புறா பந்தயத்தைப் பின்னணியாக வைத்து பைரி என்ற பெயரில் ஒரு படம் வந்துள்ளது. அப்படீன்னா இது தனுஷ் நடித்த மாரி படம் போல் இருக்குமோங்கிற சந்தேகம் வரலாம். மாரி’ படத்தில் இடம்பெற்று இருப்பது கரண புறா பந்தயமாம்.. அந்த புறா பல்டி அடிக்கும். அந்த புறா எத்தனை பல்டி அடித்தது என்பதை வைத்து, வெற்றியை அறிவிப்பார்கள். பைரி படத்தில காண்பிக்கிறது சாதா புறா அல்லது வளர்ப்பு புறா பந்தயம் இதனை டிப்ளர் ரேஸ்னு சொல்வார்கள். இந்த பந்தயத்தில் புறா காலில் முத்திரை போட்டு பறக்க விடுவார்கள். பைரி என்றால் புறாக்களை வேட்டையாடும் ஒருவகை கழுகு இனமாம். அந்த பைரியிடம் சிக்காமல் எவ்வளவு மணி நேரம் புறா அதிகமாக பறக்கிறது என்பதை வைத்து, வெற்றியை அறிவிக்கிறார்கள். ஆக மாரி படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்பந்தமில்லை .இப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி, ‘நாளைய இயக்குநர் சீஸன் 5’ இல் பங்கேற்றவர். குறும்படமாக வந்த ‘பைரி’தான் அதே பெயரில் இப்போது படமாகியுள்ளது.!வட்டார வழக்குடன் சரியாகச் சொல்லப்படுகின்ற அந்தந்த மண் சொல்லும் கதைகள் எப்போதுமே ரசிக்கப்படும். அந்த வகை முயற்சியாக வந்திருக்கிறது இந்த பைரி.நாயகன் சையத் மஜீத்துக்கு அவரது மூதாதையர் போலவே புறா வளர்ப்பு மற்றும் பந்தயத்தில் ஆர்வமும், ஆசையும் இருக்க, அதனாலேயே சீரழிந்த குடும்பம் என்பதால் அவரது தாய் விஜி சேகர், மகன் அந்தப்பக்கம் போகாமல் பார்த்துக் கொள்கிறார்.

புறா வளர்க்க கூடாது என்று தனது மகன் சபீரை தாய் விஜி சேகர் எவ்வளவோ முறை கண்டிப்பதும் ஒரு கட்டத்துக்கு பிறகு தனது தாய் சொல்லை மீறி புறா வளர்க்க தொடங்கும் சபீர் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதுபோல் அம்மாவையே வாடி போடி என்று திட்டி தீர்க்கும் அளவுக்கு கோபமாவதும், சபீருக்கு தோழனாக வரும் ஜான் கிளாடியை தன் மகன் கெட்டுப் போவதற்கு நீதான் காரணம் என்று சபீர் தாயார் திட்டி தீர்ப்பதும் கன்னியாகுமரி வட்டார வழக்காம்? வெறுப்பு தான் வருது. இப்போதைய இளைஞர்கள் ஒரு சினிமாவில் நாயகன் என்ன செய்தாலும் தன்னுடைய வாழ்க்கையிலும் அதனை செய்யலாம் என்ற எண்ணத்திற்குள் செல்கின்றனர். படத்தை படமாக பார்க்காமல் அதில் இருக்கும் நெகடிவ்வை விரைவாக எடுத்துக்கொண்டு அதை கெத்து என்று நினைக்கிறார்கள் இப்படி இருக்கையில் பைரி படம் கன்னியாகுமரியில் நடக்கும் உண்மை சம்பவத்தை எடுத்துரைத்தாலும் ஹீரோ எல்லோரையும் அடித்துக்காயப்படுத்திக் கொள்வதுடன் தனது அம்மாவையே டி போட்டு பேசித் திரியும் காட்சிகளை கெத்து என்று நினைத்துக் கொள்ளாமல் இது கதைக்காக வைத்திருக்கும் காட்சிகள் என்று ரசிகர்கள் நம்ப வேண்டுமே என்ற கவலை வந்து விடுகிறது. படம் முழுக்க மூச்சு விடாமல் பேசறாய்ங்க… பேசறாய்ங்க… பேசிக்கிட்டே இருக்காய்ங்க, எல்லோருமே  படு வேகமாக பேசி அதை நாஞ்சில் வட்டார வழக்கு மொழி என்று சொல்லி விட்டால் மட்டும் ரசிகருக்கு புரியுமா என்ன?அதிலும் இடையிடையே அதிக அளவில் நாகர்கோவில் வட்டார கெட்ட வார்த்தைகளை பேசுகிறார்கள்.சென்சார் அனுமதிக்குமா? கடைசி வரை தொடரும் வில்லுப்பாட்டு பின்னணி இரண்டும் பெரிய வில்லங்கம். அப்புறம் எதற்கு திரைமொழி ? கடைசியில் புறாப் பந்தயப் பின்னணியில் நாஞ்சில் மொழியில், சாதாரண வெட்டுக்குத்து கதைதான் வருகிறது.

