மின் வினியோக சாதனங்களில், சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க, தமிழக அரசு, தனி சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியம், மின் வினியோகம் செய்வதற்கு, மின் கம்பங்கள், ‘பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார்மர்’ உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துகிறது. இவற்றில், 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி, அந்த சாதனங்களை, மின் ஊழியர்கள் தவிர, வேறு யாரும் தொடக் கூடாது. இருப்பினும், அவற்றில், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், விளம்பர போஸ்டர்களை ஒட்டுகின்றனர். அதை தடுக்க, மின் வாரிய அதிகாரிகளும், எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், பல கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் சாதனங்கள், விரைவில் பாழாவதுடன், மின் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.சென்னையில், சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த, பேனர் சரிந்து விழுந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற, பல்லாவரத்தை சேர்ந்த தனியார் நிறுவன மென்பொறியாளர், சுபஸ்ரீ, 27,சமீபத்தில் உயிரிழந்தார். சாலையை ஆக்கிரமித்து, அரசியல் கட்சியினர் கட்டிய பேனரால், இளம்பெண் உயிரிழந்தது, பொது மக்களிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும், பேனர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனால், தி.மு.க., – அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ‘பேனர்கள் வைக்கக் கூடாது’ என, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளன.இதேபோல், நடிகர்களும், தங்களின் புதுப்படங்கள் வெளியாகும்போது, ‘பேனர்கள் வைக்கக் கூடாது’ என, ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனால், பேனர் கலாசாரம் முடிவுக்கு வந்துள்ளது. வீட்டு வாசல், அரசு கட்டடங்கள், சாலை தடுப்புகள், மின் சாதனங்கள் என, கண்ட இடங்களில், போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என, அரசுக்கு, பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக, மின் சாதனங்களில், போஸ்டர்கள் ஒட்டு வதற்கு, தமிழக அரசு, தனி சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது.இது குறித்து, மின் துறை அமைச்சர் தங்கமணி, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அளித்த பேட்டி:மின் சாதனங்களை தொடவே அனுமதி இல்லாத நிலையில், சிலர் அவற்றில், போஸ்டர்களை ஒட்டுகின்றனர். இதை தடுக்கும் வகையில், என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய, தனி சட்டத்தை, தமிழக அரசு இயற்ற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, முதல்வர், இ.பி.எஸ்., விரைவில் அறிவிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.