நிர்பயா நிதி ஏன்?அரசுக்கு அக்கறையில்லையா?

மத்திய அரசு ஒதுக்கிய நிர்பயா நிதியில் 10 சதவிகிதத்தை மட்டுமே தமிழக அரசு பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான பதில் மனுவையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. என்ன நடந்தது?

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்துக்குப் பிறகு பெண்களின் பாதுகாப்புக்காக சில திட்டங்களை இந்திய அரசு அமல்படுத்தியது.

அதன்படி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் `நிர்பயா நிதி’ என்ற ஒன்றை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்தார். `இந்த நிதியை பெண்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிர்பயா நிதி தொடர்பாக சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஏ.பி.சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ` கடந்த நான்காண்டுகளில் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிர்பயா நிதியான 300 கோடி ரூபாயில் 6 கோடியை மட்டுமே செலவழித்துள்ளனர். எனவே, தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ` நிர்பயா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தற்போது இருப்பில் உள்ள தொகை எவ்வளவு, ஒதுக்கப்பட்ட தொகைக்கான செலவினம் என்ன, நிர்பயா நிதியை முழுமையாகப் பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்த அறிக்கையாக நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உள்துறை பதில் மனுவைத் தாக்கல் செய்தது.

அதில், `20.11.2018 தேதியிட்ட அரசாணையின்படி 425.06 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தில் 353.69 கோடி விடுவிக்கப்பட்டுவிட்டது. இதில், 45.86 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகர காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட 154 கோடியில் 18.54 கோடி செலவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 185 கோடியில் 26 கோடி செலவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், சமூக நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 12 கோடியில் 1.3 கோடிக்கும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்துக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 72 கோடியில் நிதியில் 27 கோடி விடுவிக்கப்பட்டாலும் எந்த செலவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, `பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றத் தடுப்புக்காக 2,99,50,000 ரூபாயை மத்திய உள்துறை அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு ஒதுக்கியது. இந்தப் பணத்தில் சைபர் கிரைம் தடயவியல் ஆய்வகம் மற்றும் பயிற்சி மையத்துக்காக ரூ. 46,80,136 செலவிடப்பட்டதாகவும் மீதமுள்ள தொகை 2020-21 நிதியாண்டில் பயன்படுத்தப்பட உள்ளது’ என அரசு தெரிவித்துள்ளது.

`மகளிர் ஹெல்ப் டெஸ்க் சேவைக்காக 8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 800 காவல்நிலையங்களில் மகளிர் உதவி மையங்களுக்காக தலா 1 லட்சம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 800 லேப்டாப்களும் 800 இரு சக்கர வாகனங்களும் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டன. இந்தப் பணத்தில் 5 கோடியே 8 லட்ச ரூபாய் பயன்படுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகையானது, வரும் நிதியாண்டில் (2020-21) பயன்படுத்தப்பட உள்ளது.

மனிதக் கடத்தலைத் (Anti human trafficking) தடுக்கும் வகையில் 13 புதிய யூனிட்டுகளைத் தொடங்கவும் ஏற்கெனவே உள்ள 19 யூனிட்டுகளை வலுப்படுத்தவும் ரூ.3,95,00000 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்தப் பணத்தில் 33,58,960 ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதவிர, டி.என்.ஏ மையங்களை மேம்படுத்துவது, மகிளிர் காவல்நிலைய தன்னார்வலர்கள் திட்டம் என விவரங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

“ இதனை மொத்தமாகக் கணக்கிட்டால் 10.7 சதவிகிதம் என்ற அளவுக்கு மட்டுமே நிர்பயா நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்துவதில் முறையான டெண்டர், தணிக்கை, கண்காணிப்பு போன்றவை துல்லியமாக இருப்பதால் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், அரசு அதிகாரிகள் இதில் போதிய ஆர்வம் செலுத்தவில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைப்பதே பெரிய விஷயம். அதுவும் 100 சதவிகிதம் கொடுக்கப்பட்ட நிதியில் இவ்வளவு மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்ததுதான் வேதனையாக உள்ளது” என்கிறார் வழக்கு தொடர்ந்த ஏ.பி.சூர்யபிரகாசம்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முதல் தவணையாக நான்காயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் நிர்பயா நிதி பயன்பாடு தொடர்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, `இந்த நிதியை மோசமாகப் பயன்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று’ என்பதைக் குறிப்பிட்டுவிட்டு, `நாங்கள் ஒதுக்கிய 400 கோடியில் வெறும் 6 கோடியைத் தான் செலவழித்துள்ளனர்’ என வெளிப்படையாகவே தெரிவித்தார்.

