கதா நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துக் கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்று மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறார்கள். பருவமழை பொய்த்தது, கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு என கிராமமே வறண்ட பூமியாக மாறிவிட, அக்கிராமத்தில் இருப்பவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அங்குள்ள கே ஜி எஃப் ராமின் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்கின்றனர். இந்நிலையில் கருவேலமரமே தனக்கான முதலீடு என்று அதை வணங்கியும் வருபவர் தான் கே ஜி எஃப் ராம். அக்கிராமத்தைச் சுற்றிலும் கருவேல விதைகளை தூவியும் வருகிறார் ராம். அதே சமயம் விமல் மற்றும் சூரி இருவரின் ஆட்டத்தை பொறுக்க முடியாத மரக்காத்தூர் கிராம மக்கள், விமலை நாடு கடத்த திட்டமிடுகின்றனர். தெரிந்த ஒருவர் மூலமாக கிராம மக்கள் அனைவரும் பணம் செலுத்தி விமலை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர். போன சில நாட்களிலே மீண்டும் கிராமத்திற்கு வந்துவிடுகிறார் விமல். கிராமத்திற்குச் சென்றால் அனைவரும் துரத்துவார்களே என்று எண்ணி வந்த விமலுக்கு, மேள தாளத்துடன் மாலை அணிவித்து அவரை வரவேற்கின்றனர் கிராம மக்கள்.அதன்பிறகு தான் விமலுக்கு தெரியவருகிறது, தனக்கு வெளிநாட்டில் பத்து கோடி ரூபாய் லாட்டரி விழுந்திருக்கிறது என்று ஊரில் பொய்யை பரப்பி வைத்திருக்கிறார்கள் என்று.விமலிடம் பணம் இருப்பதால், அவரையே ஊராட்சி மன்ற தலைவராக்கி விடலாம் என்று ஊர் பெரியவர்கள் முடிவெடுத்து, விமலை ஊராட்சி மன்றத் தலைவராக்கி விடுகிறார்கள்.
கிராம மக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன?, மக்களின் மனமாற்றம் விமலின் வாழ்க்கையில் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்துகிறது?, என்பதை விமலின் வழக்கமான கமர்ஷியல் பட பாணியில் சொல்வது தான் ‘படவா’ திரைப்படம்.வெட்டியாக ஊர் சுற்றுவது, நாயகியை கண்டதும் காதல் கொள்வது, பிறகு வில்லனை எதிர்ப்பது, என்று ஒரு நடிகராக விமல் தொடர்ந்து செய்து வரும் வேலையை தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார் விமல்.. அவரது அப்பாவித்தனமான முகமும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது.
விமலின் நண்பராக நடித்திருக்கும் சூரி, விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று பயணித்து படம் முழுவதும் வருகிறார். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களை சிரிக்க வைக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் புதுவரவு ஷ்ரிதா ராவ், வேலை இல்லாத நாயகி வேடத்தில் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
விமலின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எஃப் ராம் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவாகத்தான் நடித்திருக்கிறார்கள்.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் கமர்ஷியல் அம்சங்களோடு காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ரசிக்கும்படியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கே.வி.நந்தா வழக்கமான மற்றும் ரொம்பவும் பழசான கதையை முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், கமர்ஷியலாகவும் இயக்கியிருந்தாலும், தேவையில்லாத சில காட்சிகள் மூலம் படத்தின் நீளத்தை அதிகரித்து சில இடங்களில் படத்தை தொய்வடைய செய்திருக்கிறார்.
விமல், சூரி ஆகியோரது அலப்பறைகள் மூலம் படத்தை ஜாலியாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் கே.வி.நந்தா, விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை சிலர் தங்களது சுயநலத்திற்காக வளர்ப்பதை பற்றி மேலோட்டமாக பேசியிருந்தாலும், அதை அழிப்பதற்கான பிரச்சாரத்தை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டும் பெறுகிறார். இதே போல நாடு முழுவதும் கருவேல மரங்களை அளித்தாலே விவசாயம் செழிக்கும்.ஆனாலும் நம் வளம் மிகுந்த நாட்டில் அந்நியர்களால் பரப்பப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் அதன் பாதிப்புகள் ஆகியனவற்றைப் பற்றிச் சுட்டிக்காட்டி அதைக் கடந்து வருவதற்கான வழிமுறைகளையும் சொல்லியிருப்பதற்காகவே இயக்குநரைப் பாராட்டலா