தமிழகத்தின் ஆளுநராக தமிழிசை வந்திருக்க வேண்டும் ? சரத்குமார் ஆதங்கம் !

தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்துக்கு ஆளுநராக வந்திருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாடார் சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய சரத்குமார், தமிழிசை சவுந்தரராஜன் ஒரு கடின உழைப்பாளி என்றும், அவருடைய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் ஆளுநர் பதவி எனவும் தெரிவித்தார். தமிழிசையின் உழைப்பு தெலுங்கானா மாநிலத்தை வளர்ச்சியடைய செய்யும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும், தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்துக்கு ஆளுநராக வந்திருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும் எனவும் கூறினார்.சரத்குமாரை தொடர்ந்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை பயன்படுத்தி தமிழ்-தெலுங்கு இடையேயான பண்பாட்டு தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், ஆளுநர் பதவி என்றால் ஏதோ ஓய்வு காலத்தில் கொடுக்கப்படும் சாதாரண பதவி என சிலர் நினைப்பது தவறு என்றும், இந்தப் பதவியின் மூலம் சுமார் 20 பல்கலைக்கழகங்களுக்கு தமிழிசை வேந்தராக ஆகும் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக தெரிவித்தார்.

தமிழிசை சவுந்தரராஜனுக்கு இப்போது இருக்கும் வரவேற்பு ஆறு மாதத்துக்கு முன்பு கிடைத்திருந்தால் அவர் மத்திய அமைச்சராக ஆகியிருப்பார் என்றார் மாஃபா பாண்டியராஜன். இதேபோல் அவருக்கு முன்னதாக பேசிய எர்ணாவூர் நாராயணன், கரிக்கோல் ராஜ் உள்ளிட்டோரும் தமிழிசையின் உழைப்பை பற்றி பாராட்டி பேசினர்.