டாஸ்மாக் அரசாங்காத்தின் ஒரு மிகப் பெரிய வறுமை உண்டாக்கும் திட்டமாகும்

இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மது விலக்கு அமலில் இருந்தது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகம் உள்பட பக்கத்து மாநிலங்களில் மது விலக்கு அமலில் இல்லாமல் இருந்தது. புதிதாக மது விலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அன்றைய மத்திய அரசு அறிவித்தது.

”எங்களுக்கும் மானியம் வழங்குங்கள்” என்று, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிஅவர்கள் கேட்டாரு. ”ஏற்கனவே மது விலக்கை அமுல் படுத்தி வரும் மாநிலங்களுக்கு மானியம் கிடையாது” என்று மத்திய அரசு கூறிவிட்டது.

ஏற்கனவே மது விலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள் என்று கருணாநிதிஅவர்கள் மீண்டும் கேட்டும், அவருடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதனால் மது விலக்கை ரத்து செய்துவிட்டு, பிறகு (மத்திய அரசு மானியம் கிடைக்கும்போது) மீண்டும் அமலுக்குக் கொண்டுவர முடிவு செய்தார் . மதுவிலக்கை ரத்துசெய்ய கருணாநிதிஅவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் ராஜாஜி அவர்களுக்கு கிடைத்தது.​ உடனே ராஜாஜிஅவர்கள்,​​ கொட்டும் மழையில் குடைபிடித்தபடி கருணாநிதியோட வீட்டுக்குச் சென்று,​​ “மதுவிலக்கை ரத்துச் செய்யக்கூடாது” என்று கேட்டுக் கொண்டார்.​ ஆனால்,​​ அதற்கு கருணாநிதிஅவர்கள் செவிசாய்க்கவில்லை.​ ​​ “மதுவிலக்கை இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால் அவருடைய தானைத் தளபதிகளாக விளங்கும் முதல் அமைச்சர்களாலும், மத்திய அரசை நடத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் மதுவிலக்குக் கொள்கை புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாளுக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?” என்று அவருக்கே உரித்தான கவிதை நடையில் அழகு தமிழில் கூறி நியாயப்படுத்தினார் முதல்வர் கருணாநிதி.

1971 ஆகஸ்டு 30 ந்தேதி முதல் மது விலக்கு தள்ளி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அன்று முதல் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வகை செய்யும் அவசர சட்டம் ஒன்றை அன்றைய தமிழக கவர்னர் கே.கே.ஷா பிறப்பித்தார். அந்த அவசரசட்டத்தில், இப்போது தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாததால், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இந்த அவசர சட்டம் ஆகஸ்டு 30 ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த அவசர சட்டப்படி, மது விலக்கு சட்டம் அமல் படுத்தப்படுவது தமிழகத்தில் அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தில் உள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. மேற்கண்டவாறு அவசர சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது.இந்த அவசர சட்டத்தின் காரணமாக, மது விலக்கு அமலில் இருந்தபோது மது குடித்த குற்றம், மது வாங்கிய குற்றம் போன்றவைகளுக்காக தண்டனை அடைந்தவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 700 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும், சாராயக்கடைகள் திட்டமிட்டபடி திறக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து, ”மது விலக்கு சட்டத்தை நிர்வாக உத்தரவு மூலம் ஒத்தி வைக்க முடியாது. எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பது சட்ட விரோதமான செயல். இதற்கு தடை விதிக்கவேண்டும்” என்று, சுதந்திரா கட்சி எம்.எல்.ஏ. டாக்டர் ஹண்டே, வி.எஸ்.ஸ்ரீகுமார், வெங்கடசாமி நாயுடு ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வீராசாமி, நீதிபதிகள் பி.எஸ்.கைலாசம், ஆர். சதாசிவம், டி.ராமபிரசாத் ராவ், வி.வி.ராகவன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தார்கள். ”மதுக்கடைகளை திறக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இந்த மனு செயலற்றதாகி விடுகிறது” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின் ஷாப், பிராந்தி கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 60 முதல் 100 கடைகள் வரை திறக்கப்பட்டன.

