பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து மும்பையில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி தமிழகத்திற்கு வர உள்ளார்.

இவர்களின் பணி என்ன? இது குறித்து தான் விரிவாக இந்த பதிவில் பார்க்கப் போறோம்.

பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து மும்பையில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் வியூக வகுப்பாளரும் தமிழகத்திற்கு வர உள்ளார். திருச்சியை பூர்வீகமாக கொண்ட ஜான் ஆரோக்கியசாமி வெளிநாடுகளில் உயர் பதவிகளில் இருந்து விட்டு இப்போது ”பெர்சனா டிஜிட்” என்ற பெயரில் மும்பையில் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

அரசியல் கட்சிகள் என்னதான் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தினாலும் அதன் தாக்கம் 2 நாட்களுக்கு மேல் மக்களிடம் இருப்பதில்லை. இந்நிலையில் அரசியல் கட்சிகள் மக்களுக்காக ஆற்றும் பணிகளை, அவர்களுக்காக கொடுக்கும் குரல்களை முழு அளவில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கின்றன.

இதன் எதிரொலியாகவே அரசியல் கட்சிகள் மார்க்கெட்டிங் நிறுவனங்களை நாடத் தொடங்கியுள்ளன. கட்சிகளின் சக்திக்கேற்ப ஆலோசகர்கள் வைத்துக்கொள்ளப்படுகிறது. இதுவரை பிரசாந்த் கிஷோரை மட்டுமே அறிந்த தமிழக அரசியல்வாதிகள் இனி ஜான் ஆரோக்கியசாமி பற்றியும் அறிந்துகொள்ள போகின்றனர். ஆம், அவரும் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் இரண்டோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் எந்தக் கட்சிக்காக ஜான் ஆரோக்கியசாமி குழு களத்தில் இறங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

அண்மையில் நடந்த மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வியூக வகுப்பாளராக செயல்பட்டார் இந்த ஜான் ஆரோக்கியசாமி.மும்பையில் நிறுவனம் நடத்தினாலும், ஜான் ஆரோக்கியசாமி படித்தது வளர்ந்தது எல்லாமே திருச்சியில் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிதாக சொல்ல வேண்டுமென்றால் மாற்றம்,முன்னேற்றம், அன்புமணி என்கிற முழக்கத்தை உருவாக்கி 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, வண்டலூரில் நடந்த பாமக பொதுகூட்டத்தில் பிரமாண்ட எல்.இ.டி. திரை முன்பு,அன்புமணியை மார்டன் லுக்கில் நிற்கவைத்து,அன்புமணி ஆகிய நான் என கூற வைத்து தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளர் ரேசில் நிறுத்தியவர்.மஹாராஷ்டிராவின் சிவசேனா கட்சியில் தொடங்கி, கர்நாடகாவின் சித்தராமய்யா மற்றும் தமிழகத்தில் அன்புமணி வரையில் பல அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் பணியாற்றியுள்ளார்.

1.POLITICAL STRATEGIST என்றால் என்ன ? அவர்கள் என்ன வேலை செய்வார்கள்? அவர்களின் தகுதி என்னவென்று பார்ப்போம்?

அரசியல் வியூக அமைப்பாளர் என்று பொதுவாக நாம் குறிப்பிட்டாலும் , அன்றைய களநிலவரத்தின்படி மக்களின் நாடித்துடிப்பையும், எண்ணங்களையும் அறிந்து அதற்கேற்ப தலைவர், கட்சி மற்றும் தேர்தல் சார்ந்த வியூகங்களை வகுத்து தருவதுதான் இவர்களின் பிரதான பணி. களநிலவரம், மக்கள் நாடித்துடிப்பு மற்றும் கருத்து கணிப்புகள் வாயிலாக அறியும் இவர்கள் அரசியல் ஆய்வுகள் சார்ந்த அனுபவத்தோடு பணியாற்றுகிறார்கள்.

