‘அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா ? சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கேள்வி ?

‘அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா? ஒவ்வொரு முறையும் உயிர் பலி தரப்பட வேண்டுமா?’ என, ‘போர்வெல்’ விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம், சாட்டையடி கேள்வி எழுப்பியது. இதற்கு முன், சட்டவிரோத பேனர் பிரச்னையில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது போல், ஆழ்துளை கிணறு விஷயத்திலும், சரமாரியான உத்தரவுகளை, உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

திருச்சி, மணப்பாறை அருகே, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தை சுஜீத் வில்சன், மாலை விழுந்தான். உயிருடன் சிறுவனை மீட்பதற்கு, எவ்வளவோ முயற்சிகள் செய்தும், பலன் அளிக்கவில்லை. கடைசியில், நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான். இதற்கிடையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய, விஞ்ஞானி பொன்ராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருப்பதாவது:ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும், ஆழ்துளை கிணறுகள் விஷயத்தில், சிறப்பு சட்டம் இயற்றவும், அதை கண்டிப்புடன் அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், பஞ்சாயத்துகளில் கிணறுகள் தோண்டுவதை ஒழுங்குபடுத்தும் விதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தியது. ஆனால், இந்த விதிகளை அமல்படுத்தவில்லை. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற தவறியது தான், தற்போது, திருச்சி அருகே சிறுவன் விழுந்த சம்பவத்துக்கு காரணம்.இது போன்ற சம்பவம் நடக்கும்போது, தமிழக அரசிடம் எந்த தீர்வும் இல்லை; தொழில் நுட்பமும் இல்லை. நவீன தொழில்நுட்பங்களுடன் மீட்புப் பணிகள் தயாராக இல்லை என்றால், மக்களின் உயிருக்கு ஆபத்து தான். எனவே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிமுறைகள், பஞ்சாயத்து ஒழுங்குமுறை விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்துக்கு, நேற்று விடுமுறையாக இருந்தும், இம்மனு, அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய டிவிஷன் பெஞ்ச், வழக்கை விசாரித்தது.மனுதாரர் தரப்பில், ‘உச்ச நீதிமன்றம், வழிமுறைகள் பிறப்பித்தும், 2012 ல், திருவண்ணாமலை மாவட்டத்தில் இது போன்ற விபத்து நேர்ந்தது. நவீன தொழில்நுட்ப வசதிகள் இங்கு இல்லை’ என, தெரிவிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:சட்டம், விதிகளை அமல்படுத்த, ஒவ்வொரு முறையும் உயிர் பலி தரப்பட வேண்டுமா? ஆழ்துளை கிணறுகள் தோண்டுவது தொடர்பாக, ஏற்கனவே சட்டம் உள்ளது; அதை, ஏன் முறையாக அமல்படுத்துவதில்லை ? மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை, ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும். ஆழ்துளை கிணறுகள் தோண்ட, அரசு ஏற்படுத்திய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து, பொது மக்களுக்கு தெரியப்படுத்த, ஊடகங்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.

சமூக பொறுப்புடன் தனி மனிதனும் செயல்பட வேண்டும். அப்போது தான், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.அரசு ஏற்படுத்திய சட்டங்கள், விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, அதிகாரிகளும் பார்ப்பது இல்லை.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி வாதாடியதாவது:ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது. அதிகாரிகள், பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள் முயற்சிகளை மேற்கொண்டும், சிறுவனை உயிருடன் மீட்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஆழ்துளை கிணறுகள் தோண்ட, எத்தனை அனுமதி வழங்கப்பட்டது; அனுமதி வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பட்டியல்; கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு பட்டியல்; விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகிய விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வழக்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலர்கள் சேர்க்கப்படுகின்றனர்.பதில் மனுவை, இந்த துறைகள், நவ., 21க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.