இசையமைப்பாளர் போபோ சசி, இயக்குநர் யூகி பிரவீன், பாடகி அக்ஷிதா சுரேஷ், இனாரா புரொடக்ஷன்ஸ் கூட்டணியில் உருவான ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) சுயாதீன இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர் முரளி இசை ஆல்பத்தை வெளியிட, இசையமைப்பாளர் சி. சத்யா மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து பெற்றுக் கொண்டனர்.
திரையிசை பாடல்களுக்கு நிகரான வரவேற்பை தற்போது சுயாதீன இசைக்கலைஞர்கள் உருவாக்கும் இசை ஆல்பங்களுக்கும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் திரைப்பட இசையமைப்பாளரும், பிரபல இசைக்கலைஞருமான போபோ சசியின் இசையில் ‘Before I Fade Away’ இசை ஆல்பம் தயாராகி இருக்கிறது. இந்த இசை ஆல்பத்தை யூகி பிரவீண் இயக்க, அரவிந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனாரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் பத்மநாபன் இந்த இசை ஆல்பத்தை தயாரித்திருக்கிறார்.
இதன் புரோமோ காணொலி இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வரும் நிலையில் இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர்கள் முரளி, சி. சத்யா, ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ஹரி கிருஷ்ணன், பாடகர் ஹைடு கார்த்திக், ராப் பாடகி ஐ.கே.பெர்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் பத்மநாபன் பேசுகையில், ”யூகி பிரவீனை கடந்த ஓராண்டாக தெரியும். அவருடைய திறமைகளை பார்த்துக் கொண்டே இருந்தேன். ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்பதற்கு சாட்சியாக பிஃபோர் ஐ ஃபேட் அவே இசை ஆல்பத்தை உருவாகி இருக்கிறார். அவர் ஏற்கனவே திரைப்படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார். இப்படி அற்புதமான ஒரு பாடலை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எங்களுடைய நிறுவனத்தில் இரவு நேரத்தில் பணியாற்றிக் கொண்டே, பகல் பொழுதில் இந்த இசை ஆல்பத்தை உருவாக்கினார். படப்பிடிப்பின் போது கடினமான சூழலிலும் அவர் இயல்பாக அனைவரிடமும் பழகினார். இதற்காகவே நான் அவரை மனதார பாராட்டுகிறேன். இந்த ஆல்பத்தில் இடம்பெறும் பாடலை மட்டும் பாடாமல் ஆல்பத்தில் தோன்றி நடித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இளம் திறமைசாலிகளை வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
பாடகர்-பாடலாசிரியர்-நடிகர் ஹைடு கார்த்திக் பேசுகையில், ”தற்போது இசை உலகில் புதிய ராப்பர்கள் உருவாகி வருகிறார்கள். திரைப்படங்களுக்கு ராப்பர்கள் முழு பாடலையும் எழுதி, பாடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாணியை 2007ம் ஆண்டிலேயே இசையமைப்பாளர் போபோ சசி தொடங்கி வைத்தார். இங்கு வாழ்த்த வருகை தந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.
இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், ”எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த இசை ஆல்பத்தை தயாரித்த சுரேஷ் பத்மநாபனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாடலை பாடகி அக்ஷிதா சுரேஷ் மென்மையான குரலில் பாடிவிட்டு சென்றுவிட்டார். பிஃபோர் ஐ ஃபேட் அவே என்பதால் குரலில் அழுத்தமும் வேண்டும் என்று விரும்பினோம். அதற்காக அவரை மீண்டும் தொடர்பு கொண்டு வேற வெர்ஷனில் பாட இயலுமா? எனக் கேட்டோம். அவரும் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாடினார். அதற்காக தற்போது அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இசை ஆல்பம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
