ஸ்டாலினின் நடவடிக்கைகளால் திமுகவை விட்டு விலகுது இஸ்லாமிய வாக்கு வங்கி?! ஏன்? எப்படி?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு வழக்கம்போல் முழுமையான ஆதரவினை இஸ்லாமியர்கள் வழங்குவார்களா?

கர்நாடகாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ‘ஹிஜாப்’ விவகாரத்துக்கு எதிராக தமிழகத்தில் முஸ்லீம் அமைப்புகள் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் பின் ‘தமிழகத்தை ஆள்வது தி.மு.க. அரசு. இது சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கும் அரசு. நாம் போராட்டம் நடத்த, அதை எதிர்த்து வேறு சிலர் குரல் கொடுக்க துவங்கினால் விவகாரம் வேறு மாதிரி போக துவங்கலாம். அது சட்டம் ஒழுங்குக்கு சிக்கல் தந்து அரசுக்கு சிரமம்  உருவாகிட கூடாது. அதனால் பொறுமை காப்போம்.’ என்று முடிவெடுத்து அமைதியாகி விட்டார்கள்.

இதுதான் இதுவேதான் தி.மு.க. மீது சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அதற்கு காரணம், கடந்த காலங்களில் அவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்காக குரல் கொடுத்த மிக முக்கிய இயக்கங்களில் முதன்மையானது திராவிட முன்னேற்ற கழகம்தான். கருணாநிதி அந்தளவுக்கு மிக நுணுக்கமாக இஸ்லாமிய மக்களுக்கு தன் ஆதரவையும், மதிப்பையும் வழங்கியிருந்தார்.

அவருக்குப் பின் ஸ்டாலினும் கூட கடந்த இரு வருடங்களுக்கு முன் குடியுரிமை சட்டம் தேசத்தில் அமலாக்கப்பட்ட போது, அதற்கு எதிராக வன்மையாக குரல் கொடுத்து இஸ்லாமிய மக்களின் தோழனாக தன்னை அழுத்தமாக வலியுறுத்திக்கிட்டார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. கூட்டணிக்கு மிகப் பெரிய அளவில் தங்களின் சப்போர்ட்டை வழங்கியிருந்தனர் இஸ்லாமியர்கள்.  அக்கட்சி முரட்டு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்திட அவர்களும் ஒரு காரணமே என்பதில் இரண்டாவது கருத்தே கிடையாது. இந்நிலையில், தற்போது நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு வழக்கம்போல் முழுமையான ஆதரவினை இஸ்லாமியர்கள் வழங்குவார்களா? எனும் கேள்வியினை எழுப்பியிருக்காங்க அரசியல் பார்வையாளர்கள். ’அதிலென்ன சந்தேகம்?ன்னு கேட்டதுக்கு என்ன சொல்றாங்கன்னா ?.

“இம்முறை தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னால் நிர்வாகத்தின் இயல்பான போக்கில் அரசு எடுத்த முடிவில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு சிறு சிறு அதிருப்திகள் ஏற்பட்டுச்சு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறைவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி, முன்கூட்டியே விடுதலை செய்யத் திட்டமிட்ட அரசு, கணிசமான சிறைவாசிகளை  தேர்வு செய்து அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அதில் இஸ்லாமிய கைதிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவுன்னு சொல்லப்படுது. இதில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு ரொம்ப வருத்தம்.  குறிப்பா கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பல வருடங்கள் சிறையிலேயே இருக்கின்ற, இத்தனைக்கும் அந்த வழக்கில் மிக சாதாரண குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விடுதலையாவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ஏமாந்து போனார்கள். அதில் தங்களின் அதிருப்தியையும், கோபத்தையும் அரசுக்கு எதிராக ஓப்பனாகவே காட்டினார்கள் தமிழகமெங்கும்.

இந்நிலையில் வழக்கமாக தி.மு.க. கூட்டணியிலிருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இம்முறையும் அக்கூட்டணியில் தொடர்ந்தாலும் கூட கடும் அதிருப்தியில் இருக்குது தொகுதிப் பங்கீடு விஷயத்தில். அதேவேளையில் திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்டு, தி.மு.க.வை அதிர வைத்துள்ளது.

ஸ்டாலினின் நட்பு வட்டாரத்தில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியும் இந்த உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீட்டில் கடும் அதிருப்தி. சென்னை மாநகராட்சியில் ஒரே ஒரு வார்டு ஒதுக்கப்பட்டதில் கண் சிவந்துவிட்டனர். பல நகராட்சி, பேரூராட்சிகளில் சுயேட்சையாக இக்கட்சியினர் நின்று, தி.மு.க. கூட்டணிக்கு குடைச்சல் தர்றாங்களாம்.

இந்திய தேசிய லீக் கட்சியோ தாங்கள் போட்டியிடாத இடங்களில் மட்டும் தி.மு.க.வுக்கு ஆதரவுன்னும் மற்ற இடங்களில் அப்படி முடியாது என்றும் அறிவித்துள்ளனர். அதேப்போல் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியோ அ.ம.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறது. இப்படி இஸ்லாமிய கட்சிகளும், அமைப்புகளும் தி.மு.க.வுக்கு எதிரான திசை அல்லது வேறு திசையில் நிற்பதை இந்த தேர்தலில் காண முடியுது. இதனால் கடந்த சட்டமன்ற தேர்தல் போல் இத்தேர்தலில் தி.மு.க. தாறுமாறான ஹிட்டடிக்குமா? ங்கிறது கேள்விக்குறிதாங்கிறாங்க.

ஆனால் இக்கருத்தை கடுமையாக மறுக்கும் தி.மு.க.வினர் “ஏகப்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இருக்குது. அதில 90% எங்களுக்கு ஆதரவான நிலைப்பாடில்தான் எப்பவும், இப்பவும் இருக்கிறாங்க. சிலர் கருத்து மாறுபட்டு நிற்பதுதான் அரசியல். கடந்த சட்டசபை தேர்தலிலும் அவர்கள் அப்படித்தான் இருந்தாங்க. அதனால் நாங்கள் ஒன்றும் நட்டப்படலையே. இஸ்லாமிய மக்கள் எங்களை பெருவாரியாக ஆதரிச்சாங்க. அதுதான் இப்பவும் நடக்கும்.”அப்படீங்கறார்.

இஸ்லாமியர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு விழுமாங்கிறது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெளிவா தெரிஞ்சிறும்.ரிசல்ட் வர்ற வரைக்கும் பொறுத்திருப்போம்.