சமூக விலகல் பயத்தை கொண்டு வந்து பயம் என்பது தினசரி பிரச்னைகளில் ஒன்றாகி விட்டது.?

கொரோனா’ வைரஸ் தொற்றால், சீனாவின் குறிப்பிட்ட பகுதி மக்கள் பாதிக்கப்படும் செய்தியை படித்த போது, இங்கு வரும் சீனர்கள், நமக்கும் இதை பரப்பி விடுவரோ என்ற சந்தேகம் இருந்தது. அடுத்த கட்டமாக, நம் நாட்டிலும், இதன் பாதிப்பு வரத் துவங்கியதும், எங்கே நமக்கும் வந்து விடுமோ என்ற பயம் வர ஆரம்பித்தது.உலகம் முழுதிலும் இதன் பாதிப்பால், ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாவதும், அதில், பலர் உயிர் இழப்பதையும் பார்த்த போது, பயம் இன்னும் அதிகமானது.
தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த போது, ‘இது ஏதோ வெளிநாட்டில் வந்த பிரச்னை இல்லை; என்னுடைய நாட்டில், எனக்கு வந்திருக்கும் பிரச்னை’ என்ற பயம், இன்னும் அதிகமானது.இதற்கும் ஒருபடி மேல் சென்று, ‘யாருடனும் நெருங்க கூடாது… வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, சமூக விலகல் ஒன்று தான் வழி’ என்று சொல்லி, அதை மிக தீவிரமாக செயல்படுத்த துவங்கியதும், இந்த விஷயத்தில் புது பரிமாணத்தை கொண்டு வந்து விட்டது.கொரோனா வைரஸ் குறித்து, முதலில் கேள்விப்பட்டதில்லை. சமூக விலகல் வரையிலும், ஒவ்வொரு கட்டத்திலும், ஒருவித பயத்தை கொண்டு வந்து, பயம் என்பது தினசரி பிரச்னைகளில் ஒன்றாகி விட்டது.

எங்கும் வெளியில் செல்வது கூடாது… வீட்டிலே இருக்க வேண்டும் என்ற சூழலில், இதுவரையில் வீட்டில் உள்ள அனைவரும், ஒருவர் மீது ஒருவர் அன்பாக, அக்கறையாக, மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு, வீட்டிலேயே இருப்பது என்பது பிரச்னை இல்லை.ஆனால், எல்லா நேரமும் சண்டை, சச்சரவு, பழைய விஷயங்களையே பேசி, மனஸ்தாபம் கொள்வது, 10 ஆண்டுகளுக்கு முன் மாமியார் சொன்னதை மறக்காமல், ‘உங்க அம்மா அன்று இப்படி பேசினாங்க… உங்க அப்பா இதை செய்றேன் சொல்லி, 15 வருஷம் ஆயிடுச்சி… இன்னும் செய்யவில்லை’ என்று இருக்கும் குடும்பங்களுக்கு, இந்த வீட்டிலேயே இருப்பது என்பது தான் பிரச்னையே!இது போன்ற குடும்பங்களில்,ஒருவருடன் மற்றவர்பேச ஆரம்பித்தாலே, மனதளவில் ஈடுபாடு, மகிழ்ச்சி இல்லாமல், ஏனோதானோவென்று பேசி, சில நிமிடங்களில் சண்டை, விவாதத்தை துவங்கி விடுகின்றனர்.இதனால் அதிகம் பாதிக்கப்படுவது, வெளியில் சென்று, தங்கள் நண்பர்களுடன் விளையாட முடியாமல், வீட்டிற்கு உள்ளேயே அடைப்பட்டு கிடக்கும் குழந்தைகள் தான்! அவர்களே ஒருவித மன அழுத்தத்தில் தான் இருக்கின்றனர்.குழந்தைகள் பள்ளிக்கு செல்வதே விளையாட்டு, தங்கள் வயதுடைய மற்ற குழந்தைகளுடன் பேசுவதற்கு… கடைசியாகச் படிப்பு இருக்கும். தற்போது உள்ள சூழலில், ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகள், இன்னும் அதிக பாதிப்பிற்கு ஆளாவர்.

