மலேசியாவில் இசைக்குழுவில் பாடகராக இருக்கும் முகேன் ராவ் அங்கு ஒப்பந்தம் முடிந்ததும் சென்னைக்கு திரும்ப வேண்டியதாகிறது. முன்னதாக மலேசியாவில் ஜின் என்ற பேய் வகையை சார்ந்த ஒரு உருவத்தை பெட்டியில் அடைத்து கடையில் வைத்திருக்க அதை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும் என்று எண்ணி தன் வீட்டிற்கு வாங்கி வருகிறார். வீட்டில் ஜின்னை, நாய்க் குட்டி போல் பிஸ்கட், பால் வைத்து வளர்க்கிறார். முகேன் ராவிற்கு காதல், சந்தோஷம் எல்லாம் சேர்ந்தாலும் குடும்பத்தினருக்கு அவ்வப்போது சோகங்கள் ஏற்படுகிறது. ஜின்னால்தான் இந்த சோகம் ஏற்படுகிறது என்று குடும்பத்தினர் கூறினாலும் அதை முகேன் ராவ் ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் தன் காதல் மனைவி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடையும் முகேன் ராவ், வீட்டில் வளர்த்த ஜின்னை கோபத்தில் தெருவில் தூக்கி வீசுகிறார். அடுத்து நடப்பது என்ன என்பதற்கு விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
படத்தின் தொடக்க காட்சிகளில் ஜின்பற்றி சொல்லப்படும் கதை உண்மையா என்று தெரியவில்லை ஆனால் ஜின்னைப் பற்றி நிறைய பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கதையின் முன் சுருக்கம் என்பதால் அதை கவனிக்க வேண்டி உள்ளது.
மலேசியாவில் பழங்கால கடைக்கு சென்று ஜின் பெட்டியை வாங்கும் போது ஒரு அதிர்வலை ஏற்படுவது ஆவலை தூண்டுகிறது.ஜின் பெட்டியை தன் வீட்டிற்கு எடுத்து வந்ததும் அதை பார்த்து வடிவுக்கரசி உள்ளிட்ட குடும்பத்தினர் பயப்படுவதும், இரவில் 12 மணிக்கு மேல் ஜின்னிற்கு பாலும் பிஸ்கட்டும் சாப்பிட தர வேண்டும் என்று சொல்ல அதைக் கேட்டு பயந்தபடி வினோதினி பால், பிஸ்கட் இரண்டையும் ஜின் பெட்டிக்குள் வைக்க படும்பாடு என்ன நடக்குமோ என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் பயத்தை கிண்டி விட்டாலும் 2ம் பாதிக்குப் பிறகு கிராபிக்ஸ் ஜின்னை காட்டி பயமுறுத்துவார்கள் என்று பார்த்தால் அதற்கு காமெடியான ஒரு டப்பிங் குரல் கொடுத்து கைகொட்டி சிரிக்கும் அளவுக்கு காட்சிகளை படமாக்கி இருப்பது ரசிக்கும் படியாக இருக்கிறது.
குழந்தைகளையும், பேய் பயம் உள்ளவர்களையும் ரசிக்க வைக்கும் என்று நம்பலாம்.?
ஹீரோ முகேன் தன் கதாபாத்திரத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் செய்வதும், யார் கண்ணுக்கும் தெரியாத ஜின்னிடம் பேசி மற்றவர்களை குழப்புவதும் சரியான காமெடி.
முகேன் ராவ் காதலியாக பவ்யா நடித்திருக்கிறார். இயக்குநர் கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
பால சரவணன், இமான் அண்ணாச்சி காமெடி பெயரளவில் தான் இருக்கிறது.
ரசிக்கும்படியாக இல்லை..
கதையில் ஒரு டுவிஸ்ட்க்கு மட்டுமே ராதாரவி நிழல்கள் ரவி பயன் பட்டிருக்கின்றனர்.
டி ஆர் பாலா தயாரித்து படத்தை இயக்கியிருக்கிறார். அந்த காலத்தில் ஜெய்சங்கர், கே.ஆர் .விஜயா நடித்து வெளிவந்த பட்டணத்தில் பூதம் படத்தின் கருதான் ஜின் படமாக உருவாகி இருக்கிறது என்று தெரிகிறது. நம்ப முடியாத கதை. படத்தில் தொடக்கத்தில் வரும் சில பயமுறுத்தல் காட்சிகளை எடிட் செய்து தூக்கி எறிந்தால் பின்னால் வரும் குழந்தைகளுக்கான காட்சிகள் எடுபடும்.
விவேக் -மெர்வின் இசை,
அர்ஜுன் ராஜா கேமரா படத்திற்கு பிளஸ்.
ஜின் தி பெட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
நடிப்பு: முகேன் ராவ், பவ்யா ட்ரிக்கா, வடிவுக்கரசி, பால சரவணன், ராதாரவி, நிழல்கள் ரவி, வினோதினி, ரித்விக்
தயாரிப்பு: டி ஆர் பாலா
இசை: விவேக் -மெர்வின்
ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா
இயக்கம்: டி ஆர் பாலா
பிஆர்ஓ: நிகில் முருகன்