மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த படிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் !

மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த படிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஹரியானாவில் செயல்பட்டுவருகிறது. இப் பல்கலைக்கழகம் 1997ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவரான அப்துல்கலாம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. சுருக்கமாக NBRC என்று சொல்லப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்துஸ்துடன் செயல்படும் National Brain Research Centre மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது.

இப்பல்கலைக்கழகம் ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, ஃப்ரான்ஸ் என சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சர்வதேசத் தரத்திலான மூளை நரம்பியல் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் முதுகலைப் படிப்புகளை வழங்கிவருகிறது. இக்கல்விநிறுவனத்தில் 2020ம் கல்வி ஆண்டுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்

இரண்டு வருட கால அளவிலான M.Sc. (Neuroscience) மற்றும் மூளை நரம்பியல் சார்ந்த ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. முதுகலை படிப்பவர்கள் விரும்பினால் தொடர்ந்து ஒருங்கிணைந்த முனைவர் படிப்பும் படிக்கலாம்.

தேவையான கல்வித் தகுதி

ஆராய்ச்சிப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் Life Sciences/Physics/Chemistry/Mathematics/Statistics /Computer applications/Pharmacy/Veterinary Science/Psychology போன்ற ஏதேனும் ஒரு துறையில் 55% மதிப்பெண்களோடு முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். M.Sc. (Neuroscience) படிப்புகளுக்கு Engineering / Technology/Medicine உட்பட மேற்கூறிய ஏதேனும் ஒரு துறையில் 55% தேர்ச்சியுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. கடைசி வருடப் பட்டப்படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு JGEEBILS-2019/GATE-2019/GATE-2020/JEST -2020/CSIR / UGC/DBT/ICMR போன்ற தேசிய நுழைவுத்தேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதுகலைப் படிப்புகளுக்கு JGEEBILS- 2019 நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

உதவித்தொகை

ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் 31 ஆயிரம் வீதம் முதல் இரண்டு ஆண்டுகளும், மாதம் 35 ஆயிரம் வீதம் அடுத்தடுத்த ஆண்டுகளும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். முதுகலை மாணவர்களுக்கு மாதம் 12 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.nbrc.ac.in/html/admissions/index.html என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 31.3.2020. மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.nbrc.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.