மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் (Indian Statistical Institute) கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. புள்ளியியல் பயன்பாடு தொடர்பான ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுவரும் இந்த பிரத்யேகக் கல்வி நிறுவனத்துக்கு சென்னை, பெங்களூரு, டெல்லி உள்பட 4 இடங்களில் கல்வி வளாகங்கள் உள்ளன. சென்னை வளாகம் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் செயல்படுகிறது.
கோவையில் இதன் தகவல் மையம் உள்ளது. இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் கணிதம், புள்ளியியல் பாடங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி என பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இங்கு படிக்கும் இளங்கலை மாணவர்கள் கல்வி உதவித்தொகையாக மாதம்தோறும் ரூ. 3 ஆயிரமும், முதுகலை மாணவர்கள் ரூ. 5 ஆயிரமும் பெறலாம் என்பது சிறப்பு அம்சம். அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இந்திய தேசிய கணித ஒலிம்பியாட் (Indian National Mathematical Olympiad-INMO) விருது பெற்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு ஏதும் இல்லாமல் நேரடியாகவே நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்திய புள்ளியியல் நிறுவனம், ஒரு மத்திய அரசு உயர் கல்வி நிறுவனம் என்பதால், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி வகுப்பினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு உண்டு. இறுதி ஆண்டில் கல்லூரி வளாக நேர்காணல்களும் நடத்தப்பட்டு மாணவர்களின் வேலைவாய்ப்புக்கும் உதவி செய்யப்படுகிறது. இங்கு படித்த மாணவர்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும், ஆராய்ச்சி அமைப்புகளிலும், வெளிநாட்டு நிறுவனங்களிலும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டு கொண்ட இளங்கலை புள்ளியியல் படிப்பு (B.Stat Hons) கொல்கத்தாவிலும், இளங்கலை கணித படிப்பு (B.Math Hons) பெங்களூரு வளாகத்திலும் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 கணிதப் பிரிவு மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேரலாம்.
2 ஆண்டு காலம் கொண்ட முதுகலை புள்ளியியல் படிப்பானது (M.Stat) சென்னை, டெல்லி வளாகங்களில் உள்ளது. இதில், புள்ளியியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்த பட்டதாரிகளும், பி.ஸ்டேட், பி.மேத் பட்டதாரிகளும் சேரலாம். அதேபோல், முதுகலை கணித படிப்பை (M.Math) பெங்களூரு வளாகத்தில் படிக்கலாம். இதில், பி.இ, பி.டெக் பட்டதாரிகள், பி.ஸ்டாட், பி.மேத் பட்டதாரிகள் சேரலாம். அதேபோல், முதுகலை பொருளாதாரப் படிப்பில் (M.S. Quantitative Economics) பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், இயற்பியல் பட்டதாரிகளும், பி.இ, பி.டெக் பட்டதாரிகளும் சேரலாம்.
தற்போது, இந்திய புள்ளியியல் நிறுவனமானது இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் (www.isical.ac.in) விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
எழுத்துத்தேர்வு (அப்ஜெக்டிவ் முறை மற்றும் விரிவாக விடையளிக்கும் முறை) தமிழகத்தில் சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் மே 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.