தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் அ.தி.மு.கவுக்கு பெரும் சரிவு ஏற்படலாம் என்றரீதியிலான சர்வே முடிவு ஒன்று அ.தி.மு.க தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா வருகை, அ.ம.மு.க தனித்துப் போட்டி போன்றவை பிரதான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. என்ன நடக்கிறது தென்மண்டல அ.தி.மு.கவில்?
பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா, சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். கொரோனா தொற்றில் இருந்து அவர் முழுமையாக குணமடைந்துவிட்டாலும் 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக தன்னைச் சந்திக்க விரும்பிய கட்சி நிர்வாகிகளுக்கும் அவர் அனுமதி கொடுக்கவில்லை. தி.நகரில் அவர் தங்கியுள்ள வீட்டுக்கு இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தினகரன் சென்று சந்தித்துப் பேசி வருகிறார். நாளிதழ்களைப் படிப்பது, தொலைக்காட்சிகளில் செய்திகளைக் கவனிப்பது என மிகுந்த மௌனத்தை சசிகலா கடைப்பிடித்து வருகிறார். அவரது ஒவ்வொரு நகர்வையும் ஆளும்கட்சி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
`கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் ஓரளவுக்கு தொகுதிகளைக் கைப்பற்றலாம் என்றாலும், தென் மண்டலத்தில் கௌரவமான இடங்களை வெல்வோமா?’ என்ற அச்சம், அ.தி.மு.க தரப்பில் ஏற்பட்டுள்ளது. சசிகலா வருகையையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் மட்டுமல்லாமல், தொகுதியில் உள்ள கட்சி அலுவலகங்களையும் அ.தி.மு.க நிர்வாகிகள் பூட்டி வைத்ததும் தொண்டர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், தென்மண்டல சூழல்கள் குறித்து சில தனியார் நிறுவனங்கள் மூலம் விரிவான சர்வே ஒன்றை எடுத்துள்ளது, அ.தி.மு.க தலைமை. கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டில் இந்த சர்வே பணிகள் நடந்துள்ளன.
“ முதல்வரின் ஆட்சி தொடர்பான கேள்விகள் சர்வேயில் இடம்பெற்றாலும் தென்மண்டலத்தில் உள்ள சமூக வாக்குகள் குறித்த கேள்விகளாக பிரதானமாக வைக்கப்பட்டன. மக்களிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகளில் சமூக வாக்குகள் தொடர்பான கேள்விகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி, பா.ஜ.க கூட்டணியில் இருப்பது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சசிகலா வருகை ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருந்தன” என்கிறார் தென்மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பட்டியலிட்டார்.
“ திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நாடார் சமூக வாக்குகள் அ.தி.மு.க பக்கம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனென்றால், வணிகர்கள் ஜெயராஜும் பென்னிக்ஸும் போலீஸ் காவலில் தாக்கப்பட்டு உயிரிழந்தது, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை பிரதான காரணங்களாக உள்ளன. நாடார் சமூகத் தலைவர்கள் பலரும் பா.ஜ.க பக்கம் ஒன்றிணைந்து செயல்பட்டாலும் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் அந்தச் சமூக வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அ.தி.மு.க அணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தலாம்” என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், “ தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம், அ.தி.மு.க அணிக்கு எந்தளவுக்கு வெற்றியைத் தேடித் தரப் போகிறது என்பது முக்கியமானவை. `புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமியின் முன்னெடுப்பால் இது சாத்தியமானது என்றாலும், அவருக்கு ஒட்டப்பிடாரம் தாண்டி செல்வாக்கு இருக்கிறதா என்பதுவும் முக்கியமான கேள்வி. அடுத்ததாக முக்குலத்தோர் வாக்குகள் அ.தி.மு.க அணிக்கு வருவதற்கான வாய்ப்புகளும் குறைவு. சசிகலா, தினகரனை ஓரம்கட்டிய விவகாரம், பிரமலைக் கள்ளர் சமூக மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மறவர் சமூக மக்களும், ஓ.பி.எஸை தங்கள் சமூகத்தின் அடையாளமாகப் பார்க்கவில்லை. ஓ.பி.எஸ்ஸிடம் இருந்த ஆட்சி அதிகாரம் கொங்கு வேளாளர் பக்கம் சென்றதிலும் அவர்களுக்கு வருத்தம்தான். நிலவரம் இதைத்தான் பிரதிபலிக்கிறது” என்கிறார்.