ராப் பாடகி ஐ.கே. பெர்ரி பேசுகையில், ”பிஃபோர் ஐ ஃபேட் அவே குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இசை ஆல்பம் அழகாக இருக்கிறது. பாடல், வி எஃப் எக்ஸ், இசை என இந்த ஆல்பத்தின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கின்றன. திரைப்பட பாடல்களுக்கு வழங்கி வரும் ஆதரவை போல் இதுபோன்ற சுயாதீன இசைக் கலைஞர்களின் பாடல்களுக்கும் தர வேண்டும். எங்களைப் போன்ற சுயாதீன இசைக் கலைஞர்களை வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
பாடகி அக்ஷிதா சுரேஷ் பேசுகையில், ”நான் மெலோடி சிங்கர். யூகி பிரவீண் என்னை தொடர்பு கொண்டு ராப் பாடலை பாட இயலுமா எனக் கேட்டார், நானும் முயற்சித்தேன். பாடல் பதிவின்போது ‘இப்படி அல்ல, இப்படி பாட வேண்டும்’ என்று யூகி பிரவீண் சொல்லிக் கொடுத்தார். அதன் பிறகு போபோ சசியும், யூகி பிரவினும் மீண்டும் அழைப்பு விடுத்து இந்த ராப் பாடலை இப்படி பாட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். அவர்களின் வழிகாட்டல் இல்லை என்றால் என்னால் இப்படி பாடியிருக்க இயலாது. என்னுடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்காக இந்த தருணத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பாடலுக்கானக் கதை யூகி பிரவீனுடையது, அவருடைய சிந்தனை, அவருடைய கற்பனை தான் இந்தப் பாடல். இந்த பாடலுக்காக அவருடன் செலவிட்ட தருணங்களில் தான் இதன் ஜீவனை புரிந்து கொள்ள முடிந்தது. அதை வெளிப்படுத்துவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் என்னைக் கவர்ந்தது. இந்தப் பாடலின் இடம்பெறும் அனைத்து நுட்பமான விஷயங்களுக்காக அவர் கடினமாக உழைத்தார். எங்களைப் போன்ற சுயாதீன இசைக்கலைஞர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆல்பத்திற்கும் உங்களது ஆதரவினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
பாடலாசிரியர்-ராப் பாடகர் -இயக்குநர் யூகி பிரவீன் பேசுகையில், ”இந்த இசை ஆல்பத்தில் ‘நான் நேத்திக்கு பேஞ்ச மழையில தான் இன்னைக்கு முளைச்ச காளான் இல்ல.. என் கதய படிச்சாக்கா கொழம்பி போய்டுவார் நோலன் கூட…’ என்று ஒரு வரி இடம் பிடித்திருக்கும்.
மெடிக்கல் பில்லிங் டிசைனர் ஆகவும் கிராஃபிக் டிசைனராகவும் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் சிறு வயதில் இருந்து இசைத்துறையில் மட்டும் தொடர்ந்து ஆர்வத்துடன் இயங்கி வருகிறேன். இதில் என்றைக்காவது வெற்றி பெற்றிட வேண்டும் என்ற இலக்கினையும் வைத்துக் கொண்டிருந்தேன். அதன் முதல் படி தான் இந்த இசை ஆல்பம். இந்த ஆல்பத்திற்காக 200 சதவீத உழைப்பை வழங்கியிருக்கிறேன். இதற்கு கடவுளின் ஆசி கிடைக்க வேண்டும்.
200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட கார்ப்பரேட் கலை நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனம் சார்பில் கலந்து கொண்டு ராப் பாடலை பாடி முதல் பரிசினை வென்றேன். இதற்காக தயாரிப்பாளர் சுரேஷ் பத்மநாபனை சந்தித்தபோதுதான் அவர் அக்ஷிதா சுரேஷும் நன்றாக பாடுவார் என சொன்னார். அப்படித்தான் எங்களுடைய அறிமுகம் நடைபெற்றது. கடந்த ஒரு வருடமாக நாங்கள் அனைவரும் குடும்பம் போல் இருந்து பணியாற்றி இந்த இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறோம். இவை அனைத்தும் கடவுளின் கிருபை தான்.
இதற்காக இசையமைத்த போபோ சசிக்கு நான் எவ்வளவு முறை நன்றிகள் சொன்னாலும் போதாது. என்னை முதன் முதலில் திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அப்போதெல்லாம் அதிகமாக கானா பாடல்களை தான் பாடிக் கொண்டிருப்பேன். அதற்குப் பிறகுதான் ராப் பாடல் மீது கவனம் திரும்பியது.
‘குளிர் 100’ படத்தில் ஹிப் ஹாப் பாடல்களை அறிமுகப்படுத்தியவர் போபோ சசி தான். அப்போதெல்லாம் திரைப்படங்களில் ராப் கிடையாது. அதன் பிறகு நான் ராப் இசையை பற்றி ஆராய்ச்சி செய்து பாடல்களை எழுதத் தொடங்கினேன். இதுவரை 8 ராப் பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 5 பாடல்களுக்கு போபோ சசி தான் இசையமைத்திருக்கிறார்.