பொதுவாக, வீட்டு வேலைகள் முழுவதையும் பெண்கள் தான் செய்வர்; மிக அபூர்வமாகவே ஆண்கள் செய்வர். தற்போது உள்ள சூழலில், வீட்டு வேலை செய்ய வழக்கமாக வருபவர்களை, கொரோனா தொற்று பயத்தில், வர வேண்டாம் என்று சொல்லி விட்டனர். எல்லா வேலைகளையும், வீட்டில் உள்ள பெண்கள் செய்ய வேண்டியுள்ளது.இது, மிக பெரிய மன அழுத்தத்திற்கு அவர்களை கொண்டு செல்வதுடன், ஒரு கட்டத்தில் வெறுப்பு வந்து விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காலை உணவு முடித்து, மதிய உணவு தயார் செய்ய வேண்டும். இடையிடையே மற்ற வீட்டு வேலைகளையும் பார்க்க வேண்டும். மதிய உணவிற்கு பின், அனைவரும் ஓய்வெடுத்து விட்டு, நான்கு மணிக்கு, காபி கேட்பர்.காபி குடித்து கப்புகளை கழுவி, மாலை சிற்றுண்டி செய்து முடிப்பதற்குள், இரவு உணவு தயாரிக்க வேண்டும். ஓய்வு இல்லாமல் காலை முதல் இரவு வரை, மாற்றி மாற்றி சமையல், வீட்டு வேலை என்று இருந்தால், மன அழுத்தம் வந்து விடும்.

இது போன்ற நிச்சயமற்ற சூழலில், பொருளாதாரம் பற்றிய சிந்தனையே இருக்கும். வேலைக்கு போகவில்லை; ஆனாலும் சம்பளம் வந்து விடும். வீட்டில் இருந்தே அலுவலக வேலை செய்கிறேன்… அதனால் ஊதியம் பிரச்னை இல்லை என்பவர்களுக்கு பரவாயில்லை. வேலைக்கு போனால் தான் சம்பளம் கிடைக்கும் என்பவர்களின் நிலை இன்னும் சிரமம்.யாராக இருந்தாலும், உலகமே தவிக்கும் நிலையிலும், விலைவாசி அதிகரித்தபடியே போகிறது. காய்கறி விலை, கொரோனாவிற்கு முன் இருந்ததை விட, 40 சதவீதம் அதிகரித்து விட்டது. விவசாயிகளிடம் கேட்டால், ‘கிலோ, 10 ரூபாய்க்கு தான் நாங்கள் வியாபாரிகளுக்கு தருகிறோம்…’ என்கின்றனர்.இப்படி ஒவ்வொன்றாக பார்த்தால், எவ்வளவு சிரமத்திலும் யாரோ ஒருவர், சூழலை பயன்படுத்தி, கொள்ளை அடிக்கின்றனர் என்பது வெறுப்பையும், கோபத்தையும் தரும்.

கடந்த சில நாட்களுக்கு முன், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சமூக விலகளால், மன அழுத்தம் உட்பட, பல மனநல பிரச்னைகள் வரலாம்’ என எச்சரித்தது. இதில் முக்கியமானது மன அழுத்தம். ‘டிவி’யில் செய்திகள் பார்க்கிறோம்.ஒவ்வொரு நாட்டிலும், இவ்வளவு நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இவ்வளவு பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்து வருகிறது… உயிரிழப்பும் உள்ளது என்றவுடன், நமக்கும் வந்து விடுமோ என்ற யோசனை மனதில் தோன்றியது. மாறாக, செய்தியை கேட்டவுடன் இனம் புரியாத பயம் வந்து விடும்.மீண்டும் மீண்டும் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களால் பயந்தபடியே இருப்பவர்கள், ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதில்லை அது, கொரோனா தொற்றின் பாதிப்பு இருக்கும் வீட்டிற்கு செல்லும் சுகாதார பணியாளர்கள், அந்த பகுதியையே கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து, பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி, மற்றவர்களையும் வெளியில் வராமல் இருக்கும்படி, தொடர்ந்து கண்காணிக்கும் பணியை செய்கின்றனர்.இதை பார்க்கும் போது, நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க, அரசு எல்லா நடவடிக்கையும் எடுக்கிறது. நாம் இந்த அளவு பயப்பட வேண்டியதில்லை என்று புரியும். தேவையான எல்லா விஷயங்களையும், அரசு செய்து வருகிறது என்பதே பலருக்கும் தெரியவில்லை!

சமூக விலகல் காரணமாக, யாருடனும் சரியாக பேச முடியாமல், பழக முடியாமல் போனதால், மற்றவர்களிடம் ஏற்பட்ட இடைவெளி, மனசோர்வை ஏற்படுத்துகிறது. இதனால் பசியின்மை, துாக்கமின்மை, எந்நேரமும் ஏதோ ஒரு யோசனையில் இருப்பது என்று இருக்கின்றனர்.
எதிலும் ஆர்வம் இல்லாமல், ‘டிவி’ பார்க்காமல், மொபைல் போனில், நண்பர்களுடன் பேசாமல் இருப்பதும் இதில் சேரும்.

