கைலாஷ், பிரணநிதி, வேதாந்த் மூவரும் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்கள். இவர்களுக்கு பேருதவியாக இருக்கும் நண்பன் பூவையார். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் சினேகா- வெங்கட் தம்பதியருக்கு ஒரே மகன்; கைலாஷ். பெற்றோர்கள் நன்றாக சம்பாதிப்பதாலும், அவனுக்கு வேண்டியதை வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால் அவனிடம் அன்பாக பேச மட்டும் நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கின்றனர். அதே போல் பல் டாக்டர் பெற்றோரின் மகள் பிரணிதி நன்றாக பாடும் திறன் பெற்ற சிறுமி என்றாலும் அவளுக்கு வீட்டில் ஆதரவு இல்லை. சிங் குடும்பத்தில் பிறந்த வேதாந்த் வசந்தா, ஏழ்மை நிலையில் இருந்தாலும் அனைவரிடமும் பாசமுடன், எந்த வேலை செய்தாலும் ஈடுபாடுடன் செய்யும் பூவையார். கைலாஷின்; பிறந்த நாளுக்கு பிரணநிதி, வேதாந்த் இருவரும் இணைந்து மேக்ஸ் என்ற கோல்டன் ரிட்ரிவர் நாய்க்குட்டியை பரிசாக கொடுக்கின்றனர். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கைலாஷின் தாய் சிநேகா பின்னர் சம்மதித்து மேக்ஸை வீட்டில் வளர்கின்றனர். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு கைலாஷின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியூருக்கு செல்ல, கைலாஷ் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் வீட்டில் ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர். இந்நேரத்தில் மேக்ஸ் காணாமல் போகிறது. கைலாஷ் மற்றும் நண்பர்கள் மேக்ஸை தேடிச் செல்கின்றனர். இந்த நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் பெரும் தொந்தரவாக இருக்கும் தெரு நாய்களை பிடித்து கொல்ல திட்டமிடுகின்றனர். தெருவில் வழி தெரியாமல் உலாவிக் கொண்டிருக்கும் மேக்ஸ் யோகிபாபுவின் ஆட்டோவில் ஏறிவிடுகிறது. யோகிபாபு கடனை அடைக்க மேக்ஸை விற்க முடிவு செய்கிறார். அதே சமயம் குழந்தைகள் நாயை கண்டுபிடிப்பதற்காக நடிகை த்ரிஷாவின் நாய் காணவில்லை என்று பொய்யாக முகநூலில் பதிவிடுகின்றனர். இதனால் மேக்ஸை தேட பலர் முன் வருகின்றனர். இந்நிலையில் நாய் கிடைத்ததா? என்பதை சொல்வதோடு, சிறுவர்களின் தேடல் பயணம் மூலம் மனிதர்கள் மீது மட்டும் அல்ல பூமியில் வாழும் அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு செலுத்த வேண்டும், என்ற யதார்த்தமான கருத்தை வலியுறுத்துவது தான் ‘ஷாட் பூட் த்ரீ’.
பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் ஒடிக் கொண்டிருக்கும் பெற்றோர் மகனிடம் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட பகிர்ந்து கொள்ளாததுடன் அரவணைக்க மறப்பது, குழந்தைகளின் திறனை ஊக்கபடுத்த மறுக்கும் பெற்றோர், எந்த விஷயங்கள் என்றாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகள், வீட்டுச் செல்ல பிராணிகளிடம் அன்பு காட்ட வேண்டும் அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன். வளர்ப்பு நாயை கண்டு பிடிக்க புறப்படும் தேடுதல் பயணத்தை முழுக்க முழுக்க குழந்தைகள் படமாக கொடுக்க நினைத்து, அதனுடன் வசதியில்லாத குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற சமூக அக்கறையோடு அனைவருக்கும் கல்வி முக்கியம் என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் மனதில் ஏனோ பதிய மறுக்கிறது.
சினேகா மற்றும் வெங்கட் பிரபு மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ரோலில் அழகாக பொருந்தியிருப்பதோடு லிமிட்டான ஆக்ட் மூலம் அந்த ரோலில் வாழ்ந்து அசத்தி இருக்கிறார்கள். கைலாஷ் ஹீட், வேதாந்த், பூவையார் மூன்று சிறுவர்களும், சிறுமி பிரணிதியும் தங்களது இயல்பான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்கிறார்கள். ஏழை வீட்டு பிள்ளையாக இருந்தாலும், நாட்டு நடப்பை நன்கு அறிந்து வைத்திருக்கும் பூவையாரின் வேடமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது. பாடகியாவதற்கு ஆசைப்படும் பிரணிதியின் நடிப்பில் மட்டும் அல்ல குரலிலும் முதிர்ச்சி தெரிகிறது. யோகிபாபு என்பவர் இருக்கிறார் ஆனால் அவரிடம் எதிர்ப்பார்த்த நகைசுவை வழக்கம் போல் மிஸ்ஸிங்..
வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் பின்னணி இசை சுமார் ரகம் தான் மிகவும் சராசரி இசையாக நம்மை கடந்து செல்கிறது. அதிலும் தேவையில்லாத சத்தங்களை நிரப்பி சில இடங்களில் காண வேண்டிய காட்சிகளை காணவிடாமல் செய்திருக்கிறார். மனிதர்களைத் தாண்டிய உயிரினம் மீது இரக்கம் காட்டுவது, அறியா சிறுவர்களின் தேடல் பயணம் போன்றவற்றை படு கேஷூவலாக காட்சிப்படுத்தியிருக்கும் டைரக்டர் இப்படத்தில் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயையும் நடிக்க வைக்க ட்ரை பண்ணியிருக்கிறார். மேக்ஸ் என்ற வேடத்தில் நடித்திருக்கும் அந்த நாயும் சிறுவர்களைப் போல் படத்தில் முக்கியமான கேரக்டராக இருந்தாலும், அந்நாய் ரசிகர்களை கொஞ்சம் கூட கவரவில்லை. அதற்கான காட்சிகளும் படத்தில் இல்லை என்பதும் சோகம்.
வேலை..வேலை…என்று இருக்கும் பெற்றோர்கள், எது கேட்டாலும் கிடைக்கும் ஆனால் பெற்றோர்களின் அரவணைப்பு மட்டும் கிடைக்காமல் ஏங்கும் பிள்ளைகள், அவர்கள் மூலம் சொல்லப்படும் விலங்குகள் மீதான இரக்கம் மற்றும் அக்கறை என படத்தில் பல விசயங்களை சொல்லியிருக்கும் டைரக்டர் அருணாச்சலம் வைத்தியநாதன், முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, சில இடங்களில் மேலோட்டமாக பெற்றோர்களுக்கு பாடம் எடுத்து படத்தை கமர்ஷியலாக நகர்த்தியிருந்தாலும், பார்க்கும்போது யாதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கவில்லை என்பதே உண்மை.