மேலும், “கனிமொழியின் தொடர் பிரசாரத்தால் உள்ளூர் அமைச்சர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவரது பிரசாரம் தென்மண்டலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கொங்கு மண்டல சர்வேயில் மின்வெட்டு தொடர்பான கேள்விகளே பிரதானமாக இருந்தன. காரணம், 2006-11 தி.மு.க ஆட்சியை நினைவூட்டும் வகையில் அங்கு கேள்விகள் கேட்கப்பட்டன. இங்கு இபிஎஸ்-ஓபிஎஸ் பற்றிக் கேட்டபோது, `ஓ.பி.எஸ் அடங்கிப்போய்விட்டார்; இபிஎஸ் தலைவராக வந்துவிட்டார்’ என மக்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், சசிகலா வருகையால் 47 தொகுதிகள் வரையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் ஒவ்வொரு தொகுதியிலும் 3 முதல் 4 சதவிகித வாக்குகளை அவர்கள் பிரிப்பார்கள் எனவும் சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது” என்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகவும் சர்வே எடுக்க வந்தவர்களிடம் மக்கள் வெளிப்படையாகப் பேசியுள்ளனர். `அரசுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை’ எனச் சிலரும் `தொலைக்காட்சிகளில் பார்த்துதானே முதல்வர் தெரிந்து கொண்டார்’ எனவும் தெரிவித்துள்ளனர். `3 வருடங்களாகிவிட்டதால் இந்தச் சம்பவத்தை மக்கள் மறந்திருப்பார்கள்’ என்ற அ.தி.மு.கவின் கணிப்பும் பொய்த்துப் போய்விட்டது. மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய சமூகரீதியான சில விஷயங்கள், கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர்களாக இருந்த சிலர் விலகியது போன்றவை பெரிய மைனஸாக உள்ளதாகவும் அ.தி.மு.க தலைமைக்கு அறிக்கையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில், குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஆட்சிக்கு பெரியளவில் எந்த எதிர்ப்பும் இல்லை. திராவிடக் கொள்கைகளை முன்னெடுக்கும் மக்களைத் தவிர, ஆட்சி குறித்த எதிர்ப்பு பெரிதாக இல்லை. பத்தாண்டுகால ஆட்சி என்பது மட்டுமே மைனஸாகப் பார்க்கப்படுவதாகவும் சர்வே விவரங்கள் தெரிவிக்கின்றன. `இதனை அடிப்படையாக வைத்து தென்மாவட்டங்களில் வாக்குகளைக் கவர்வதற்கு சில அதிரடி அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்’ எனவும் அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
`அ.ம.மு.கவால் அ.தி.மு.கவுக்கு தென்மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுமா?’ என அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாத பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ தென்மண்டலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே அ.தி.மு.க கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, பெங்களூருவில் இருந்து சின்னம்மா வந்தபோது, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்துதான் அதிகப்படியான வாகனங்கள் அணிவகுத்தன. கடந்த எம்.பி தேர்தலில் டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டதிலேயே அதிகக் கூட்டம் சேர்ந்தது கள்ளக்குறிச்சியில்தான்” என்கிறார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ நேற்று முன்தினம் சி.வி.சண்முகத்துக்குப் பதில் கொடுக்கும் வகையில் விழுப்புரத்தில் கூட்டம் நடத்தினோம். மாநிலம் முழுவதும் சாதிக்கு அப்பாற்பட்ட ஈர்ப்பு சின்னம்மா மீது உள்ளது. ஓ.பி.எஸ்ஸுக்கு தேனி மாவட்டத்திலேயே தனிப்பட்ட செல்வாக்கு என்பது இல்லை. சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிர்ப்புகள் அதிகம் உள்ளன. தி.மு.க, அ.தி.மு.கவுக்கு அடுத்து ஊராட்சிவாரியாக மாநிலம் முழுவதும் கிளை அமைப்புகளைக் கொண்ட கட்சியாகவும் அ.ம.மு.க உள்ளது. எனவே, அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.கவுக்கு பாதிப்பு ஏற்படும்” என்கிறார்.