எனவே அரசியல் வியூக வகுப்பாளர்கள் என்பது பல்வேறு துறைகள் சார்ந்த களத்தில் அனுபவத் தகுதி அடிப்படையிலானவர்கள், இது எந்த ஒரு குறிப்பிட்ட படிப்பும் சார்ந்தது அல்ல. சமூக அறிவியல் என்கிற படிப்பு வேண்டுமானால் இந்த துறையில் பணியாற்ற உதவும்.

2. முதன் முதலில் POLITICAL STRATEGISTS களைப் பயன்படுத்திய கட்சி எது ?

உலக அளவில் அரசியல் வியூகம் அமைப்பாளர்களுக்கென்று தனி பின்னணி உண்டு. மறைந்த அமெரிக்க அதிபர் வில்லியம் மெக்ன லேவின் நெருங்கிய அரசியல் ஆலோசகர் மார்க் ஹன்னா தான் உலகின் முதல் அரசியல் வியூக வல்லுனர் என்று அழைக்கப்படுகிறார்.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 1930 முதல் 1950 வரை நடைபெற்ற தேர்தல்களில் இந்த நிறுவனம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்றது என்று கூறுகிறார்கள்.

அடுத்ததாக அமெரிக்காவில் பெரிதும் அறியப்படும் புகழ் பெற்ற அரசியல் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன். இவர் 1972ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சனின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசியல் ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார் .

இதைத் தொடர்ந்து ரோஜர் ஸ்டோன், 1980 மற்றும் 1984 ம் ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரொனால்டு ரீகன் வெற்றிக்கு பக்கப் பலமாக இருந்து பணியாற்றினார். ரீகனுக்கு பிறகு 1988 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ் வெற்றிக்கு வியூகம் அமைத்து வெற்றி தேடித் தந்தார்.2016 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிக்கும் பணியாற்றியவர் தான் இந்த ரோஜர் ஸ்டோன்.

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் பிரச்சார யுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ஆட்சி, திட்டங்கள், இலக்குகள், மக்கள் பற்றிய புள்ளி விவரங்களை திரட்டி அதன் அடிப்படையில் வியூகம் அமைத்து வெற்றி பெற்ற ஒபாமா அணியின் யுக்தி ஒரு புதிய டிஜிட்டல் புரட்சியாகவே மாறியது.

நவீன இந்தியாவின் முதல் பெருமைக்குரிய அரசியல் வியூகம் அமைப்பாளர் என்றால் அது நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி தான். நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களுக்கு சவால் விடுத்து, மக்கள் ஆதரவுடன் இயக்கங்கள் பல கண்டு, வெள்ளையர்களை ஆயுதங்களால் மிரட்டாமல் , அகிம்சை என்ற அறிவொளியால் அவர்களை சிதறடித்து விரட்டியடிப்பதற்கு வலிமையான வியூகம் அமைத்த மகாத்மா காந்திக்கு ஈடு இணை யாரும் இல்லை இன்று வரை!

இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள் அரசியல் ஆலோசகர்களை வைத்திருந்தனர். இந்தியாவில் முதன் முதலில் தேர்தல் பிரச்சாரம் என்பது முன்னணி விளம்பர மார்கெட்டிங் நிறுவனங்கள் உதவியுடன் ஊடக விளம்பர பிரச்சாரம் வாயிலாக மட்டுமே இருந்தது. காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் இதன் முன்னோடிகள்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெற்றி பார்முலாவை பின்பற்றித்தான் உலகம் எங்கும் டிஜிட்டல் மற்றும் டேட்டா அறிவியல் முறையிலான தொழில்நுட்ப உதவியுடன் தேர்தல் வியூகப் பிரச்சாரங்கள் களை கட்டத்துவங்கின. இந்தியாவில் சமீபத்தில் அதை முன்னெடுத்த பெருமை பிரதமர் மோடியையே சாரும்.குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும்.2014 பிரதமர் தேர்தலிலும் ஐ பேக் பிரசாந்த் கிஷோர் தான் பிரதமர் மோடிக்கு பிரச்சார வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

3. தமிழக அரசியல் களத்தில் POLITICAL STRATEGISTS நிறுவனங்ககள் வகுத்து கொடுக்கும் ஆலோசனைகள் வெற்றி பெறுமா?

தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரே ஒரு கட்சி சார்பாக மட்டுமே ஒரு வியூக வகுப்பாளரை நியமித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்ல எந்த ஒரு மாநிலத்திலேயும் தேர்தல் வெற்றி என்பது ஒரு தனிநபர் அல்லது ஒரே ஒரு நிறுவனம் சார்ந்த வியூங்களால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. . தேர்தல் வியூக நிறுவனங்கள் தனியாக தேர்தல் திட்டங்களை செயல்படுத்துவது இயலாத காரியமாகும். பல்வேறு துறை வல்லுனர் குழுக்களைக் கொண்ட ஒரு அமைப்பாக செயல்பட்டுத்தான் வியூகங்களை செயல்படுத்துவார்கள்.

இன்றைய கொரோனா பேரிடர் சூழலில் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் சார்ந்த தொழில்நுட்ப அணிகளின் பேராதரவு இன்றி, எந்த ஒரு கட்சியோ, வியூகம் வகுப்பாளர் நிறுவனமோ தேர்தலை எதிர்கொள்ளவே இயலாது.

இந்திய அரசியலை தீர்மானிக்கின்ற தமிழக அரசியல் களம் பிற மாநிலங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒரே ஒரு வியூக வகுப்பாளரோ அல்லது அவர் சார்ந்த நிறுவனமோ வெற்றியை தேடித்தந்து விடும் என்று யாராவது நம்பினால் அது தமிழக அரசியல் களத்திற்கு உகந்த அணுகுமுறையாக இருக்காது என்று அடித்துச் சொல்கிறார்கள்.

4) 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் வியூக அமைப்பாளர்களின் பங்கு எப்படி இருக்கும்?

தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் ஆளுமைக்கான வெற்றிடம் காலியாக இருக்கிறது என்ற பொதுப்பார்வை உள்ள சூழலில் அந்த இடத்தை பிடிக்க குறைந்தது மூன்று தலைவர்கள் 2021 சட்டமன்ற தேர்தல் வாயிலாக மோதும் வாய்ப்பு உள்ளது. தற்போதைக்கு இரண்டு கட்சிகள் சார்ந்த பார்வை இருந்தாலும் மும்முனை போட்டியோடு குறைந்தது ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் மோதும் தேர்தலாகவும் இந்த தேர்தல் அமையும் வாய்ப்பும் உள்ளது.

பிரதானமாக தொழில்நுட்பம், டிஜிட்டல் சார்ந்த தேர்தல் களமாக அமைய இருப்பதால், அரசியல் வியூக அமைப்பாளர்கள் மற்றும் தேர்தல் வியூக நிறுவனங்கள் சேவையை ஆட்சியமைக்க முயற்சிக்கும் கட்சிகளும், எதிர்கட்சி இடத்தை பிடிக்க நினைக்கும் கட்சிகளும், முதல்வர் வேட்பாளர்கள் கொண்ட கட்சிகளும் அத்தோடு தங்களை அவரவர் பகுதி சார்ந்த மக்கள் தலைவர்களாக முன்னிறுத்தி, தேர்தலில் தங்கள் தொகுதிகளில் வெற்றிபெற விரும்பும் பலரும் நம்பியிருக்கிறார்கள்.
தமிழகம் மட்டுமல்ல நாடெங்கும் தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் நிறுவனங்களை பல்வேறு கட்சிகள் நாடுவார்கள்.

5. கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்,பொதுமக்கள் இயல்புநிலைக்கு திரும்ப ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்கிற நிலையில் சமூக வலைதளத்தில் தேர்தல்பிரச்சாரம் எப்படி இருக்கும்?

கொரோனா இந்தியாவுக்குள் எட்டிப் பார்க்கும் முன்பே, சமூக வலைதளப் பிரச்சாரம் உச்சத்தில் இருந்திருக்கிறது. குறிப்பாக 2014 நாடாளுமன்ற தேர்தல் முதலே சமூக ஊடகங்கள் சார்ந்த பிரச்சாரம் தான் பிரதான இடத்தை பிடித்துள்ளது. கொரோனா தாக்கம் இன்னும் நீடித்தால், சமூக வலைதளப் பிரச்சாரம் முன்பை விட அதிகமாக இருக்கும். புதிதாக ஓட்டுப்போடக் காத்திருக்கும் இளைய தலைமுறையினரை செல்போன் வழியாக தான் வாக்கு கேட்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான யுக்திகள் தான் அதிகமாக வகுக்கப்படும் என்கிறார்கள்.

6. தெருமுனை கூட்டங்கள்,தலைவர்களின் மேடை பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட தமிழக வாக்காளர்களை டிஜிட்டல் யுக்திகள் கவருமா?

தேர்தல் களம் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறுபட்டது. தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என்று ஈர்க்கப்பட்ட தமிழக வாக்காளர்கள் முன்பை விட தற்போது அரசியல் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். அனைத்தும் கணினிமயமாகி விட்ட நிலையில், சில நடைமுறைகளை தவிர டிஜிட்டல் யுகத்தில் தான் நாம் வாழ்கிறோம். அதனால் டிஜிட்டல் பிரச்சாரம் பெரிதளவு கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் டிஜிட்டல் களம் என்பது ஒரு பங்கு சந்தை போன்றது. இந்த களத்தில் கட்சிகள் தலைவர்கள் சார்ந்த இமேஜ் என்பது தினம் தினம் மாறக்கூடிய ஒன்றாக இருக்கும். வானுயர்ந்த ஆளுமையாக இருந்தாலும் அல்லது மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும் ஒரு கணப்பொழுதில் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் அபாயமும் அதை எதிர்கொள்ளும் சவால்களும் நிறைந்த களம் இந்த டிஜிட்டல் களம். எனவே டிஜிட்டல் களம் என்பது வெட்ட வெளிச்சமான இருமுனை கத்தி போன்றது என்கிறார்கள்.

தலைவர் , கட்சி கட்டமைப்பு சார்ந்த அரசியல் மற்றும் தேர்தல் சார்ந்த சமூக வியூக உத்திகளை வகுக்கிறார்கள். தேர்தலை முன்னிறுத்திய மக்கள் நலன் மற்றும் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சினை சார்ந்த தேர்தல் பிரச்சார திட்டம் இல்லாமல், வெறுமனே டிஜிட்டல் பிரச்சாரத்தில் பணத்தை மட்டுமே கொட்டிவிட்டு தேர்தலில் வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம்.

7. IT WING க்கும் – POLITICAL STRATEGIST -க்கும் என்ன வித்தியாசம் ?

கட்சியும், ஆட்சியும் என்ன செய்தது என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் அந்தந்த கட்சிகளின் ஐடி-விங் பணி அபாரமானது. ஐடி விங் கட்சியின் அடிமட்ட தொண்டர்களால் அவர்களது தலைவர்கள் மற்றும் கட்சி கொள்கைகள் சார்ந்த உணர்வுகளால் ஆன உட்கட்சி அமைப்பு.

தலைவர்கள் மற்றும் கட்சிகள் உணர்வுகளையும் தாண்டி பொதுத்தளத்தில் பொதுப்படையாக அறிவியல் பூர்வமான யுக்திகள் வாயிலாக அரசியல் நகர்வுகளை எப்படி மேற்கொள்வது பிறகட்சிகளின் எதிர்பிரச்சாரங்களை எப்படி முறியடிப்பது என்பது பற்றிய பணிகளை கையாளும் பணி அரசியல் வியூகம் அமைப்பாளர்களை சேர்ந்தது.