‘எதையாவது தொட்டால் கை கழுவுங்கள். வெளியில் போய் விட்டு வந்தா கை கழுவுங்க… ஹேன்ட்வாஷ், சோப்பு போட்டு, 20 வினாடிகள் கழுவுங்க’ என்று வலியுறுத்துகின்றனர். வெளியில் போய் விட்டு வந்தால், கை கழுவுவது இயல்பான விஷயம்.ஆனால், சிலர் இதையே வேலையாக, ஒவ்வொரு முறையும், 20 வினாடி கை கழுவுவது என, ஒரு நாளைக்கு, 200 முறை கழுவுவர். கை கழுவ சொன்னால், சிலர் குளித்து விட்டு வருவர். அதிகப்படியான பய உணர்வால், கை கழுவினாலும், கழுவிய திருப்தி அவ்வளவு எளிதில் வராது; அது வருகிற வரையிலும், திரும்ப அதையே செய்வர்.இதற்கு, ஓ.சி.டி., (அப்சசிவ் கம்பல்சிவ் டிசார்டர்) என்று பெயர். உடன் இருப்பவர்களுக்கு, இதை பார்த்து வெறுப்பு வரும். நேரம், தண்ணீர் செலவாகும்… ஒருவர் எப்போதும் பாத்ரூமிலேயே இருந்தால், மற்றவர்களுக்கு கோபம் வரும்.
வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்து வந்தால், அல்லது கடினமாக பேசினால், மீண்டும் முதலிலிருந்து கை கழுவ ஆரம்பித்து விடுவர். இப்படி, பாதிக்க கூடியது தான், ‘ஓ.சி.டி.,’ பிரச்னை. இவர்கள் மன நல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை கேட்டால், இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர உதவுவர்.
கொரோனா பற்றிய செய்தி கேட்டதும் பதற்றம் வந்தால், உடனடியாக, மூச்சை மெதுவாக ஏழு வினாடிகள் உள்ளிழுத்து, ஏழு வினாடிகள் வெளியில் விட வேண்டும். இதை தொடர்ந்து மூன்று நிமிடங்கள் செய்ய வேண்டும். அதிக பதற்றத்தில் இருந்தால், ஏழு நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
சாதாரணமாக, இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து முறை செய்யலாம். அதிக பதற்றம் இருப்பவர்கள், தேவையான நேரங்களில் செய்யலாம்.

பதற்றம் வந்தால் உடல் ரீதியாக, மன ரீதியாக என, இரண்டு விதங்களிலும் பிரதிபலிக்கும். இதய படபடப்பு, மூச்சு விடுவதில் சிரமம், வியர்ப்பது, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போவது போன்றவை, உடல் ரீதியில் வெளிப்படும் பிரச்னைகள். ஏழு நிமிட மூச்சு பயிற்சி செய்து முடித்த பின், தெளிவாக சிந்திக்க முடிகிற அளவிற்கு, மனதில் அமைதி ஏற்படும்.அதிக பதற்றத்தில் இருப்பவர்கள், அடிக்கடி செய்தி ஊடகங்களை பார்ப்பது, எங்கே எவ்வளவு பாதிப்பு என்று தெரிந்து கொள்வது, பதற்றத்தை தரும் விஷயங்களை, மற்றவர்களுடன் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக, பதற்றமாக பேசுபவர்களுடன், பேசுவதை தவிர்க்க வேண்டும். சிலர் பதற்றமாக பேசி, எதிரில் இருப்பவர்களை பதற்றமடைய செய்வர்; ஆனால், அவர்கள் பதற்றப்பட மாட்டார்கள். இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

மன அழுத்தத்தில் இருப்பவர்கள், தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். மொபைல் போனில் நண்பர்களுடன் பேசலாம். வெறுமனே இருக்காமல், பேப்பரை அடுக்கி வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, துணிகளை மடித்து வைப்பது என்று, ஏதாவது வேலை ஒன்றை செய்ய வேண்டும்.சிலர் பகலில் துாங்கியபடி இருப்பர்; இதை தவிர்க்க வேண்டும். இதனால், இரவில் துாக்கம் வராது. பகல் முழுதும் துாங்கி, இரவில் துாங்காமல் இருந்தால், மனப் பிரச்னை வரும். நள்ளிரவு அல்லது அதிகாலை என்று எப்போது வேண்டுமானாலும் துாங்கலாம் என, நினைக்கக் கூடாது.இப்படி இருந்தாலும், மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோன்று, மன அழுத்தம், கோபம் தரக்கூடிய விஷயங்களை சிந்திப்பது கூடாது. மனதிற்கு மகிழ்ச்சி தரும், அறிவை வளர்க்கும், மற்றவர்களை சந்தோஷப்படுத்தும் விஷயங்களை பேச, பழகிக் கொள்வது நல்லது.வாழ்க்கை இயல்பாக இருந்த போது, காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து, உடற்பயிற்சி செய்து, குளித்து, சமைத்து என்று ஒரு ஒழுங்கு முறை இருந்ததோ, அதே போன்ற ஒழுங்கை தற்போதும் கடைப்பிடிக்க வேண்டியது, மிக மிக அவசியம்.