“அ.தி.மு.க என்ன செய்யப் போகிறது?” என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். “ கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், `பிரதமர் மோதியா.. ராகுலா?’ என்ற பேச்சு எழுந்தபோது, தி.மு.க அணிக்கு மக்கள் வாக்களித்தனர். இதன் காரணமாக தேனியைத் தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆனால், தேனி தொகுதியில் அ.தி.மு.கவை தோற்கடிக்க முடியவில்லை. துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அங்கு காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வனும் தோற்கடிக்கப்பட்டனர். எனவே சொந்த சமூக மக்களின் பாராட்டைப் பெற்ற தலைவராகவே ஓ.பி.எஸ் இருக்கிறார்” என்கிறார்.
“ தென்மாவட்டத்தில் ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்கு இல்லை என்கிறார்களே” என்றோம். “ அப்படியொரு வதந்தியைப் பரப்பிவிடுகிறார்கள். அவரது செயல்பாடுகளை மக்கள் வரவேற்கிறார்கள். அ.ம.மு.கவால் 47 தொகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றொரு பேச்சும் வலம் வருகிறது. தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சசிகலா மீது பரிவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சசிகலா வருகைக்குப் பின்னால் அ.ம.மு.கவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுவிட்டது. சிறையில் இருந்து வந்த பிறகு எதையும் பேசாமல் அவர் அமைதியாக இருக்கிறார். அவர் எந்தக் கொடியைப் பிடிக்கப் போகிறார். அ.ம.மு.கவா, அ.தி.மு.கவா என்பதில் அவர்களுக்குள்ளேயே குழப்பம் உள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும்” என்கிறார்.
“தென் மாவட்ட தேர்தல் நிலவரம் எப்படி அமையும்?” என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். “ தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் பொதுவாக அ.தி.மு.கவுக்கு செல்வாக்கான பகுதிகள் என்றே கருதப்படுபவை. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சென்னையைத் தவிர்த்துவிட்டு தெற்கே உள்ள தொகுதிகளில் நின்று வெல்வார்கள். பாரம்பரியமான அ.தி.மு.க ஆதரவாளர்கள் இருக்கும் இடமாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைக் கருதலாம். இதற்கேற்ப, அப்பகுதியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனதும் சாத்தியமானது” என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், “ டி.டி.வி தினகரன் தலைமையில் அ.ம.மு.க என அ.தி.மு.க உடைந்திருக்கும் நிலையில் சாதிய வேறுபாடுகள் கூர்மை அடைந்து இந்தத் தேர்தலில் வலுவாக எதிரொலிக்கும் வாய்ப்புகள் உண்டு. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில்கூட எதிர்க்கட்சியான தி.மு.கவே தென் மாவட்டங்களில் அ.தி.மு.கவை விட அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க கூட்டணியால் சிறுபான்மை வாக்குகள் விலகுவது, சாதிரீதியாக ஏற்பட இருக்கும் பிளவுகள், முதல்வர் வேட்பாளர் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துடன் அடையாளப்படுத்தப்படுவது போன்றவை தென் மாவட்டங்களில் அ.தி.மு.கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம். சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும் சசிகலா எடுக்கவிருக்கும் முடிவுகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்கிறார்.
`அ.தி.மு.கவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும், சீட் கிடைக்காத பலர் சசிகலா பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தவிர, அ.ம.மு.க வேட்பாளர்கள் அனைவருமே குக்கர் சின்னத்தில் நிற்பதும் அ.தி.மு.கவுக்குப் பெரும் பலவீனமாக அமையும். தேர்தலுக்குப் பிறகு சசிகலா கை ஓங்குமா.. எடப்பாடியின் கரம் கட்சியில் வலுப்படுமா என்பது தெரிந்துவிடும்” என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.