திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? அஞ்சா நெஞ்சனின் ஆதரவாளர்கள் ஆரவாரம்!!

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால் தி.மு.க.வினர் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.

முதலமைச்சரான மு.க. ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி எதிரணியில் உள்ள தலைவர்களும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மு.க.அழகிரியும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில் என் தம்பி மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதை கண்டு பெருமை அடை கிறேன். அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்று புகழ்ந்தார்.

மு.க.அழகிரியின் இந்த திடீர் மனமாற்றம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது ஆதரவாளர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி மதுரையில் பரபரப்பு வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளில் “இணைந்த இதயங்களே” “தம்பி வா தலைமை ஏற்க வா” “தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி நேரில் சென்று கலந்து கொண்டார். அப்போது துரை தயாநிதியை, உதயநிதி ஸ்டாலின் கட்டித்தழுவி வரவேற்றார். இதுவும் ஆதரவாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. எனவே மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரைவில் தி.மு.க.வில் ஐக்கியமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.