கள் ஒரு லிட்டர் ஒரு ரூபாய்க்கும், சாராயம் ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கும் விற்க விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பீர் 5 ரூபாய்க்கும், மற்ற மது வகைகள் ரூ.26 முதல் ரூ.55 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. கடைகளை இரவு 10 மணிக்கு மூடிவிடவேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது.ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை ஆகிய ஆறு முதல்வர்கள், மதுவாசனையை அரசாங்கம் மூலம் தமிழக இளைஞர்களுக்குக் காட்டாமல் இருந்தார்கள். தமிழ்நாட்டில் சுமார் 23 ஆண்டு காலம் அமலில் இருந்த மது விலக்கு 1971 ஆகஸ்டு மாதம் தி.மு.க. ஆட்சியின்போதுதான் ரத்து செய்யப்பட்டது. 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர பெரும்பாலான காலங்களில் தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. அதாவது 2001 வரையிலான சுமார் 68 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் மட்டுமே மதுவிற்பனை தமிழகத்தில் தாராளமாக இருந்திருக்கிறது. இந்நிலைக்கு சாவுமணி அடித்தது, எம்.ஜி.ராமசந்திரன் முதல்வராக இருந்தபோது 1983-ல் டாஸ்மாக் நிறுவனம் துவங்கியபோது தான்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) 1983-ல் எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான அதிமுக அரசால் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் -1956 இன்படி இந்நிறுவனம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. ஆளும்கட்சிக்கு வற்றாத வளம் தரும் காமதேனுவாக டாஸ்மாக் உணரப்பட்டது அக்காலத்தில் தான். ‘பாக்கெட் சாராயம்’ எனப்படும் மிக மோசமான வஸ்து தமிழகத்தில் ஆறாக ஓடியதும் அக்காலத்தில் தான். எனினும் 1987- மீண்டும் மதுவிலக்கு வந்து- தமிழகப் பெண்களின் நெஞ்சில் பால் வார்த்தது.

2001-ல் அதிமுக ஆட்சியின்போது மீண்டும் மதுவிலக்கு கொள்கை தூக்கி எறியப்பட்டது. மதுவிலக்கால் கள்ளச் சாராயம் பெருகுவதாகக் கூறி அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா மதுவிலக்கைத் தளர்த்தினார். அது இன்று பூதாகரமாகி அரசையே இயக்கும் அளவுக்கு பிரமாண்டமாகி இருக்கிறது.

இதில் வேடிக்கை என்னன்னா டாஸ்மாக் துவங்கியபோது (1983), கள்ளச்சாராயத்தைத் தடுத்து மது விற்பனையை முறைப்படுத்துவதே அதன் இலக்காக இருந்தது. அதுவே 2003-ல் மாநிலத்தின் ஒரே அதிகாரப்பூர்வ மது விற்பனை நிறுவனமாக மாற்றப்பட்டது. 2001-ல் மதுவிற்பனையை முறைப்படுத்த டாஸ்மாக் முயன்றபோது மது வர்த்தகத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் நடத்திய கூட்டணி ஏலமுறையால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அப்போதுதான் டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக மது விற்பனையில் இறங்குவது என்று அரசு முடிவெடுத்தது. அக்டோபர் 2003- இல் ‘தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம்- 1937’இல் திருத்தம் செய்ததன் மூலம், டாஸ்மாக்கிற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோக தனியுரிமை அளிக்கப்பட்டது.

அப்போது இதனை கடுமையாக எதிர்த்த திமுக, 2006-ல் தான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, டாஸ்மாக் வருவாயைக் கருத்தில் கொண்டு முந்தைய அரசின் கொள்கையையே தொடரத் தீர்மானித்தது. மது வியாபாரத்தில் மட்டுமே இவ்விரு கட்சிகளிடையே நல்லிணக்கம் காணப்பட்டது.