சையத் மஜீத்தின் நடிப்பு அவரது பாத்திரத்தின் இயல்பை சரியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அந்தப் பாத்திரத்தை ரசிக்க முடிகிறதா என்பதுதான் கேள்வி.

அம்மா உட்பட அத்தனை பேருடனும் முரண் கொண்டு முரண்டு பிடிக்கும் அவரை ஒரு ஹீரோவாக ரசிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனாலும் அறிமுக நடிகர் என்கிற பதற்றமோ, பயமோ, அனுபவமின்மையோ தெரியாமல் அற்புதமாக நடித்திருக்கிறார் மஜீத்.

கேமராமேன் ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவில் நாகர்கோவில் அழகும், அம்மக்களின் வாழ்வியலும் நேர்த்தியாகவே உள்ளது . அருண் ராஜின் இசையில் பாடல்கள் அந்த நொடியில் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை மோசமில்லை ரகம்தான்.

அவரது நண்பராக நடித்திருக்கும் ஜான் கிளாடி தான் இந்த பட இயக்குனரும் என்பது ஆச்சரியமான தகவல். இடியே விழுந்தாலும் சிரித்துக் கொண்டிருக்கும் அவரது கேரக்டர் தமிழ் சினிமாவுக்குப் புதிது. என்றாலும், அவரால்தான் தன் மகன் கெட்டுப் போகிறான் என்று நம்பும் சையத்தின் தாய் விஜி சேகர், ஜானின் தாயைப் பாலியல் தொழிலாளி என்றெல்லாம் வீடேறி வந்து திட்டும் போதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல், அதிராமல் இருப்பது என்ன மாதிரிக் கேரக்டர் என்று தெரியவில்லை.

சையத் மஜீத்துக்கு இரண்டு ஜோடிகள். அவரை விரும்பும் சரண்யா ரவிச்சந்திரனும், அவர் விரும்பும் மேக்னா எலனுமாக இருக்க,  ஜான் கிளாடிக்கும் ஆசை நாயகி ஒருத்தியும் காதல் நாயகி இன்னொருத்தியுமாக இருக்கிறார்கள்.

இந்த சாமானியர்கள் இப்படி இரட்டைக் குதிரை சவாரி செய்வதெல்லாம் இயல்பு வாழ்க்கையில் சாத்தியமா என்றே தெரியவில்லை.

மெயின் வில்லனாக வரும் வினு லாரன்ஸ் கேரக்டரை வில்லன் என்பதாலேயே கொடூரமானவராகக் காட்டுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அவர் பேசுவதிலும் நடந்து கொள்வதிலும் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.புறா பந்தயத்தில் அவர் செய்யும் தில்லுமுல்லுகளை சையத் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதையின் உயிர் நாடி.

ஆனால் அவர் என்ன விதமான தில்லுமுல்லு செய்தார் என்பது பார்வையாளர்களாகிய நமக்குப் புரியவே இல்லை ?. வானத்தில் புறா தெரிகிறது என்று அவர் சொல்லும்போது எல்லோருக்குமே அந்த புறா தெரியதான் செய்கிறது. அப்புறம் எப்படி அந்த பந்தயம் தில்லுமுல்லாகிறது என்று புரியவில்லை.