இந்த ஆல்பத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல் இயல்பான, சாதாரணமான பாடல் கிடையாது. இது ஒரு கதையை சொல்கிறது. வாழ்க்கையில் ஒருவன் தோல்வி அடைகிறான். அதன் பிறகு எப்படி கற்றுக்கொண்டு வெற்றி பெறுகிறான் என்ற ஒரு முழு வாழ்வியலும் இந்தப் பாடலில் இடம் பிடித்திருக்கிறது. இது போன்ற இசை ஆல்பத்தில் கதை சொல்வதை தமிழில் நாங்கள் தான் முதன்முதலாக முயற்சி செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்ற திருக்குறளின் பொருள் என்னது நூறு சதவீத முயற்சி செய்தால் ஒருவனுடைய வெற்றிக்காக வெற்றி தேவதையே இறங்கி வரும். இதைத்தான் இந்தப் பாடலில் காட்சி மொழியாக விவரித்து இருக்கிறோம். இதற்காக உழைத்த தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் சி. சத்யா பேசுகையில், ”இந்த இளம் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், சரிகம நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண இசை ஆல்பங்களை போல் இல்லாமல் சர்வதேச தரத்தில் இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. இந்த இசை ஆல்பத்திற்கான வி எஃப் எக்ஸ், எடிட்டிங், ஒளிப்பதிவு ஆகியவை சிறப்பாக இருந்தன. இதற்காக இந்த குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இசை ஆல்பம் வெளியானப் பிறகும் இதனை விளம்பரப்படுத்துவது முக்கியம். அப்போதுதான் ரசிகர்களை சென்றடையும். இதற்காக தயாரிப்பாளரும், சரிகம நிறுவனமும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
போபோ சசியின் பாடல்களில் உள்ள ஹிப் ஹாப் இசையை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அந்த கலாச்சாரத்தை முழுமையாக தெரிந்து கொண்டு இசை அமைத்திருப்பார். இவரைப் போன்ற திறமையான இசையமைப்பாளருக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு தேவை.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா என்னுடைய இனிய நண்பர். தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் புதிய விஷயங்களை மேற்கொண்டு வருகிறார், இத்தகைய முயற்சிகள் அவசியமாக தேவைப்படும் காலம் இது.
பாடகி அக்ஷிதா சுரேஷ் தற்போது நான் இசையமைத்து வரும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்தப் பாடல் இன்னும் முழுமை அடையவில்லை. அந்த பாடலில் அவருடைய திறமை தெரிந்தது. அவர் இன்னும் பல உயரங்களை தொடுவார். அவருடைய குரல் தனித்துவமானது, நிறைய பாடல்களை பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ”நான் இளையராஜாவிடமும், அண்ணன் தேவாவிடமும் கீபோர்ட் பிளேயராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டுக்குச் சென்று, அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு விடுவேன். என் மகன் சசி அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் காலையில் என் அறையை திறந்தவுடன் என் கண்ணில் படும்படி ஒரு கடிதம் இருந்தது. அதில் ‘அன்புள்ள அப்பாவிற்கு, உங்கள் மகன் சசி எழுதிக் கொள்வது. எனக்கு இசை மீது ஆர்வம் உள்ளது. நீங்கள் இசை மீது வைத்திருக்கும் பக்தியும் ,அன்பும் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் என்னுடைய படிப்பிற்காக செலவழிப்பதில் பாதியை இசை கற்பதற்காக செலவழிக்க வேண்டும். அதற்காக இசைக்கருவியை வாங்கித் தாருங்கள். நாளைக்கு நானும் பெரிய இசையமைப்பாளராக வருவேன்,” என எழுதி இருந்தார், அதை இன்று நிரூபித்து விட்டார்.
அனைவரும் இசையமைப்பாளராக முடியும். ஆனால் இவனுடைய ஒலி அமைப்பு வித்தியாசமாக இருக்கும். ஓசைகளை எல்லாம் புதிதாக உருவாக்குவான். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த ஆல்பத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் நன்றாக இருக்கின்றன. இதற்காக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ”ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு போல் இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டை சாத்தியமாக்கி இருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் பத்மநாபனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இசை ஆல்பத்தின் இயக்குநர் யூகி பிரவீனுக்கும், வி எஃப் எக்ஸ் குழுவினருக்கும் வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கீபோர்ட் பிளேயராக மாறியதற்கு சித்தப்பா முரளி தான் காரணம். நான் இசையை முழுமையாக கற்கவில்லை. தேவா, சபேஷ்-முரளி அவர்களின் இசையமைக்கும் பாணியை பார்த்து தான் கற்றுக் கொண்டேன்.
பாடகி அக்ஷிதா சுரேசிற்கு ஆதரவு அளித்த அவரது குடும்பத்தினருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
போபோ சசி ஒரு பாடலுக்கு பயன்படுத்தும் சவுண்டிங் புதிதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும், கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும். என்னுடைய வெற்றிக்கு அவருடைய பங்களிப்பும் ஒரு காரணம் என்று சொல்வேன். அவரும் மிகப்பெரிய இசையமைப்பாளராக உயரத்திற்கு செ
