ஜியோ ஃபைபர் சேவைகளின் விலைப்பட்டியல் இதுதான்!

டெலிகாம் சந்தையில் கொடியைப் பறக்கவிட்ட கையோடு ஜியோ அதன் அடுத்த அதிரடியைக் கடந்த மாதம் அறிவித்திருந்தது. ஆம், ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் சேவைகள் பற்றிய அறிவிப்புதான் அது. 100 Mbps முதல் 1 Gbps வரை கிடைக்கும் இந்த ஜியோ ஃபைபர் சேவைகள், செப்டம்பர் 5 முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டாலும் அதன் விலை நிலவரம் தெளிவாக வெளியிடப்படவில்லை.

மக்கள் ஜியோவின் இந்த பிராட்பேண்ட் சேவையைப் பெற விண்ணப்பித்துக்கொண்டிருக்க இன்று செப்டம்பர் 5-ம் வந்தது. ஆனால், விலைப்பட்டியல் வந்ததாக இல்லை. விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்க விரும்புவார்கள் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்க தற்போது விலை குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

அதன்படி அறிமுக சலுகையாக 6,400 ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் 4K செட்-அப் பாக்ஸும், 5,000 மதிப்புள்ள ஜியோ ஹோம் கேட்வே சாதனமும் இலவசமாகக் கிடைக்கும். முதல்கட்டமாக 2,500 ரூபாய் கட்டவேண்டியதாக இருக்கும். அதில் 1,500 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட், இதைத் திரும்பப்பெற்றுக்கொள்ள முடியும். 1,000 ரூபாய் இன்ஸ்டால் செய்யும் சேவைக்கான தொகையாகப் பெறப்படுகிறது.

இந்த சேவைகள் Bronze, Silver, Gold, Diamond, Platinum, Titanium என ஆறு விலைகளில் வருகின்றன. குறைந்தபட்சமாக Bronze பிளானில் 100 Mbps வேகத்தில் 100 GB ஒரு மாதத்திற்குக் கொடுக்கப்படுகிறது. அறிமுக சலுகையாக இத்துடன் முதல் 6 மாதங்களுக்குக் கூடுதல் 50 GB டேட்டா கிடைக்கும். இது முடிந்தவுடன் 1 Mbps இணையச் சேவை தொடரும். அதிகபட்சமாக Titanium பிளானில் 1 Gbps வேகத்தில் 5000 GB டேட்டா கிடைக்கும்.

இதுபோக இந்தியா முழுவதும் இலவச அழைப்புகள், செட்-அப் பாக்ஸ் மூலம் டிவியில் வீடியோ கால், ஆன்லைன் மல்டிபிளேயர் கேமிங், நார்டன் சாதன பாதுகாப்பு அனைத்து பிளான்களுடனும் கிடைக்கும். VR சேவைகள் மற்றும் முதல் நாளே வீட்டில் படங்கள் பார்க்கமுடியும் ஜியோ FDFS சேவை 2,499 ரூபாய்க்கு மேலான பிளான்களில் கிடைக்கும். இதுபோக ஜியோ சாவன், ஜியோ சினிமா மற்றும் இதர ஸ்ட்ரீமிங் சேவைகளின் சந்தாக்கள் இத்துடன் வரும். மேலும், இந்த சேவைகளை ஒரு வருடத்திற்கு பெறுவதன் மூலம் பிளானுக்கு ஏற்ப ப்ளூடூத் ஸ்பீக்கர் முதல் 4K டிவி வரை இலவசமாக கிடைக்கும்.கூடுதல் வசதிகள் பல இருந்தாலும் இந்த விலைகள் மக்களை ஈர்க்குமா என்பது சந்தேகம்தான். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.