெரும்பாலானோர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பான விவகாரம் சட்டமன்றத்தில் விவாதமானபோது, அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்து, கிளம்பவும் தயாராகினர். அப்போது, ‘கொடநாடு விவகாரத்துக்கெல்லாம் பொங்கி வெடிச்சோம். இப்ப அம்மா பெயர்ல இருக்குற பல்கலைக்கழகத்துக்கே ஆபத்து வந்திருக்கு. இதற்கு ஒரு போராட்டம் பண்ண வேண்டாமா… கொடநாடுக்கு ஒரு நியாயம், அம்மாவுக்கு ஒரு நியாயமா?’ என்று ஓ.பி.எஸ்-ஸிடம் டெல்டா தலைவர் கோபமாகியிருக்கிறார். இதைத் தொடர்ந்தே, அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் சாலைமறியல் போராட்டத்தை நடத்தினர். இந்த அளவுக்கு எடப்பாடிக்கு எதிரான காய்நகர்த்தலைச் செய்யும் அந்த டெல்டா தலைவர், எம்.எல்.ஏ-க்களிடையே தனி அணி ஒன்றைக் கட்டமைக்கும் முயற்சியிலும் தீவிரமாகியிருக்கிறார். இதெல்லாம் சசிகலாவுக்கு அனுகூலமாக முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்றனர்.
“அரசியல் பேசக் கூடாது…” – சசிகலாவுக்கு செக்!
கொடநாடு வழக்கு ஒருபக்கம் சூடுபிடிக்கும் நிலையில், அரசியல்ரீதியாக சசிகலா வேகமெடுப்பது பா.ஜ.க-வுக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. “ஓ.பி.எஸ்-ஸின் மனைவி மறைந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னதில் தொடங்கி, அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல், அ.தி.மு.க முன்னாள் அவைத்தலைவர் புலமைப்பித்தன் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தது வரை, தன்னுடைய நகர்வுகளை அரசியல்ரீதியிலான ‘அட்டாக்’குகளாக மாற்றியிருக்கிறார் சசி. இதெல்லாம் டெல்லியை வெகுவாக வெறுப்பேற்றியிருக்கிறது” என்கிறது பா.ஜ.க வட்டாரம்.
நம்மிடம் பேசிய மத்திய உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர், “அரசியலில் சசிகலாவின் என்ட்ரியை அமித் ஷாகூட ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார். ஆனால், பிரதமர் மோடிக்கு அதில் துளியும் விருப்பமில்லை. 2012-ல் போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு, ஜெயலலிதாவுக்குப் பல்வேறு வகைகளில் உதவியது மோடிதான். அந்தநேரத்தில், சசிகலா குறித்து ஜெயலலிதா தெரிவித்த சில கருத்துகள் இப்போதும் மோடியின் நினைவைவிட்டு அகலவில்லை. தவிர, எடப்பாடிக்கு எதிராக மாநில அரசு அஸ்திரங்களை ஏவிவரும் நிலையில், அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பார்வை சசிகலா பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. இது எதிர்காலத்தில் அனுதாபமாக மாறி, ‘அ.தி.மு.க மீண்டும் சசிகலா கைக்குச் சென்றுவிடுமோ?’ என்கிற எண்ணத்தை டெல்லியில் உருவாக்கியிருக்கிறது.
ஏற்கெனவே, வருமானத்துக்கு அதிகமாக சசிகலா சொத்து சேர்த்த பட்டியலில், 160-க்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறையினர் அடையாளம் கண்டிருந்தார்கள். அதில் பையனூர் பங்களாவும் ஒன்று. ஆனால், அதை முடக்காமல் வைத்திருந்தனர். இப்போது அது முடக்கப்பட்டதற்குக் காரணமே சசிகலாவுக்கு மறைமுகமாக ஓர் அச்சத்தை ஏற்படுத்தவும், ‘சசிகலாவை நாங்கள் கண்காணிப்பில்தான் வைத்திருக்கிறோம்’ என்பதை அ.தி.மு.க நிர்வாகிகளுக்குக் காட்டவும்தான். மற்றபடி, எடப்பாடிக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க-வை பலமிழக்க வைத்து, எதிர்க்கட்சி இடத்தைத் தன் கைப்பிடிக்குள் எடுத்துக்கொள்வதே பா.ஜ.க-வின் திட்டம். இதனால்தான், தங்கள் திட்டத்துக்கு சசிகலா இடையூறாக வந்துவிடக் கூடாது என்பதற்காக, வருமான வரித்துறை அட்டாக் மூலம், ‘அரசியல் பேசக் கூடாது’ என்று சசிகலாவுக்கு ‘செக்’ வைக்கிறது டெல்லி” என்றார்.
