வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தாமதம்… ?

எலெக்ட்ரிக் வேகன் ஆர் கார் அறிமுகம் குறித்து மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்துள்ள தகவல் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகியவை ஏற்கனவே மின்சார கார்களை சந்தைக்கு கொண்டு வந்துவிட்டன. இதில், டாடா டிகோர் தனிநபர் பயன்பாட்டிற்கும் கிடைக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் கூட கடந்த ஜூலையில் முதல் மின்சார மாடலாக கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துவிட்டது.

சில மாதங்களுக்கு முன்பு வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் சாலை சோதனை ஓட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி பொது பார்வைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், மாறாக வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தில் மாருதி சுஸுகி புதிய முடிவை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி.பர்கவா பகிர்ந்துகொண்டுள்ள தகவலில், வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படாது. அடுத்த ஆண்டு இரண்டாவது கட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

நடைமுறை பயன்பாட்டுக்கு திருப்திகரமாக அமைந்தால் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும். அப்படி இருந்தாலும், அடுத்த ஆண்டு தனிநபர் பயன்பாட்டு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படாது. மேலும், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்குத்தான் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.இது தனிநபர் வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சந்தையிலேயே மிக குறைவான விலை மாடலாக மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் எதிர்பார்க்கப்பட்டது. வழக்கம்போல் எலெக்ட்ரிக் கார்களுக்கான குறைவான விலை பட்ஜெட் மார்க்கெட்டிலும் மாருதி சுஸுகி புதிய வேகன் ஆர் எலெக்ட்ரிக் மூலமாக குறிப்பிடத்தக்க அளவு சந்தையை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.