தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி மையங்களை அமைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதற்காக டென்மார்க் நாட்டுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட உள்ளது. இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோரும் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் வங்கக்கடல் பகுதியில் மிகப்பெரிய காற்றாலை மின்சார திட்டத்தை கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த ஆலோசனையின் முடிவில் கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை வைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு டென்மார்க்கை அணுக முக்கிய காரணம் இருக்கிறது. உலகிலேயே சொந்த நாட்டு மின்சார உற்பத்தியில் காற்றாலை மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு டென்மார்க்தான். 1970ல் இருந்து டென்மார்க் காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 நாடாக இருக்குது. நவீன தொழில்நுட்பம், அதிக மின்சார உற்பத்தி என்று காற்றாலை உற்பத்தியில் டென்மார்க் பல புரட்சிகளை செய்துள்ளது. இதன் காரணமாகவே உலகில் பல வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டில் கடலில் காற்றாலை மின் உற்பத்தியை ஏற்படுத்தி தர டென்மார்க் நிறுவனங்களை அல்லது டென்மார்க் அரசை அணுகிறது. டென்மார்க்கின் மொத்த மின் தேவையில் 47% மின்சாரம் கடலில் அமைக்கப்பட்டு இருக்கும் காற்றாலை மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னும் பத்து வருடங்களில் டென்மார்க்கின் மொத்த மின் தேவையில் 85% வரை காற்றாலை மின்சாரம் மூலமே பூர்த்தி செய்யப்படும் என்கிறார்கள். கடலில், கடலுக்கு அருகே, நிலத்தில் என்று மூன்று வகையான காற்றாலை திட்டங்களை அந்த நாடு செயல்படுத்தி வருகிறது. இதற்காக அரசு மின் உற்பத்தி நிறுவனம், தனியார் நிறுவனங்கள், கோ ஆபரேட்டிவ் நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. முக்கியமாக டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் சிட்டி அருகே அதிக அளவில் வானுயர காற்றாலைகள் கடலில் அமைக்கப்பட்டுள்ளன. . இதன் காரணமாகவே டென்மார்க்கை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது. தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டென்மார்க்கை அணுக இதுதான் காரணம்னு சொல்றாங்க. காற்றாலை மின் உற்பத்தி மைய மார்க்கெட்டில், அதிலும் கடலில் மையங்களை அமைப்பதில் உலகிலேயே டென்மார்க்தான் தற்போது டாப். இதன் காரணமாகத்தான் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டென்மார்க்குடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்திருக்கார்.
வரலாற்று ரீதியாகவே கடந்த 400 வருடமாக தமிழ்நாட்டுடன் டென்மார்க் பல்வேறு வர்த்தகங்களை மேற்கொண்டு உள்ளதாக இந்த ஆலோசனையில் டென்மார்க் தூதுவர் தமிழ்நாடு அரசிடம் குறிப்பிட்டார்.இதையடுத்து தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. உலகம் முழுக்க பல முன்னேறிய நாடுகளில் கடலில் காற்றாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் வங்கக்கடலில் காற்றாலைகளை அமைத்து, அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் முடிவில் அரசு இறங்கி உள்ளது. இந்த சந்திப்பில் இது குறித்து விவாதம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில் காற்று நிலையாக இருக்கும். இதனால் இந்தியாவிலேயே இங்குதான் கடலில்காற்றாலை அமைக்கும் திட்டத்தை எளிதாக நிறைவேற்ற முடியும், தமிழ்நாடுதான் இதற்கு சிறந்த தேர்வு என்று டென்மார்க் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த ஆலோசனையின் முடிவில் கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான பின் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
கடலில் காற்றாலை அமைப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை. இதை டென்மார்க்கில் இருந்து கொண்டு வந்து இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் செயல்படுத்த உள்ளனர்.இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு இதற்காக வெளியாகும். இதன் மூலம் தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆவதோடு, புதிய வேலை வாய்ப்புகளை இது உருவாக்கும், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் இதனால் முன்னேற்றம் அடையும். கடலில் காற்றாலை அமைத்து, பெரிய ராட்சச குழாய்கள் மூலம் மின்சாரத்தை கரைக்கு கொண்டு வரும் திட்டமாகும் இது.இதற்காக புதிய வகை காற்றாலைகளை உருவாக்க வேண்டும். விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவை மிகவும் தகுதி வாய்ந்த ஒன்றாக இருப்பதாக டென்மார்க் தூதுவர் ஃபெரெடி குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 13 டென்மார்க் நிறுவனங்கள் உள்ளதால் இந்த காற்றாலை திட்டம் உறவை மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.சுமார் 7000 மெகாவாட் உயர்மட்ட காற்றுத்திறன் மின்னுற்பத்தியைக் கொண்ட தமிழ்நாடு தெற்காசியாவின் காற்றுத்திறன் மையங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருது. இந்தியாவில் காற்றுத் திறன் பயன்பாடு 1990களில் துவங்கி குறுகிய காலத்திலேயே உலகின் ஐந்தாவது இடத்தை எட்டி உள்ளது. இந்தியாவின் மொத்த காற்றுத் திறன் உற்பத்தியில் 40% தமிழகத்திலிருந்து பெறப்படுகிறது.தமிழ்நாட்டில காற்றாலையிலிருந்து 7134 மெ.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுது.ஆனால் ஆண்டுக்கு 8 மாதங்கள் மட்டுமே மின் உற்பத்தி இருக்கும். காற்றுப் பண்ணைகள் உள்ள முதன்மை மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் இருக்குது. ஆனால் இவையெல்லாமே தனியாருக்குச் சொந்தமான காற்றாலைகள்.அவர்கள் தயாரிக்கும் மின்சாரத்தை தமிழக அரசு விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.அரசு சார்பில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி செய்தால் அரசுக்கு செலவு மிச்சமாகும்.மின்வெட்டு என்கிற பேச்சுக்கே இடமிருக்காது.இந்த திட்டம் தமிழ்நாட்டில் நிறைவேறினால் அகில இந்தியாவே நம்மைத் திரும்பி பார்க்கும்.முதல்வர் ஸ்டாலினோட புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.