தீபாவளி ஷாப்பிங் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் சென்னை தி.நகரில் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீபஒளி திருநாளை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து வருவதால் சென்னை தியாகராய நகர், காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தியாகராய நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 100 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.நகர் பகுதியில் 1,200 கேமராக்கள் ஏற்கனவே நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்றும் மேலும் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின் போது தியாகராயநகர் பகுதியில் எந்த குற்றச்சம்பவங்களும் நடைபெறவில்லை என்று கூறிய அவர், இந்த ஆண்டும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து முகத்தை ஒப்பிட்டு குற்றவாளிகளை கண்டறியக்கூடிய FACE TAGR கேமரா, பாடி ஓன் கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார். கேமராக்களுடன் TANGO EYE என்ற மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த நபர்கள் கேமராவில் தென்பட்டால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் கிடைத்துவிடும் என அவர் குறிப்பிட்டார். இது தவிர மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் சுமார் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:தீப ஒளி பண்டிகைதி.நகர்1300 கேமராகண்காணிப்பு