தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர்.தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். கடந்த 1995-ம் ஆண்டு வெளியான விஜயின் ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்தார். அவர் தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.பவர் ஸ்டாருடன் இணைந்து ‘பிக்கப் ட்ராப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே, தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இப்படத்தில், நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வனிதா விஜயகுமார் இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் படம் இது . பாங்காக் பின்னணியில் சொல்லப்பட்ட கதைக்களம் எந்த மாதிரியானது என்பதை பார்ப்போம்.
கதைப்படி ஷகீலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்து கொள்கிறார். இதில் ராபர்ட் குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்கிற முடிவில் இருக்கிறார். ஆரம்பத்தில் வனிதாவும் ஏறக்குறைய அந்த முடிவில் தான் இருந்தார். ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை என்றால் வாழ்வதே வேஸ்ட் என்று தோழிகள் சிலர் வனிதாவை தூண்டி விட, இதனால் 40 வயதில் தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் வனிதா. இதனால் இவர்கள் இருவரிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் நேரத்தில் வயிற்றில் கரு தங்குகிறது. அதை கணவரிடம் சொல்ல முடியாத சூழலில் பாங்காக்கில் இருந்து தன் சொந்த ஊரான சித்தூர் வந்து விடுகிறார். வனிதாவும் ராபர்ட்டும் மீண்டும் சேர்ந்தார்களா? குழந்தை விஷயத்தை ராபர்ட் எப்படி எடுத்துக் கொண்டார் என்பது படத்தின் மீதிக்கதை. 40 வயதை ஒட்டிய பெண்களின் மனதை உளவியல் ரீதியாக யதார்த்தமாக கையாண்டிருக்கிறார் வனிதா. சில துணிச்சலான விஷயங்களையும் இன்றைய இளைய சமுதாயம் விரும்பும் வகையில் காமெடியாக படத்தைக் கொண்டு போயிருக்கிறார்.
40 வயதுக்கு மேலான தம்பதிகளின் குழந்தையின்மை பிரச்சனையை மையக்கருவாக எடுத்துக் கொண்டவர், திரைக் கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஷகிலாவுக்கு இப்போது கூட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை படத்தில் வரும் இரண்டுகேரக்டர்கள் மூலம் முழுமையாகவே சொல்லி இருக்கிறார் வனிதா. ஆனாலும் பவர் ஸ்டார் சீனிவாசன் கையில் மஞ்சள் கயிற்றுடன் ஷகீலாவை தேடி அவர் வீட்டுக்கு வருவதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களில் ஸ்ரீமன் மட்டும் தனித்து தெரிகிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். அதே நேரம் பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார். குறிப்பாக சிவராத்திரி பாடல் இடம் பெறும் சூழல் கிளுகிளுப்பை ஏற்படுத்தும். ஆர்த்தி, கிரண், பாத்திமா பாபு ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக செய்துள்ளனர். நாயகியாக நடித்ததோடு படத்தை இயக்கவும் செய்திருக்கிறார் வனிதா விஜயகுமார். 40 வயதை தாண்டிய தம்பதிகளின் பிரச்சினையை இன்னும் கொஞ்சம் வலுவாக அணுகி இருந்தால் இந்த மிஸஸ் அண்ட் மிஸ்டரை கொண்டாடி இருக்கலாம்.
