மாறும் கூட்டணி !தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாத்தணும்னு டெல்லிக்கு போய் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை பாஜக தலைமை நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்குது. பாஜக தலைமையின் நடவடிக்கையால் போன வேகத்தில் திரும்பியிருக்கிறாங்க அதிமுக நிர்வாகிகள். எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லைன்னு அதிமுக தலைவர்களும், அண்ணாமலையும் மாத்தி மாத்தி சொன்னாலும் பிரச்சினை நீரு பூத்த நெருப்பாத்தான் இருக்குது. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில எந்த பிளவும் இல்லைன்னும் அதிமுக நிர்வாகிகளுக்கும் அண்ணாமலைக்கும் இடையில்தான் பிரச்சினைங்கிறது தெளிவாகவே தெரியவந்திருக்குது. நான் தலைவரானதே பாஜகவை ஆட்சியில அமர வைக்கணும்ங்கிறதுக்காகத்தான். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகணும்னு நான் சொல்ல மாட்டேன்னு பகிரங்கமாகவே பேசிக்கிட்டு வர்றார் அண்ணாமலை. அண்ணாமலையைப் பொருத்தவரையில் பலமுறை வெளிப்படையாக “அதிமுக வெற்றி பெறுவதை விட பாஜகவை வளர்ப்பதே எனது கடமைன்னு ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கிட்டு வர்றார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது லோக்சபா தேர்தலை தனித்தே சந்தித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகளை இணைத்து அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்து ஆட்சி அமைத்தார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எல்லாமே தலைகீழாகி விட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக உடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது அதிமுக. தேனி தவிர எந்த தொகுதியிலும் வெற்றி பெறலை. பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு அவரது பேச்சு எல்லாமே அதிமுகவிற்கும் நிர்வாகிகளுக்கும், தலைவர்களுக்கும் எதிராகவே இருக்குது. அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி கிடையாது”ன்னு எடப்பாடி பழனிசாமி தெரிவிச்சிருந்தார். அப்போ அண்ணாமலையும் கூட்டணி இல்லை என்றார். கூட்டணி அமைத்தால் நான் ராஜினாமா செய்யவும் தயார்னு பேட்டியும் குடுத்தார்.. “ஜெயலலிதா தமிழகத்தில் மோசமான முதல்வர். 1991-96 ஆண்டுகள் தான் லஞ்ச ஊழல் ஆட்சி நடந்ததுன்னு விமர்சனம் செஞ்சார். இந்த கருத்து அதிமுகவினரைக் கொதிப்படையச் செஞ்சது. அண்ணாமலைக்கு எதிராக கொந்தளித்தனர். இறுதியில் டெல்லி தலைமை அதிமுக தலைவர்களை அழைத்து சமாதானம் செய்ய, கூட்டணி தொடர்கிறது என அறிவித்துவிட்டனர். டெல்லி பாஜகவை எப்போதும் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதனால் ஒரே கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிபூசல்கள் போலவே தமிழகத்தில் அதிமுக பாஜக இடையே நடக்கும் சண்டைகளை பார்க்க முடியுது. அதனால்தான் இது அரசியல் டிராமான்னு புகழேந்தியும், திமுக தலைவர்களும் சொல்லிக்கிட்டே வர்றாங்க.
. இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தனன்னும் கிண்டலடிக்கிறாங்க கடந்த 15ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பாஜக தலைவர் அமித் ஷவை சந்திச்சார். அப்போதே தேர்தல் கூட்டணி பத்தி இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியானது. அந்த தகவல்களின் படி, பாஜக 2019 தேர்தலிலேயே கூறியதைப் போல எடப்பாடி தலைமையிலான அதிமுகவுடன் ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் இணைக்க விரும்பியதாக தெரியுது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ எந்தக் காலத்திலும் இவர்களுடன் ஒன்றிணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். பாஜக கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சின்னு பார்த்தா அதிமுக மட்டுமே. ஆனால் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்ய நினைத்த அமித் ஷா, தமிழகத்தில் உள்ள 40 தொகுதியில் 20 நாடாளுமன்ற இடங்களைக் கேட்டுள்ளார். ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடனும் இணைந்து செயல்பட விரும்புகிறது பாஜக. எனவேதான் தங்களின் பங்காக அமித்ஷா 20 சீட்டுகள் கேட்டதாக தெரியுது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியின் மூத்த உறுப்பினர்களை கேட்டு சொல்வதாக சொல்லிவிட்டு தமிழகம் திரும்பியிருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்குது. இந்த சூழ்நிலையில்தான் அண்ணா பற்றி பேசிய அண்ணாமலையை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்து விட்டனர் அதிமுக நிர்வாகிகள். அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிந்து விட்டது என்று கூறிய ஜெயக்குமார் கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். தேர்தல் நேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூட்டணி அமைக்கப்படும் என்றும் சொன்னார் ஜெயக்குமார். அதே நேரத்தில் இரு தினங்களுக்கு முன்பு பேசிய செல்லூர் ராஜூவோ, பாஜக உடன் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்றும் மோடிதான் பிரதமர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதல்வர் என்றும் பேட்டி அளித்தார். அதே நாளில் பேட்டி அளித்த அண்ணாமலையோ, பாஜக உடன் அதிமுகவிற்கு பிரச்சினை இருப்பதாக தெரியலன்னு சொன்னார். அண்ணாமலைக்கும் பாஜக தலைவர்களுக்கும் பிரச்சினை இருக்கலாம் ஆனால் அது எனக்கு தெரியாதுன்னும் சொல்லி சமாளித்தார். அரசியலுக்காக தன்மானத்தை விட்டுத்தர மாட்டேன் என்று சொன்னார் அண்ணாமலை. கூட்டணி கட்சிகளிடையே முட்டல் மோதல் இருப்பது சகஜம்தான் என்றும் சொன்னார். எடப்பாடி பழனிச்சாமியோ இதுவரை எந்த ஒரு வார்த்தையும் இந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பற்றி வெளிப்படையாக சொல்லவேயில்லை. அதே நேரத்தில் கூட்டணி பற்றியோ, பாஜக தலைமை பற்றியோ வெளிப்படையாக பேசக்கூடாது என்று உத்தரவிட்டதாக தெரியுது. அதையும் கேட்காமல் செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் பேசியது எடப்பாடி பழனிச்சாமியை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். இந்த நிலையில்தான் அதிமுக மூத்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை மாலை டெல்லி புறப்பட்டு போனாங்க. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி. முனுசாமி, அதிமுக எம்.பி. தம்பிதுரை இவங்கள்லாம் பாஜக தலைவரிடம் பேசியதாக தெரியுது. இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றணும்ங்கிறதுல அதிமுக உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை பாஜக தலைமை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு எங்களை சந்திக்க வந்தது ஏன் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அதிமுக தலைவர்களிடம் கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுது. இதே கோரிக்கையோடு அமித்ஷாவை சந்திக்க இருந்த நிலையில் அதிமுக நிர்வாகிகளை அமித்ஷா சந்திக்கவேயில்லை. தங்களது கோரிக்கை நிறைவேறாததால் அதிமுக தலைவர்கள் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் வேலுமணி, தங்கமணி ஆகியோர் கோவை திரும்பினர். அதேநேரத்தில் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்னை விமானநிலையத்துக்கு நேற்று பிற்பகலில் திரும்பினர். கோவை மற்றும் சென்னை வந்த மாஜி அமைச்சர்கள் யாரும், எடப்பாடியை காலையில் சந்திக்கவில்லை. தோல்வி விவகாரம் வெளியில் தெரிந்தால் கெட்ட பெயர் வரும். பத்திரிகையாளர்களை யாரும் சந்திக்க வேண்டாம்ன்னு நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவிட்டிருக்காராம் இதனால் மூத்த நிர்வாகிகள் யாரும் பத்திரிகையாளர்களை சந்திக்கவேயில்லை. அதேநேரத்தில் டெல்லி சென்ற தலைவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டிருக்குது.