அதைக் காரணம் காட்டி அவரது வல்லமை பற்றி உடன் இருப்பவர்கள் சொல்லியும் ஓவராக ஏகிறும் சையத் மீது நமக்கே ஒரு கட்டத்தில் கோபம் வருகிறது. அத்துடன் அவர்களுக்குப் பாதுகாவல் அரணாக நிற்கும் ரமேஷ் பண்ணையார் என்ற கேரக்டரைக் கூட மதிக்காமல் சையத் சலம்புவது கொஞ்சம் கூட இயல்பானதாக இல்லை. இப்படிப் படத்தின் திரைக்கதையிலும், பாத்திரப் படைப்பிலும் நிறைய சறுக்கல்கள் இருப்பதால் படத்தின் உண்மைத் தன்மையுடன் நம்மால் ஒன்ற முடியவில்லை.

படத்தில் பெரும்பாலும் சத்தமும் சண்டைமாகவே நகர்வதால் கதையின் ஜீவன் நம்மை பாதிக்கவே இல்லை. புறாவை பந்தயத்திற்கு எப்படித் தயார் செய்கிறார்கள் என்பதைப் பற்றிய எந்த விதமான புரிதல்களும் இல்லாமல் சும்மாவே வானத்தில் புறாவை பறக்க விட்டு டைம் பார்த்துக் கொண்டிருப்பது புறா பந்தயத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கிறது.

பைரி என்றால் புறாக்களைத் தாக்கும் ஒரு கழுகு இனமாம். அதைத் தலைப்பில் வைத்த காரணமே புறாக்கள் தாக்கப்படுவது போல புறா பந்தயக்காரர்கள் வலிமைமிக்க தாதாக்களிடம் மல்லுக்கட்டி மடிந்து போகிறார்கள் என்பதைச் சொல்லத்தான்.ஆனால் பைரி என்றால் என்ன என்பதைப் படம் பார்த்தே புரிந்து கொள்ள வேண்டும் என்கிற அளவில் இதுபோன்று தலைப்பு புரியாத நல்ல படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் வேலைக்கு ஆனது இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.படத்தின் ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்தகுமாரும் படத்தொகுப்பாளரும் இதை ஒரு கொரியன் படத்தைப் போன்று நேர்த்தியாகத் தந்திருப்பதில் இதை ஒரு நல்ல படம் போன்று நம்ப  வைக்கிறது.

அதில் அருண் ராஜின் இசையும் கை கோர்த்திருக்கிறது.ஆனால் சம்மட்டியை எடுத்துக் கொண்டு போய் எதிராளிகளின் நெஞ்சிலும், கால்களிலும் மடார் மடார் என்று நாயகன் அடிக்க அடிபட்டவர்கள் அடுத்த காட்சியிலேயே எழுந்து வந்து வசனம் பேசிக் கொண்டிருப்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத விஷயங்கள்.

புறா காட்சிகளில் கிட்டத்தட்ட படத்தில் சிஜி ஷாட்கள் மிகச் சரியாகவே இருக்கின்றன..புறா என்றதும் அதன் அழகான தோற்றம், காதல் தூது என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் நினைவுக்கு வரலாம். இப்போது அந்த லிஸ்ட்டில் பலருக்கும் புறாப் பந்தயமும் சேர்க்க ஆசைப்பட்டு எடுக்கப் பட்ட படத்தில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் இதுவும் கோலிவுட்டில் ரிலீஸான பட லிஸ்டில் ஒரு நல்லபடமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விட்டார்கள்!

 

Related posts:

‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்

’ஓஹோ எந்தன் பேபி’ படத்தை பாராட்டிய பாலிவுட் நடிகர் அமிர்கான்!

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர்  கதாநாயகனாக அறிமுகமாகும் 'லவ்வர் பாய்' திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்துள்ளார்!*

India’s First Arthroscopic Rotator Cuff Repair with Patch Augmentation using ArthroFlex® at Chennai Upper Limb Unit !

"18 மைல்ஸ்" படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்..!

”‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது” - யுவன் ஷங்கர் ராஜா!

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகம்!

வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்!