8.களத்தில் சென்று வேலை செய்வார்களா இந்த POLITICAL STRATEGISTS ?

அரசியல் நகர்வுகளின் உயிர் நாடியே களமாடும் வியூக வித்தை தான். வியூகம் அமைப்பாளர்களின் செயல்பாடு என்பது பன்முகத்தன்மை கொண்டது. தாங்கள் வகுக்கும் தேர்தல் பிரச்சாரங்களை கள நிலவரம் அறிந்து வியூகம் வகுப்பது முதல், கட்சிகள் உதவியுடன் அவற்றை செயல்படுத்துவது வரை பல யுத்திகளில் களப்பணியும் பிரதானமான ஒன்று தான் என்கிறார்கள்.

9. சோ ராமசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி, எம்.நடராஜன் என்கிற சசிகலா நடராஜன் போன்றவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

அந்தக் காலத்து ராஜாக்களிடம் இருந்த ராஜ குருக்கள் என்பது போன்று தனிநபர் அரசியல் ஆலோசகர்கள் வேறு, நிறுவனம் சார்ந்த அரசியல் வியூகம் அமைப்பாளர்கள் வேறு. ஆனால் அரசியல் கட்சி தலைவர்களுக்கு உட்கட்சி சார்ந்தும் சாராததுமாக பல ஆலோசகர்கள் இருப்பார்கள்.உதாரணமாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், ஊடக அதிபர்கள் முதல் பொருளாதார நிபுணர்கள் வரை இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். மேற் குறிப்பிட்டவர்கள் எல்லாம் ஆலோசகர்களாகவும் குறிப்பிட்ட கட்சித் தலைமையின் அபிமானிகளாகவும் இருப்பவர்கள்.

இந்தியாவிலும் ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் போன்றவர்களும் ஸ்டீவ் ஜார்டிங் போன்ற புகழ்பெற்ற வியூக வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளனர்.உலகமெங்கும் இவர்களது வியூகம் வெற்றி தேடித் தந்திருக்கலாம்.தமிழகத் தேர்தலைப் பொறுத்தவரை சின்னம் முக்கிய பங்கு வகிக்கிறது. சின்னத்தை பார்த்து தான் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே POSITIVE VOTES அதாவது ஆதரவு வாக்குகள் பெற்று முதலமைச்சரானார்.

ஆனால் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பிறகு எதிர்ப்பு ஓட்டு வாங்கி தான் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஜெயித்தார்கள்.தமிழகத்தில் ஜெயலலிதா கருணாநிதி இருவரின் மறைவுக்குப் பிறகு மக்களை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான தலைவர்கள் இல்லை. ஆனால் திராவிடக்கட்சிகளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன தமிழக வாக்காளர்கள் மத்தியில் இவர்களது பிரச்சார வியூகம் எடுமா என்பதை 2021 தேர்தல் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ?

Related posts:

அடுத்த ரெய்டில் சிக்கப் போகும் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ்.
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் வெற்றி பெற முடியாமல் போவதற்கு என்ன காரணம்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார் ?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக எங்கள் காரை நிறுத்துவதா..? நீதிபதி கேள்வி!
மின்வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான முயற்சிகளை திமுக அரசு எடுக்க வேண்டிய நேரம்
ஓபிஎஸ் ஐ புறக்கணித்த மோடி.. நிறைவேறாத ஓபிஎஸ் பிளான்?
தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின் !
எதிர்கட்சித்தலைவர் ஆகிறார் ஓபிஎஸ் ! அமித்ஷா ஆலோசனையை ஏற்றார் ஈபிஎஸ் ?