அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் குறித்த ரேஸில் அனல் பறக்கும் என்கிறார்கள்

`கொங்குமண்டலத்தின் ஆதிக்கம் ஏற்கெனவே அதிகமாக இருக்கு. இதுல அவைத்தலைவர் பதவியையும் கேட்கிறார்களா?” என்று அ.தி.மு.க-வில் அடுத்தகட்ட பஞ்சாயத்து ஆரம்பித்துவிட்டது எனப் புலம்புகிறார்கள் அ.தி.மு.க-வின் ர.ர-க்கள்.

அதிமுக-வின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இரண்டு தினங்களுக்கு முன்பாக மறைந்துவிட்டார். அதிமுக-வில் நீண்டகாலம் அவைத்தலைவர் பதவியை அலங்கரித்த மதுசூதனனின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தில் யாரை அமரவைப்பது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தநிலையில் அ.தி.மு.க-வில் குறிப்பிட்ட சில அதிகாரங்களைக் கொண்டுள்ள அவைத்தலைவர் பதவிக்குக் கடும் போட்டி எழுந்துள்ளது. ஏற்கெனவே அ.தி.மு.க-வில் உள்ள இரட்டைத் தலைமையால் கட்சிக்குள் காரம் அதிகமாக இருந்துவரும் நிலையில், அடுத்தகட்ட ஆட்டம் அவைத்தலைவர் பதவியைவைத்து ஆரம்பித்திருக்கிறது.

அவைத்தலைவர் ரேஸில் நடப்பது என்ன என்று அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “மதுசூதனனின் உடல்நிலை நலிவுற்றிருந்தபோதே, அ.தி.மு.க தலைவர்கள் மத்தியில் அவைத்தலைவர் குறித்த பேச்சு எழுந்துவிட்டது. தற்போது அவைத்தலைவர் பதவிக்குப் போட்டி ஏற்படக் காரணம், அ.தி.மு.க-வின் இரட்டை இலை குறித்த வழக்கில் தேர்தல் ஆணையம் அவைத்தலைவர் இருக்கும் அணிக்கே சின்னத்தை வழங்கியது. அதேபோல், பொதுக்குழு முதல் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகக் கூட்டங்கள் அனைத்தும் அவைத்தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகே நடக்கும்.

இப்போது அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாகத் தன்னை நிலைநிறுத்தப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு அவைத்தலைவரின் ஆதரவு மிக முக்கியம். எனவே, அவைத்தலைவர் பதவியைத் தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் வழங்கினால் எதிர்காலத்தில் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார். மேலும், கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் கூடுதல் தகுதியாக எடப்பாடி பார்க்கிறார். அவைத்தலைவர் பதவி என்பது கட்சியின் சீனியர்களாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் பதவியாக இருக்கிறது.

இந்தநிலையில் எடப்பாடியைவிட அ.தி.மு.க-வில் சீனியர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்களில் இருவரைத் தனது சாய்ஸாக நினைத்திருக்கிறார். ஒருவர் முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, அடுத்து முன்னாள் அமைச்சர் பொன்னையன். இந்த இருவருமே எம்.ஜி.ஆர் காலத்து ஆட்கள். கட்சியிலும் சீனியர்கள் என்பதால் இவர்களை நியமிக்க எந்த இடையூறும் வராது என்று எடப்பாடி கணக்கு போடுகிறார். இவர்கள் இருவருமே கொங்கு சமூகத்தினர் என்பது எடப்பாடிக்குக் கூடுதல் பலம்.

இந்தநிலையில், மதுசூதனன் வீட்டில் அஞ்சலி செலுத்திய பிறகு பன்னீர் தனக்கு நெருக்கமானவர்களுடன் தனது வீட்டில் பேசியிருக்கிறார். அப்போது “எடப்பாடி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கார். கட்சியின் அவைத்தலைவர் பதவியையும் கொங்கு மண்டலத்து ஆளுக்கே கொடுத்தா இது என்ன கொங்கு கட்சியா? இவர் பண்றது ஒண்ணும் சரியில்லை. என்னைக் கேட்காமல் அவர் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என்று கொந்தளித்திருக்கிறார். இதனால் அடுத்த சில நாள்களில் அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் குறித்த ரேஸில் அனல் பறக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.