குழந்தைகளுடன் பார்க்கிற மாதிரியான படங்கள் அபூர்வமாகத்தான் வெளி வருகின்றன. குழந்தைகளை வெகுவாக கவரும் விதமாக வந்திருக்கும் படம் தான் டபுள்டக்கர்.!

அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட், யாஷிகா ஆனந்த், கோவை சரளா, மன்சூர் அலி கான், ஷாரா, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், சுனில் ரெட்டி என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தாலும் டபுள் டக்கர் படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்பது அந்த கடவுளின் காவலர்களான ரைட் மற்றும் லெஃப்ட் பொம்மைகள் தான்.இந்த டபுள் டக்கர் படத்தில் எமதர்மன், சித்ரகுப்தாவுக்கு பதிலாக ரைட், லெஃப்ட் என 2 பொம்மைகள் வருகின்றன. அந்த பொம்மைகளுக்கு முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் வாய்ஸ் கொடுத்திருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.

ஆக்சிடெண்ட் ஒன்றில் அப்பா & அம்மாவை இழந்து விடும் நாயகன் அரவிந்த் ( தீரஜ்) முகத்தில் தீக்காயம் ஏற்படுகிறது பெரிய பணக்காரனாக இருந்தும் அவனிடம் யாரும் பழக மறுக்கிறார்கள். அதே சமயம் இளம் பெண் நாயகி பாரு (ஸ்மிருதி) மட்டும் அவனுடன் கேஷூவலாக பழகுகிறாள். வழக்கம் போல் இவர்களின் நட்பு காதல் ஆகிறது. அந்நிலையில் ‘காட்’ஸ் ஆர்மி’ என்கிற கடவுளின் உலகத்திலிருந்து வரும் ரைட் (முனீஷ்காந்த்தின் குரல்), லெஃப்ட் (காளி வெங்கட்டின் குரல்) என்ற தேவதை பொம்மைகள் இரண்டும் சேர்ந்து அரவிந்த் உயிரை பறித்து விடுகிறது. பின்னர் தான் அவர் 85 வயது வரை வாழக்கூடிய தகுதி உடையவர் என்றும் தவறுதலாக அவரது உயிரை பறித்த விஷயம் தேவதை பொம்மைகளுக்கு தெரிய வருகிறது. இதை அறிந்துக் கொண்ட நாயகன் அரவிந்த தன் உடலுக்கு உயிர் தரும் வரை விட மாட்டேன் என்று தேவதைகளை மடக்கி வைத்துக் கொள்கிறார்.மீண்டும் அந்த உடலில் உயிரை சேர்த்து விடலாம் என பார்த்தால், எதிர்பாராதவிதமாக அரவிந்த்தின் சடலமும் காணாமல் போகிறது. ஆவியாக இருக்கும் ஹீரோவுக்கு அவரை போலவே உருவ ஒற்றுமை கொண்ட ராஜா எனும் நபரின் உடல் தற்காலிகமாக கிடைக்கிறது. இந்த உடல் ஹேண்ட்ஸமாக இருந்தாலும், எனக்கு என் உடல் தான் வேணும் என அடம்பிடிக்கும் ஹீரோவுடன் சேர்ந்துக் கொண்டு அவரது உடலை தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் அந்த லெஃப்ட் ரைட் இறங்குகிறது. கார்ட்டூன் படங்களில் வருவது போன்ற அனிமேஷன் பொம்மைகள் மற்றும் அதற்கு குரல் கொடுத்திருக்கும் முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் காம்போ செய்யும் ரகளை தான் படத்திற்கு பிளஸ். கபாலி ரஜினியாகவும், ஏஜென்ட் விக்ரம் கமலாகவும் ரோலக்ஸ் சூர்யாவாகவும், காந்தாரா தெய்வமாகவும் அந்த பொம்மைகள் உருவம் மாறி வந்து செய்யும் சேட்டைகள் சிரிக்க வைக்கின்றன. அந்த இரண்டு பொம்மைகளை தாண்டி எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், ஷாரா, கோவை சரளா என பலரும் காமெடியில் கலக்கியுள்ளனர். ஹீரோ தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட் முடிந்த அளவுக்கு ஸ்கோர் செய்ய பார்க்கின்றனர். ஆனால், இன்னமும் கூடுதலாக அவர்களின் பர்ஃபார்மன்ஸ் இருந்திருக்கலாம். காமெடியை தவிர்த்து கதை மற்றும் திரைக்கதையில் பல இடங்களில் லாஜிக் மிஸ் ஆகிறது. ஃபேண்டஸி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்றாலும் தேவையற்ற பல கிளை கதைகளால் சொல்ல வந்த முக்கிய கருத்து பெரிதாக ஹைலைட் ஆகவில்லை. இந்த சம்மருக்கு குழந்தைகளுடன் ஜாலியாக பார்க்கும் படமாகவே வந்திருக்கிறது இந்த டபுள் டக்கர்.