தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 19,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், ஆயுத பூஜையை முன்னிட்டு முதன்முறையாக 6,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னையிலுள்ள தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

சென்னை மற்றும் பிற நகரங்களில் வேலை காரணமாக தங்கியிருக்கும் மக்கள், ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சிறப்பு பேருந்துகளை இந்த ஆண்டும் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறினார்.

இதேபோல் பிற ஊர்களிலிருந்து 8 ஆயிரத்து 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக வருகிற 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை 6 ஆயிரத்து 145 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் கூறினார்.திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு 280 பேருந்துகளும், கோயம்புத்தூரிலிருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும், பெங்களுரிலிருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 மையமும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் 1 மையமும் என மொத்தம் 30 மையங்கள் திறக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு சிறப்பு முன்பதிவு மையங்கள் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையும், பிற மையங்கள் 3ம் தேதி முதலும் செயல்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த அலுவலர் உட்பட 18 பணியாளர்களுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.’ஆன்லைன்’ முறையில் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்யலாம்.