தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு முடிவு செய்ய உள்ளது.நாட்டின் பல பகுதிகளிலும் தெருவோர தள்ளு வண்டி கடைகள், நடமாடும் கடைகள் உள்ளன. இவை தற்போது அந்தந்த மாநில அரசுகள், நகராட்சி, மாநகராட்சிகளால் சில இடங்களில் முறைப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், நடமாடும் கடைகளுக்கான பணிமனை டெல்லியில் சமீபத்தில் நடந்தது. இதை தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் ஊரக விவகார அமைச்சக செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா கூறியதாவது: தெருக்களில் தள்ளுவண்டி போன்ற நடமாடும் கடைகள் வைத்துள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்குவது, சட்டரீதியான அனுமதி தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதுவரை, நாடு முழுவதும் 2,430 தெருக்களில் உள்ள சுமார் 18 லட்சம் சாலையோர வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை தெருவோர வியாபாரிகள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுளளது. இதுதவிர, 2,344 தெருவோர வியாபாரிகள் கமிட்டி அமைக்கப்பட்டு, 9 லட்சம் பேருக்கு அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகள் சட்டத்தை செயல்படுத்தியதில் மாநில வாரியான தர வரிசை பட்டியல் இந்த பணிமனையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி தமிழக அரசு 100க்கு 75 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மிசோரம், சண்டிகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த சட்டத்தை செயல்படுத்தியதில் 9 மதிப்பெண்கள் மட்டுமே வாங்கி நாகலாந்து மிக மோசமான இடத்தை பிடித்துள்ளது. இதுபோல், மணிப்பூர், கர்நாடகா, சிக்கிம், மேற்கு வங்கம் மாநிலங்களும் இந்த சட்டத்தை போதுமான அளவு செயல்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.