பாத்ரூமிற்குள் செல்போன் எடுத்துச்செல்வதால் ஏற்படும் விளைவுகள் !

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் தீய பழக்கங்களில் முக்கியமான ஒன்று கழிவறையில் செல்போன் உபயோகிப்பது. பெரும்பாலும் இளைஞர்கள் அனைவருமே இதனை செய்கிறார்கள் என்று கூறலாம். இந்நிலையில் சமீபத்திய ஆய்வு முடிவின்படி பாத்ரூமிற்கு செல்போனை எடுத்துச்செல்வது உங்கள் நேரத்தை வீணாக்குவது மட்டுமின்றி பல ஆரோக்கிய கேடுகளையும் ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இளைஞர்கள் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போல செல்போன்களுக்கும் அடிமையாக மாறிக்கொண்டிருக்கின்றனர். எங்கு சென்றாலும், எந்த வேலை என்றாலும் அவர்களால் செல்போன் இன்றி இருக்கமுடிவதில்லை. இந்த சூழ்நிலையில் கழிவறைக்கு செல்போன் எடுத்துச்செல்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

கழிவறை என்பது அதிக பாக்டீரியாக்களும், கிருமிகளும் இருக்கும் இடம் என நாம் நன்கு அறிவோம். அப்படி இருக்கும்போது அங்கே செல்போனை எடுத்துச்செல்வது உங்களை கிருமிகள் தாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். புத்தகமோ, செல்போனோ எதுவாக இருப்பினும் வலது கையால் உபயோகப்படுத்திவிட்டு ஃபிளஸ் செய்யும்போது இடதுகைக்கு மாற்றிவிட்டு பின்னர் கையை சோப்பு போட்டு கழுவவேண்டும். எங்காவது போனை வைத்துவிட்டு மீண்டும் எடுத்தால் உங்கள் போனில் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொண்டிருக்கும். அதிலும் பொதுக்கழிப்பிடங்களுக்கு செல்லும்போது செல்போனை எடுத்து செல்லும் பழக்கம் இருந்தால் இன்றே அதை நிறுத்திக்கொள்ளுங்கள். கிருமிகள் பரவ இதுவும் ஒரு வழி. ஒருவேளை உங்கள் கழிவறைக்குள் டூத்ப்ரஷை வைக்கும் பழக்கம் இருந்தால் உங்களை தாக்க கிருமிகளுக்கு நீங்களே அழைப்பு விடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் தினசரி உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தையும் கழிவறையை விட்டு ஆறு அடி தள்ளி வைப்பது அவசியம். எவ்வளவு நேரம் கிருமிகள் போனில் இருக்கும்? குறைந்தது இரண்டு நாட்கள் உங்கள் போனில் கிருமிகள் உயிருடன் இருக்கும். அதிலும் உங்கள் போன் அடிக்கடி சூடாவது பாக்டீரியாக்கள் நன்கு வளர்வதற்கு உதவியாய் இருக்கும். இவ்வாறு பாக்டீரியாக்கள் மகிழ்ச்சியாய் உங்கள் போனில் இருக்கும்போது அதே போனை உபயோகப்படுத்தி நீங்கள் பேசும்போது பாக்டீரியாக்கள் உங்கள் வாய்வழியே உடலுக்குள்ளும் எளிதாக சென்றுவிடும். பிறகு நடப்பவை பற்றி கூறவே தேவையில்லை. அவை உங்கள் உடலில் பல ஆரோக்கிய கேடுகளை உண்டாக்கும்.

செல்போனுக்கு கவர் போட்டுகொண்டு நான் பாத்ரூமில் போன் உபயோகிக்கலாமா? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இதற்கு தமிழில் ஒரு பழமொழி உள்ளது, ” பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமாம்”. அதை போலத்தான் உங்கள் கேள்வியும். நீங்கள் உபயோகிக்கும் எந்த கவரும் உங்கள் போனை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்காது. கிருமிகளிடம் இருந்து தப்பிக்க ஒரேவழி பாத்ரூமிற்குசெல்போனை எடுத்துச்செல்லாமல் இருப்பதுதான்.

மூலநோய் உள்ள   பலருக்கும் கழிவறை என்பது வேலைகளில் இருந்தும், வெளிஉலகத்தில் இருந்தும் தப்பித்து சில நிமிடங்கள் அமைதியாய் உணர இருக்கும் இடமாக உள்ளது. முன்பெல்லாம் கழிவறைக்கு செல்லும்போது புத்தகங்களை எடுத்துச்செல்வார்கள். இப்பொழுதுதான் அனைத்து புத்தகங்களுமே செல்போனில் கிடைக்கிறதே அதனால்தான் செல்போனை எடுத்துச்செல்கிறார்கள் போலும். கழிவறையில் அரைமணி நேரம், ஒருமணி நேரம் என நீங்கள் செலவழிக்கும் நேரம் முழுவதும் தேவையின்றி உங்கள் அடிப்பாகத்தின்மீது அதிக அழுத்தம் செலுத்துகிறீர்கள். இந்த அதீத அழுத்தம் உங்களுக்கு மூலநோயை ஏற்படுத்தலாம். மலச்சிக்கல் கழிவறையில் அதிகநேரம் அழுத்தம் கொடுப்பது மலச்சிக்கலை ஏற்படுத்தும் மேலும் இரைப்பை தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். முடிந்தளவு கழிவறையை விட்டு வேகமாக வெளியே வர முயலுங்கள்.

உங்கள் பொன்னான நேரத்தை கழிவறையில் செல்போனுடன் செலவிடாதீர்கள். அதுமட்டுமின்றி அசௌகரியாக அதிக நேரம் கழிவறையில் உட்கார்ந்திருப்பது இடுப்பு வலியை ஏற்படுத்தலாம். மூளைக்கு ஓய்வு அலுவலக நேரத்திலும் சரி, வீட்டிலிருக்கும் நேரத்திலும் சரி உங்கள் மூளை தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டே இருக்கும். எனவே உங்கள் மூளைக்கு சிறிது ஓய்வு கொடுக்கவேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற நேரம் நீங்கள் கழிவறையில் செலவிடும் நேரமாகும். அந்த நேரத்திலும் உங்கள் செல்போனை எடுத்து சென்று எதையாவது வாசித்து கொண்டிருப்பதோ அல்லது முகப்புத்தகத்தில் செலவிடுவதோ உங்கள் மூளைக்கு நல்லதல்ல. உங்கள் மூளைக்கு நீங்கள் ஓய்வு கொடுக்காதபோது நிச்சயம் அது தவறாக செயல்பட தொடங்கும். காரணமின்றி ஏற்படும் தலைவலி, அதிக சோர்வு போன்றவை அதன் அறிகுறிகளாகும்.

தீர்வு செல்போன் இல்லாமால் பாத்ரூம் செல்வதே எளிமையான ஒரே தீர்வு. பாத்ரூம் எப்பொழுது ரெஸ்ட் ரூம் ஆனதோ அப்போதே அங்கு அதிக நேரம் செலவழிக்க தொடங்கிவிட்டோம். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு இடமிருக்கிறது, அந்த வகையில் செல்போன் உபயோகிக்க பாத்ரூம் ஏற்ற இடமல்ல. எனவே அங்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள். செல்போன் ,மட்டுமே உலகமல்ல அதில் காட்டுவது அனைத்தும் நிஜமும் அல்ல. உங்கள் செல்போனிற்கு வெளியே ஒரு உலகம் இருக்கிறது அதில் நிறைய அழகான நிஜங்களும் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.