சி.வி.சண்முகத்திற்கு அதிமுக தலைவர்கள் பாஜ தலைவர்களின் காலில் விழுந்து கிடப்பது பிடிக்கவில்லை. எதற்காக அவர்களை தொங்கிக் கொண்டு, அண்ணாமலையை மாற்றணும்னு ஏன் சொல்லணும். நாம்தான் கூட்டணியில் இருந்து வெளியேறிட்டோம்னு சொல்லிட்டோமே? கூட்டணி தேவைன்னா அவங்கதானே வரணும். நாம் ஏன் போய் புகார் பண்ணனும். அதனால்தான் அவர்கள் மதிக்கவலைன்னு கோபத்தில் கத்துனாராம். அண்ணாமலை கட்சிக்கு வந்த பிறகு இளைய தலைமுறையினர் பலரும் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். இப்போது அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் பாதயாத்திரை இளைய தலைமுறையினரிடம் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது. எனவேதான் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தலைமையை மாற்றும் எண்ணம் எதுவும் பாஜக தலைமைக்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கெல்லாம் பின்னணியில் விஷயம் இல்லாமல் இல்லை..பாஜக போனாலும் பரவாயில்லை.காங்கிரஸோட கூட்டணிக்கு நான் ஏற்பாடு பண்றேன்னு காங்கிரஸோட அரசியல் ஆலோசகர் சுனில் வாக்குறுதி குடுத்திருக்கிறாராம் அதிமுகவுடன் விசிக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே கூட்டணி வைக்க விரும்புவதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தையும் மறைமுகமாக துவங்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. திமுகவுடன்தான் கூட்டணி என்பதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருந்தாலும், மற்ற சில தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணிக்கு விரும்புகிறார்களாம்.. இன்று தமிழகத்தில் வாக்குகளை தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாக விசிக திகழ்கிறது.. அதற்கான முக்கியத்துவமும், அரசியல் களத்தில் பெருகி வருகிறது. தற்சமயம் திமுக கூட்டணியில் இருந்தாலும்கூட, அதிமுகவின் நன்மைக்காக பலமுறை அறிவுறுத்தல்களை சொல்லி வருகிறார் என்றாலும், இதனால், அதிமுகவுடன் விசிக கூட்டணி வைக்க போகிறதோ? என்ற சந்தேகம் இந்த முறையும் எழுந்தபடியே உள்ளது.. அதற்கேற்றவாறு, அதிமுகவின் கூட்டணி முடிவை வரவேற்று திருமாவளவன் தற்போது பேசியிருந்ததும் பார்க்கப்பட்டு வருகிறது.அதிமுக சார்பில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் திருமாவளவன் பேசிகிட்டு வர்றாராம் இதுபோலவே, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஒரு எண்ணம் இருப்பதாக தெரிகிறது.. கடந்த தேர்தலின் போதே அதிமுகவுடன் கூட்டணி வைக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சி பண்ணதாக ஒரு பேச்சு இருந்தது.. அதனால், இந்த முறை, பாஜக இல்லாத அதிமுகவுடன் இணைய, கம்யூனிஸ்ட்கள் தயங்காது என்கிறாங்க.. கூடுதல் சீட் பெறுவதுடன், ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள வாக்குகளை அறுவடை செய்ய முடியும்ன்னும் கணக்கு போட வாய்ப்புள்ளதாம். போதாக்குறைக்கு, இண்டியா கூட்டணியிலும் உரசல்வந்துவிட்டது..ஆக, திமுக கூட்டணியில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலோ அல்லது கேட்ட இடம் கிடைக்காமல் போனாலோ, கூட்டணியில் விரிசல் வர நிறையவே வாய்ப்புள்ளதாக தெரியுது. அந்தவகையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக கட்சிகள் அதிமுக பக்கம் துண்டை போட்டு வருவதாக சொல்கிறார்கள்.. இதில் காங்கிரஸ் 20 சீட் கேட்டதாகவும், அதற்கு அதிமுக ஓகே சொல்லிவிட்டதாகவும்கூட தகவல்கள் வருது. அரசியலில் எதுவும் மாறலாம் என்பதால், எதையுமே இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!