மேயர் தேர்வு: யார் பாணியைப் பின்பற்றினார் ஸ்டாலின்?!

` “தலைவர் கலைஞர் பாணி வேறு… என் பாணி வேறு” என்று கருணாநிதி மறைந்த பிறகு நடந்த தி.மு.க பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதைத்தான் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்’ என்கிறார்கள்.

“தலைவர் கலைஞர் பாணி வேறு… என் பாணி வேறு” என்று கருணாநிதி மறைந்த பிறகு நடந்த தி.மு.க பொதுக்குழுவில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் சொல்லியிருந்தார். அதைத்தான் இன்றளவும் கடைபிடித்து வருகிறார். 9 மாதகால ஆட்சியில் அவ்வளவாக கருணாநிதி சாயல் எங்குமே தென்படவில்லை. மாறாக ஸ்டாலினுக்கு சமீபகாலமாக ஜெயலலிதா சாயல் தென்படத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் சிலர்.

அரசியல் பார்வையாளர் ஒருவர் இதுபற்றி நம்மிடம் விளக்கமாக பேசுகையில், “ஜெயலலிதாவின் பாணி எப்போதுமே அதிகாரம் என்பது ஒற்றை இடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதுதான். 32 அமைச்சர்கள் இருந்தபோதும், எவரையுமே முழுமையாக செயல்படவிடாமல் அதிகாரத்தை தன் கையிலேயே வைத்திருந்தார்.

சிபாரிசு கேட்டெல்லாம் ஜெயலலிதாவிடம் நிற்க முடியாது. அதுபோன்றுதான் ஸ்டாலின் இடத்திலும் நடப்பதாக தி.மு.க-வினரே குமுறுகிறார்கள். வெளியில் தெரியும் அளவுக்கு தவறு செய்யும் அமைச்சர்களை அடிக்கடி கழற்றிவிட்டு, அமைச்சரவையை மாற்றிக்கொண்டே இருப்பது ஜெ பாணி. ஸ்டாலினும், அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார். அநேகமாக பட்ஜெட் கூட்டத்தொடரும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் முடிந்தபின்னர் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம்.

சில விவகாரங்களில் ஜெயலலிதா பாணியையும் மிஞ்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதுதான் தேர்தல் களம். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது ஐபேக்கிடமிருந்தும், மா.செ-க்களிடமிருந்தும் வேட்பாளர் பட்டியலைப் பெற்றுக்கொண்டு, தனியாக அமர்ந்து ஸ்டாலின்தான் தேர்வு செய்து வெளியிட்டார். ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் லோக்கல் பதவிகளை மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களே கவனித்துக்கொள்ள அனுமதித்த ஸ்டாலின், மேயர் பதவிகளை மட்டும் தான் தான் தேர்வு செய்வேன் என்று கூறிவிட்டாராம். அதன்படி ஸ்டாலின் மட்டுமே இருந்து தேர்வு செய்த பட்டியல்தான் வெளியானது. மொத்தத்தில் ஸ்டாலின் அவர் தந்தை கருணாநிதியின் பாணியிலோ அல்லது ஜெயலலிதா பாணியிலோ செயல்படாமல், தனக்கே உரித்தான சொந்த பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்” என்றார்.