சாய் ராஜகோபால், 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கவுண்டமணி – செந்திலுக்கான நகைச்சுவைப் பகுதிகளை எழுதிய அனுபவம் உடையவர்.அவருடைய இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ஹிமா பிந்து உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.10 ஆண்டுகள் கழித்து ஹீரோவாக கவுண்டமணி நடித்துள்ள இந்த ஒத்த ஓட்டு முத்தையா ரசிகர்களைக் கவர்ந்ததா என்பதைப்பார்க்கலாம்…கவுண்டமணியுடன் இணைந்து யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், நல்லதொரு வேடத்தில் சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், O A K. சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்கியுள்ளது. சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
ஒத்த ஓட்டு காரணமாக மிகப்பெரிய அரசியல்வாதியான முத்தையா தேர்தலில் தோல்வியடைய மீண்டும் வரும் தேர்தலில் அவர் வெற்றி பெற என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை. கூடவே குடும்ப ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தனது 3 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க 3 சகோதரர்களை தேடும் கதையையும் அதற்கு ஒரு வித்தியாசமான லாஜிக்கையும் இயக்குநர் வைத்திருக்கிறார். 85 வயதாகும் கவுண்டமணிக்கு 3 மகள்கள் என்று வைத்திருந்தால் நல்லா இருந்திருக்குமே என படத்தை பார்த்த ரசிகர்கள் தியேட்டரிலேயே கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
‘கரண்ட் கம்பியை முயல் கடிச்சிடுச்சி…’என்ற வசனம், யோகி பாபு தவழ்ந்தபடி சென்று மொட்டை ராஜேந்திரன் காலில் விழுவது போன்ற அரசியல் காமெடிகள் நிகழ் கால அரசியலை ஞாபகப்படுத்துகின்றன. ஆனால், திரைக்கதை மிகவும் பலவீனமாக இருப்பதை ட்ரெய்லர் காட்டிவிடுகிறது.தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள கதைக்களத்தில், கவுண்டமணியின் அதிரடியான அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. கவுண்டமணியின் காமெடிகளுக்கு ஏற்றாற்போல் யோகிபாபு கவுன்டர் டயலாக்குகளுடன் சப்போர்ட் செய்கிறார். அந்தக்கால கவுண்டமணி ஸ்டைலில் சில காமெடி வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
சோஷியல் மீடியாவில் அரசியல்வாதிகளை வைத்து வெளியாகும் அனைத்து ட்ரோல் வீடியோக்களையும் ஒரே இடத்தில் பார்த்தது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. சமாதியில் தியானம் செய்வது, தரையில் அடித்து சத்தியம் செய்வது, வாய்ப்பில்லை ராஜா என பேசுவது என யோகி பாபு முடிந்தவரை தனது நடிப்பால் படத்தைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். கவுண்டமணி வரும் காட்சிகளும், அவர் பேசும் வசனங்களும், சண்டை செய்யும் காட்சிகள் எல்லாம் பெரிதாக ஈர்க்கவில்லை. காமெடி ஜாம்பவானை வைத்து ட்ரோல் வீடியோ எடுத்தது போலத்தான் படம் உள்ளது. கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் அப்பப்போ ரசிகர்களை சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் எடுத்துக் கொள்ளும் முயற்சி மட்டுமே படத்திற்கு பலமாக உள்ளது. மற்றபடி பெரிதாக எதுவுமே இல்லை.