2013-14 நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் ரூ. 23,401 கோடி. இது முந்தைய ஆண்டைவிட ரூ. 1,721 கோடி அதிகம். மதுப் பயன்பாடு அதிகரிப்பு, மதுவகைகளின் விலையேற்றம் ஆகிய காரணங்களால் வருமாண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

நம்ம தமிழ்நாட்டில் மது விலக்குக்காக ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திலேயே -அதாவது1886-ல் மதராஸ் அப்காரி சட்டம் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதா?. அப்காரி என்ற சொல்லுக்குப் போதை ஊட்டும் பானங்களையோ மருந்துகளையோ தயாரிப்பது அல்லது விற்பது என்பது பொருளாகும். இச்சொல், பெர்ஷிய மொழிச் சொல்லாகும். இந்தச் சொல்லுக்கு இன்னொரு பொருள் மதுபானம் மற்றும் மருந்துகள் தயாரிப்பது அல்லது விற்பதற்கு விதிக்கப்படும் வரி என்பதாகும்.

மதராஸ் அப்காரி சட்டம், 1905, 1913, 1929 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு, அதன் பின்னால் ஒரு புதுச் சட்டமாக 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் முதல் நோக்கம் என்னவென்றால், போதையூட்டும் பானங்களையும், மருந்துகளையும் தயாரிப்பது, விற்பது மற்றும் அருந்துவது ஆகிய அனைத்தையும் தடை செய்வதாகும். ஆனால் பின்னாளில், மதுபானங்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் அருந்துதலை ஒழுங்குபடுத்தும் சட்டமாக இது மாற்றப்பட்டுவிட்டது.

1947-ல், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 26.1.1950-ல் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அதில் மருத்துவத் தேவையைத் தவிர மற்ற எந்தக் காரணத்துக்காகவும் மது அருந்துவதைத் தடை செய்வதற்கு எல்லா மாநிலங்களும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்னும் உறுதிப்பாடு, பிரிவு 47-ல் கொண்டுவரப்பட்டது. இது ஏட்டளவில் நின்றுபோய், பெருவாரியான மாநிலங்கள் மது விலக்கைத் தளர்த்தி, குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளை உடல் மற்றும் மனவளம் குன்றியவர்களாக ஆக்கிவிட்டது. கடந்த 67 ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் பல மாநிலங்கள் மது விற்பனையால் வரும் வருமானத்தைக்கொண்டே மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதாகக் கூறுகின்றன.

தமிழ்நாட்டில்  இன்று ஒரு இடத்திற்கு வழி சொல்லவேண்டுமென்றால் கூட கூட டாஸ்மாக் கடைக்கு எதிர் தெரு , பக்கத்துக்கு தெரு என்றுதான் பதில் சொல்லவேண்டியுள்ளது . இந்த அளவுக்கு பெருகியுள்ள டாஸ்மாக் கடைகள் பலரோடு வாழ்க்கையில் பின்னி பிணைந்து விட்டது என்றே சொல்லலாம் . ஆனால் இது தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஆய்வுகள் வெளிவருவது மிக மிக அரிதாக உள்ளது . பல சமூக பிரச்சனைகளை பற்றி ஆராய்ந்து வெளியே தகவல் கொண்டு வரும் தமிழக பல்கலைக்கழகங்கள் அனைவரும் இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பது ஆச்சரியத்தையும் , அதிர்ச்சியையும் தருகிறது .

அரசாங்கங்களுக்கு மதுவினால் வரும் வருமானம் முக்கியமானதாக கருதப்படுகிறது . ஆனால் பொருளாத ரீதியாக மக்களுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படுகின்றது தங்கள் கணவர் குடிப்பதற்காக ஒவ்வொரு முறையும் எவ்வளவு செலவழிப்பார் என்று கேட்டோம் . அவர்கள் அளித்த பதில்களை அவரவர் குடிப்பதற்கேற்ப பெருக்கி பார்த்தோமேயானால் சராசரி ஒரு குடிமகன் மாதம் ரூ 4312 மதுவிற்காக செலவிடுகிறார் . தினமும் குடிப்பவர்கள் கிட்டத்தட்ட ரூ 6552 மாதத்திற்கு செலவிடுகிறார்கள்.இது கிட்டத்தட்ட அவர்களது ஓட்டுமொத்த மாத வருமானத்திற்கு சமமானதாகும் .நாம் இதை தமிழ்நாட்டிற்கு என்று பார்த்தோமேயானால் ,1 கோடி குடிப்பழக்கம் உள்ள ஆண்கள் கிட்டத்தட்ட ரூ 44,769 கோடி மதுவிற்காக செலவு செய்கிறார்கள் .

