மாணவர்களுக்கு காலை உணவு தரும் அக்ஷயா பாத்ரா திட்டம் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் ஆன்மிகக் கருத்துகளை காட்டி பாராட்டி பேசினார். இதோ அவரது பேச்சில் இருந்து சில தகவல்கள்.
சாதி மத வேறுபாடு இன்றி, மனித இன மேம்பாடு ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு, ஏழை எளிய மக்கள் பசியாற, அன்னம் அளிக்கும் அருஞ் சேவை ஆற்றிவரும், அட்சய பாத்ரா அறக் கட்டளையின் சார்பில், சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவச் செல்வங்களுக்கு, காலை உணவை வழங்கிடும் உன்னத நோக்கத்தை நிறை வேற்றிட, சிறந்த நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் பங்கேற்கின்ற நல்வாய்ப்பை எனக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தானத்தில், அன்னதானம், வித்யா தானம், தண்ணீர் தானம், பொருள் தானம், பண தானம், கண் தானம், ரத்த தானம், உடலுறுப்பு தானம் என பல வகையான தானங்கள் இருக்கின்றன. இவற்றுள் தலையாய தானமாக, தானங்களிலேயே சிறந்த தானமாக, அன்னதானமே விளங்குகிறது.
ஒருவர் உணவு உண்டு பசியாறிய பின்பு, இலையில் அமிர்தமே பரிமாறினாலும், அவர், போதும்! என்று சொல்லிவிடுவார். அன்னதானத்திற்கு அப்பேர்ப்பட்ட சிறப்பு உள்ளது. அன்றொரு நாள், அகிலத்தைக் காக்கும் திருமாலின் அவதாரமான பகவான் ஸ்ரீகிருஷ்ணர், துவாரகையில், பக்தியில் ஆழ்ந்திருந்தார்.
அதைக் கண்டு வியப்புற்ற, அருகிலிருந்த ருக்மணிதேவியின் மனதில், ஒரு பெருத்த கேள்வி எழுந்தது. “”””உலக உயிர்கள் எல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குகின்றன. ஆனால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யாரை வணங்குகிறார்?”” என்பதே அந்தக் கேள்வியாகும். தனது மனதில் எழுந்த இந்த கேள்வியை, பகவானிடம் நேரில் கேட்டார் ருக்மணி தேவி. அதற்கு ஸ்ரீகிருஷ்ணர், ஆறு பேரை, தான் வணங்குவதாக பதில் உரைத்தார்.
மனிதர்கள் வாழும் பூமியில், நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்.
1. தினமும் அன்னதானம் செய்வோர்,
2. தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,
3. வேதம் அறிந்தவர்கள்,
4. சஹஸ்ர சந்திர தரிசனம் செய்தோர் அதாவது சதாபிஷேகம் செய்து கொண்டோர்.
5. மாதாந்தோறும் உபவாசம் இருப்போர்,
6. பதிவிரதையான பெண்கள்,
இந்த ஆறு பேரை நான் வணங்குகிறேன் என்று பதில் கூறினாராம் கிருஷ்ண பரமாத்மா. தான் வணங்கத்தக்கவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அன்னதானம் செய்பவரே என்று பகவான் கிருஷ்ணரே தெரிவித்துள்ளார்.
இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான், பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள், இளவயதில் தான் சந்தித்த பசித் துன்பத்தை, இனி எவரும் அனுபவிக்கக் கூடாது என்றும் பசியின் காரணமாக பள்ளி செல்லாமல் இருத்திடக் கூடாது என்றும் உயர்ந்த எண்ணத்துடன் சிந்தித்து, இந்தியாவில் வேறெங்கும் இல்லாத திட்டமான சத்துணவுத் திட்டத்தினை 1982ம் ஆண்டு தொடங்கினார். புரட்சித்தலைவி ஆலயங்களில் மதிய உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
அக்ஷய பாத்ரா அறக்கட்டளை இந்திய நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு, இலட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவை அர்ப்பணிப்பு உணர்வுடன் அளித்து வருவதையும், தற்போது 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 16,856 பள்ளிகளில் உள்ள 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவினை வழங்கி மகத்தான சேவை ஆற்றி வருவதையும் அறிந்து,
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே இந்த அறக்கட்டளை அமைப்பு, தமிழகத்தில், சென்னை மாநகராட்சியின் உதவியுடன், சென்னையில் 24 பள்ளிகளில் பயிலும் 5785 குழந்தைகளுக்கு தினந்தோறும் காலை உணவினை அளித்து வருவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாகும்.
இந்த மனித நேயப் பணியின் தொடர்ச்சியாக, இன்று பூமி பூஜை போடப்படும், நவீன வசதிகளுடன் அமையவிருக்கும் சமையற் கூடம் வாயிலாக சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12000 பிள்ளைகளுக்கு சத்தான காலை உணவினை வழங்க அக்ஷய பாத்ரா அமைப்பு திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக,
அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ மதுபண்டிட் தாசா அவர்களுக்கும், அறக்கட்டளையின் ஏனைய பொறுப்பாளர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்