பையனுார் பங்களா விவகாரத்தில் அரசியல் தாண்டி மற்றொரு விவகாரமும் முன்வைக்கப்படுகிறது. அதாவது, சசிகலா தரப்புக்கு ஏற்கெனவே வருமான வரித்துறை விதித்துள்ள அபராதத் தொகைகளைக் கட்டுவதற்கு அழுத்தம் வந்த நிலையில், இந்த பங்களாவை விற்பனை செய்ய சசிகலா தரப்பு தீர்மானித்திருந்ததாம். அதற்காகச் சில நில புரோக்கர்கள் மூலமாகப் பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்கிறார்கள். இதையறிந்த வருமான வரித்துறை, அவசர அவசரமாக பையனூர் பங்களாவுக்கு நோட்டீஸ் ஒட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பையனூர் பங்களா சொத்தை யாருக்கும் விற்பனை செய்ய முடியாத நெருக்கடி சசிகலா தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.
கோட்டைவிட்ட அ.தி.மு.க… பயன்படுத்திக்கொண்ட பா.ஜ.க!
இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சி இடத்தை பா.ஜ.க பிடிக்க முயல்வது சட்டமன்றத்திலேயே தெரிய ஆரம்பித்திருக்கிறது. உதாரணமாக, சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிரான ஒரு தீர்மானத்தை செப்டம்பர் 8-ம் தேதி சட்டமன்றத்தில் தி.மு.க கொண்டுவந்தது. இதை எதிர்த்து அல்லது ஆதரித்துப் பேசியிருக்க வேண்டிய அ.தி.மு.க உறுப்பினர்கள், கடந்த வாரம் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தை மீண்டும் விவாதிக்கக் கோரினார்கள். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதியளிக்கவில்லை. உடனடியாக சபையிலிருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து, தீர்மானத்தை எதிர்த்து பேசிய பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க-வின் கருத்துகளைச் சட்டமன்றத்தில் பதியவைத்தார். கிடைத்த கேப்பில், தி.மு.க-வுக்கு எதிரான கட்சியாக மன்றத்தில் பா.ஜ.க தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது. ஆனால், அ.தி.மு.க-வின் ஒரே பிரச்னையாகக் கொடநாடு விவகாரத்தை மட்டுமே முன்னெடுத்துப் பேசிவருகிறார்கள். சட்டமன்ற விவாதங் களில் பேசவேண்டிய முக்கியமான விஷயங்களைக் கோட்டைவிட்டு, காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் கூட கொடநாடு பற்றியே காரசாரமாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி.
ஒருபக்கம் எடப்பாடிக்கு ‘செக்’ வைக்க கொடநாடு வழக்கைத் துரிதப்படுத்துகிறது தி.மு.க அரசு. மறுபக்கம், சசிகலா கையில் அ.தி.மு.க சென்றுவிடாமல் தடுக்க, வருமான வரித்துறை மூலமாக ‘செக்’ வைக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. அ.தி.மு.க இடத்தைப் பிடிக்க தனி ரூட்டிலும் பயணிக்கிறது பா.ஜ.க. எடப்பாடிக்குச் சிக்கல் ஏற்பட்டால், தனி அணி கட்டமைத்து இயங்கவும் ஒரு தரப்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தயாராகின்றனர். இந்த ஆடுபுலி ஆட்டத்தில் வீழ்த்தப்படப்போவது யார், தப்பிக்கப்போவது யார் என்பதெல்லாம் கொடநாடு வழக்கின் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கலாகும்போது தெரிந்துவிடும்!