முக்கியமாக குடிக்கு அடிமையானவர்கள் காலையிலேயே குடிப்பதால் அவர்கள் வேலையில் பெரிதும் இழப்பு ஏற்பட்டுள்ளது . கிட்டத்தட்ட 34 சதவீதம் பெண்கள் தங்கள் கணவர் குடிப்பதால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள் . சராசரியாக இந்த 34 சதவீத வீடுகளில் ஒரு மாதத்திற்கு 14 நாட்கள் அவர்கள் கணவர் குடித்துவிட்டு வேலைக்கு செல்வதில்லை என்றும் தெரிவித்தனர் . ஒரு நாள் கூலி ரூ 400 என்று எடுத்துக் கொண்டு நாம் தமிழ்நாட்டு அளவில் பார்த்தோம்னா மதுவினால் ஏற்படும் வேலை இழப்பால் ஒரு வருடத்திற்கு மக்கள் இழக்கும் பணம் ரூ 20,570 கோடி ஆகும் . பொருளாதார ரீதியாக தினமும் குடிப்பவர்களுக்கு டாஸ்மாக் என்பது ஒரு மிகப் பெரிய வறுமையை உண்டாக்கும் திட்டமாகும். தமிழகத்தில் மொத்தம் குடிப்பவர்கள் 1 கோடியே 32 லட்சம் பேர் iii எப்பொழுதாவது குடிப்பவர்கள் 848072 பேர் வாரத்திற்கு 1-2 நாட்கள் குடிப்பவர்கள் 3190365 தினமும் குடிப்பவர்கள் 6985496 பேர் வாரத்திற்கு 3–4 நாட்கள் குடிப்பவர்கள் 2221140 பேர்.- மேலும் 83 சதவீதம் பெண்கள் தங்கள் கணவர் குடிப்பது கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்பதை தெரிவித்துள்ளனர் . மற்றும் 52 சதவீதம் பெண்கள் தங்கள் கணவர் கடந்த 10 ஆண்டுகளில் தான் குடிக்கவே ஆரம்பித்தார் என்றும் தெரிவித்துள்ளனர் .

2000 ம் வருடத்தில் வெறும் 4000 மது கடைகள் மட்டுமே தமிழகத்தில் இருந்தது . அது இப்பொழுது 7000 கடைகளாக அதிகரித்து உள்ளது . மது எளிதாக கிடைப்பதற்கும் மக்கள் குடிக்கு அடிமை ஆவதற்கும் ஒரு ஆழ்ந்த சம்பந்தம் இருப்பதாக உலகில் பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன .

டாஸ்மாக்கினால் ஏற்படும் சுகாதார செலவுகள் குடியினால் ஒருவருக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படலாம் . அதேபோல் குடித்துவிட்டு ஏற்படும் விபத்துகளை நாம் கண்கூடாக பார்க்கிறோம் . 26 சதவீதம் பெண்கள் தங்கள் கணவருக்கு கடந்த பத்து ஆண்டுகளில் குடியினால் உடல் நல பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளனர் . கடந்த 1 ஆண்டில் மட்டும் பார்த்தோமேயானால் 4.4 சதவீதம் பெண்கள் தங்கள் கணவருக்கு உடல் நல சீர்கேடு ஏற்பட்டதாகவும் , 2.8 சதவீதம் பெண்கள் தங்கள் கணவருக்கு விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர் .அரசாங்கங்களுக்கு மதுவினால் வரும் வருமானம் முக்கியமானதாக கருதப்படுகிறது . ஆனால் பொருளாத ரீதியாக மக்களுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படுகின்றது தங்கள் கணவர் குடிப்பதற்காக ஒவ்வொரு முறையும் எவ்வளவு செலவழிப்பார் என்று கேட்டோம் . அவர்கள் அளித்த பதில்களை அவரவர் குடிப்பதற்கேற்ப பெருக்கி பார்த்தோமேயானால் சராசரி ஒரு குடிமகன் மாதம் ரூ 4312 மதுவிற்காக செலவிடுகிறார் . தினமும் குடிப்பவர்கள் கிட்டத்தட்ட ரூ 6552 மாதத்திற்கு செலவிடுகிறார்கள்.இது கிட்டத்தட்ட அவர்களது ஓட்டுமொத்த மாத வருமானத்திற்கு சமமானதாகும்