இந்தத் தகவல் பெரிதும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தமிழ்நாட்டில் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் வருவதில் நிறைய தயக்கம் உள்ளது. `ஏற்கெனவே மானம் போய்விட்டது. இதில் செலவு செய்து வழக்கை நடத்த வேண்டுமா?’ என்ற மனநிலையில் உள்ளவர்கள் அதிகம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலரும் விவகாரத்தை மூடி மறைக்கவே விரும்புகின்றனர். இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தின் மூலம் சட்டமாகவே கொண்டு வந்தது” என்கிறார்.

மேலும், “ ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் அந்தப் பெண்ணுக்கு 7.5 லட்ச ரூபாயை குறைந்தபட்ச இழப்பீடாக அளிக்க வேண்டும். அதே பெண் பட்டியல் சமூகம் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், `நிர்பயா நிதியில் 2,000 கோடி ரூபாய் வரையில் பணம் இருந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியாக இழப்பீடு வழங்குவதில்லை’ எனக் கடந்த வருடம் மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் சாடியது.

நிர்பயா நிதியின் மூலம் காவல்நிலையங்களில் சி.சி.டி.வி பொருத்துவது, இருட்டில்லாத பகுதியாக தெருவை வைத்துக் கொள்வது, பாலியல் வன்கொடுமை வழக்குகளைக் கையாள்பவர்களுக்கு நிபுணத்துவம் கொடுக்கும் பயிற்சிகள், அலுவலகம், போக்குவரத்து வசதிகள், பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி ஆகியற்றை உறுதி செய்வது அடிப்படை நோக்கமாக இருக்கிறது.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண்களை மனரீதியாக தயார்படுத்துவதன் மூலம் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர முடியும். இதனை செயல்படுத்துவதில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை.

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகச் சொல்வதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நிர்பயா நிதி முழுமையாக சென்று சேர வேண்டும். இங்கு பணம் நிறைய உள்ளது, திட்டங்களும் உள்ளன். ஆனால், அதிகாரிகளுக்கு செயல்படுத்தும் எண்ணம் இல்லை. வெறும் திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக மட்டுமே நிதியை செலவு செய்துள்ளனர்” என்கிறார்.

“ பாலியல் கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை கிடைத்தால்தான் குற்றச் செயல்கள் குறையும். பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நடந்து 2 வருடங்கள் கடந்துவிட்டன. நாகர்கோயிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் 20 பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகத் தகவல் வெளியானது. தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. ஒரே வாரத்தில்கூட ஒரு வழக்கை முடிக்கலாம். கோடை விடுமுறைக்கு நிர்பயா நிதி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அதன்பிறகு பாலியல் வழக்குகளில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் உள்பட பலவற்றை ஆராய்ந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது” என்கிறார்.

`நிர்பயா நிதியை பயன்படுத்தாமல் இருந்தது ஏன்?’ என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். “ பெண்களின் நலனுக்காக இந்த அரசு கூடுதலாக செலவு செய்துள்ளது. மகளிர் காவல்நிலையம் கொண்டு வந்ததும் அ.தி.மு.க அரசுதான். காவலர் தேர்வுகளில் 30 சதவிகித பெண் காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்ததும் இந்த அரசுதான்.

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காகத்தான் அம்மா ரோந்து வாகனங்கள் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகத்தான் `காவலன் செயலி’யை கொண்டு வந்தனர். இந்தத் திட்டம் பெண்களுக்கு பெருமளவில் கை கொடுக்கிறது. பெருநகரங்களை சி.சி.டி.வி கண்காணிப்புக்குள் கொண்டு வந்துவிட்டனர்” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “ பெண்களுக்குப் பாதுகாப்பான பெருநகரங்களாக சென்னையும் கோவையும் இருக்கின்றன. இதேபோன்ற திட்டங்களை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் வேலைகள் நடக்கின்றன. நிர்பயா நிதியை செலவழிக்காமல் இருந்திருக்க வேறு சில காரணங்களும் உள்ளன. காவல்துறைக்கு அரசு ஒதுக்கிய நிதியின் மூலம் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கலாம். அதேபோல், ஹெல்ப்லைன் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் நிர்பயா நிதியை கூடுதலாகச் செலவிடுவதற்கு வாய்ப்புள்ளது. இதற்காக பெண்களின் பாதுகாப்பில் குளறுபடியா எனக் கூறுவதற்கு ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை” என்கிறார்.

மேலும், “ மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக முதல்வர் தனிக்கவனம் எடுத்து வந்தார். கூடுதலாக மகளிர் நீதிமன்றங்களை அமைக்கவும் முயற்சி எடுத்தார். காவல்துறையில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புக்காக தனிப்பிரிவே ஏற்படுத்தப்பட்டது. பெண்களின் பாதுகாப்புக்கு எந்த இடத்திலும் இந்த அரசு குறை வைக்கவில்லை. நிர்பயா நிதியை குறைவாக பயன்படுத்தியதற்காகவே, பெண்களின் பாதுகாப்பில் இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை எனக் கூறுவது முற்றிலும் தவறானது” என்கிறார்.