சிவசங்கர் பாபா மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

சிவசங்கரன் என்கிற சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ ராமராஜ்யா என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவரின் இயற்பெயர் சிவசங்கரன். 72 வயதான இவர், கடந்த 20 ஆண்டுகளாக கேளம்பாகத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சமூகவலைத்தளங்களில் சிவசங்கர் பாபா மீது அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் புகார்களைக் கூறியிருந்தனர். இதையடுத்து மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் சார்பில் சிவசங்கர்பாபா, பள்ளி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியது.

சிவசங்கர் பாபாவுக்கு உடல் நலம் சரியில்லை என ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள் ஆணையத்தில் ஆஜராகினர். இந்தநிலையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 மாணவிகள் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி இன்று உத்தரவிட்டார். மாமல்லபுரம் போலீஸார் பதிவு செய்திருந்த இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கெனவே ஜூடோ மாஸ்டர் கெபிராஜ் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கும் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டிருந்தது. தற்போது சிவசங்கர் பாபா வழக்கும் சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டிருப்பதால் விசாரணை வேகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா உள்பட பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைகள் உரிமை ஆணையத்திடம் சிவசங்கர் பாபா, உடல் நலம் சரியில்லாததால் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான மருத்துவ சான்றிதழை ஆணையத்திடம் சிவசங்கர் பாபாவின் வழக்கறிஞர் சமர்பித்தார். இந்த வழக்கில் ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டியதிருப்பதாலும் வெளி மாநிலத்துக்குச் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்பதாலும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார் பதிவு செய்திருக்கும் FIR மற்றும் ஆதாரங்கள் சிபிசிஐடி போலீஸாருக்கு வந்தவுடன் விசாரணை தொடங்கும். இதற்கிடையில் சிவசங்கர் பாபா வழக்கை விசாரிக்க சிபிசிஐடியில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றார். சிவசங்கர் பாபா மீது சமூகவலைத்தளங்களில் வெளியான புகார், ஆடியோ அடிப்படையில் நடந்த விசாரணையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது சிவசங்கர் பாபாவின் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.