சராசரியாக உடல் நல சீர்கேடுக்கு ரூ 34,775 செலவழித்ததாகவும் , விபத்துகளுக்கு ரூ 2100 செலவழித்ததாகவும் ஆய்வில் தெரிய வருகிறது . கடந்த ஒரு ஆண்டில் – சுகாதார செலவு ரூ 2100 கோடி இதை வைத்து நாம் தமிழகம் முழுவதற்கும் கணக்கு செய்தால் , கிட்டத்தட்ட 5.8 இலட்சம் பேருக்கு உடல் பிரச்சனையும் , 3.7 இலட்சம் பேருக்கு விபத்துகளும் நேர்ந்திருக்கக் கூடும் . இதனால் கடந்த 1 ஆண்டில் மக்கள் செலவு செய்த பணம் கிட்டத்தட்ட ரூ 2100 கோடி ஆகும் . ஒட்டு மொத்தமாக , மதுவிற்காக செலவழிப்பது ( ரூ 44769 கோடி ) மதுவினால் ஏற்படும் வேலை இழப்பினால் ஏற்படும் இழப்பு ( ரூ 20574 கோடி ) , மருத்துவ செலவு ( ரூ 2100 கோடி ) என்று இந்த மூன்றையும் சேர்த்து பார்த்தால் , தமிழக மக்கள் கிட்டத்தட்ட 67,444 கோடி இழக்கிறார்கள் . ஒரு சில வீடுகளில் மதுவினால் இறந்த ஆண்களினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளையும் , மற்ற செலவுகளையும் சேர்க்கவில்லை . அவற்றை சேர்த்தால் மேலும் உயரும் .

ஒரு சிலர் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பார்கள் , ஒரு சிலர் அது சாத்தியம் இல்லை என்பார்கள் . கடைகள் பக்கத்தில் இருந்தால் , மக்களின் குடிப்பழக்கம் அதிகரிப்பது இந்த ஆய்வில் தெளிவாக வெளிவந்துள்ளது . திருந்த நினைப்பவர்களில் 74 சதவீதம் பேர் சீர்திருத்த பள்ளிக்கு சென்ற பின்பும் மீண்டும் மதுவிற்கு அடிமையாவது கவலைக்குரிய ஒன்று . அரசாங்கம் இதில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும் .  ஒட்டுமொத்தத்தில் டாஸ்மாக் அரசாங்காத்தின் ஒரு மிகப் பெரிய வறுமை உண்டாக்கும் திட்டமாகவும் , தமிழ்நாட்டின் பேரிடராகவும் உள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜனநாயக முறைப்படி மக்களின் கருத்துக்களை ஏற்று அரசாங்கம் செயல்படவேண்டும் .எனவே அரசு குறைந்தபட்சம் முதல் கட்டமாக கடைகளை படிப்படியாக குறைப்பது மிக மிக அவசியம் .

Related posts:

பேட்டரியை விட 30 மடங்கு அதிகம் சேமிக்கும் மின்கருவி ! லண்டன் விஞ்ஞானிகள் சாதனை !!
ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியவர்கள் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ?
முறையான முதலீடுகளை செய்திருந்தால் 9 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் !
ஆசஸ் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு சந்தைகளில் அதன் கால்தடத்தை பலப்படுத்துகிறது
உத்தர பிரதேச காவல்துறை வன்முறை ! அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்!
சீனாவை விட்டு வெளியேறும் பெரிய நிறுவனங்கள்! ஜப்பான் நிவாரண நிதி !!
ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரி வசூலிக்க மத்திய அரசு திட்டம்..!
ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!