வேண்டாம் மனப்பாடம்; வேண்டும் முன்னேற்றம்!

இன்றைக்கு பெரும்பாலான மாணவர்களிடம், ஆராய்ச்சி ஆர்வம் வெகு குறைவாக காணப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பை முடித்தவுடன் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டுவதில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்!

வளர்ந்த நாடுகளில் பின்பற்றுப்படுவது போன்று, நாம் செயல்முறை வடிவிலான பாடத்திட்டத்திற்கு முன்னேற வேண்டும். இதற்கு, நமது பல்கலைக்கழகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களைப் பெற்றவர்களாக, இன்றைய மாணவர்களால் பிரகாசிக்க முடியும்.

கல்லூரிகளும், ஒவ்வொரு துறையிலும் சிறந்த விளங்கும் தொழில் வல்லுனர்களை, தங்கள் கல்வி நிறுவனத்திற்கு அவ்வப்போது அழைத்துவந்து, மாணவர்களிடம் கலந்துரையாடச் செய்ய வேண்டும். அப்போதுதான், தொழில் நிறுவனங்கள், பணியாளர்களிடம் எதிர்பார்க்கும் திறன்கள் எவை? என்பதை மாணவர்களால் புரிந்து கொண்டு, அதற்கேட்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இதற்கு ஏதுவாக, அனைத்து கல்லூரிகளும், முடிந்தவரை தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

திறன் வளர்ப்பு மற்றும் பாடத்திட்டம் போதிப்பு ஆகியவற்றோடு கல்வி நிறுவனத்தின் கடமை முடிந்து விடுவதில்லை; ஒழுக்கமுள்ள மாணவர்களை இந்த சமுதாயத்திற்கு தருவதும் கல்வி நிறுவனங்களின் கடமை தான். சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்திலும் முக்கிய பங்காற்றுபவர்களாக, மாணவர்களை உருவாக்க வேண்டும்.

பொதுத்தேர்வில், மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைக்கும் நோக்கில் மட்டுமே, இன்று பெரும்பாலான பள்ளிகள் செயல்படுகின்றன. இதனால், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பிலும், பிளஸ் 2 பாடத்திட்டமே கற்பிக்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தையும் புரிந்து படிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், பாடப்புத்தகங்களை அப்படியே மனப்பாடம் செய்வதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. மனப்பாடம் செய்தவற்றை தேர்வில் கொட்டிவிடும் பழக்கத்தையே மாணவர்களும் பின்பற்றுகின்றனர்.

இதனால், பள்ளி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும், கல்லூரி ‘செமஸ்டர்’ தேர்வுகளில் ‘அரியர்’ வைக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, கணிதப்பாடத்தில் இன்றைய மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை காணமுடிகிறது! அத்தகைய மாணவர்களுக்கு கற்பிக்க, கல்லூரிகள் போராடுகின்றன. எனவே, இன்றைய பள்ளிப் பாடத்திட்டமும், கற்பிக்கும் முறையும் மேம்பட வேண்டியது அவசியம்.

அதுவரை, கல்லூரிகளில் சேருவதற்கு முன்பு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ மூலம் தங்களது கணித அறிவை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.