புஷ்பா : தி ரைஸ் – எழுச்சி !

ஆந்திர பகுதியில் ஷேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. மேலும், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்குதுன்னு தான் சொல்லணும். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளன. அதில் முதல் பாகமான புஷ்பா : தி ரைஸ் மிகப்பெரிய அளவில் வெளியாகி உள்ளது.

படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் லாரி டிரைவராக நடித்துள்ளார். சாதாரண கூலி வேலை செய்யும் புஸ்பா டிரைவராக செல்கிறார். அங்கு திடீரென போலீஸ் வருவதை அறிந்து செம்மரக்கட்டைகளை மறைத்து வைக்கிறார். பின் தான் மட்டும் போலீசிடம் சரணடைகிறார் புஷ்பா. – இதனை கேள்விப்படும் செம்மர கடத்தல் தலைவர்களில் ஒருவரான கொண்டா ரெட்டி புஷ்பாவை பெயிலில் எடுக்கிறார். பின் புஷ்பா அவருடன் சேர்ந்து செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். மேலும் தன்னுடைய மூளையை பயன்படுத்தி பலவகையில் அல்லு அர்ஜுன் செம்மரக்கட்டைகளை கடத்தி வருகிறார். இதை தடுத்து செம்மர கட்டைகளை பிடிக்க போலீஸ் பல வகைகளில் முயற்சி செய்கிறது. அப்படி ஒருமுறை காவல்துறையில் புஷ்பா சிக்கிக் கொள்கிற சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், அப்போதும் புஷ்பா அங்கிருந்து பாதுகாப்பாக வேறு ஒரு இடத்திற்கு செம்மரக்கட்டைகளை கொண்டு செல்கிறார். இதனால் அரசியல்வாதி பூமி ரெட்டி, முக்கிய புள்ளியான மங்கலம் சீனுவின் நம்பிக்கையை புஷ்பா சம்பாதிக்கிறார்.

மேலும், புஷ்பா தொடர்ந்து சீனுவிடம் வேலை செய்து வருகிறார். திடீரென இனி அவனிடம் வேலை செய்யக்கூடாது என்றும், தன் சொந்த முயற்சியில் செம்மரக்கட்டைகளை கடத்தி நேரடியாக விற்கலாம் என்று புஷ்பா நினைக்கிறார். இதனால் மிகப்பெரிய அளவில் புஷ்பாவிற்கு பிரச்சனை வருகிறது. அந்த முயற்சியில் கொண்டா ரெட்டியை மங்களம் சீனுவின் ஆட்கள் கொன்றுவிடுகிறார்கள். பின் மங்களம் சீனு மனைவியின் தம்பியை புஷ்பா கொன்றுவிடுகிறார். இதனால் புஷ்பாவிற்கு எதிராக பல எதிரிகள் வருகிறார்கள். எல்லோரையும் எதிர்த்துக்கொண்டு புஷ்பா தன்னுடைய செம்மரக்கடத்தல் தொழிலை தொடங்குகிறார். பின் எதிர்க்க ஊரில் யாரும் இல்லாததால் புஷ்பா தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறார். இதனை தடுத்து நிறுத்துவதற்காக காவல்துறை புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரியாக பகத் பாசில் வருகிறார். படத்தில் கதாநாயகனாக வரும் அல்லு அர்ஜுன் தன்னுடைய மாஸ் நடிப்பை வேற லெவலில் தெறிக்க விட்டு உள்ளார்.

மேலும், தன்னுடைய மாஸ் நடிப்பில் மட்டுமில்லாமல் நகைச்சுவை காட்சிகளிலும் அற்புதமாக நடித்து இருக்கிறார். கதாநாயகி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். அதிலும் ராஸ்மிகா படத்தில் ஏ சாமி என்ற பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்து இருக்கிறார். புஷ்பாவின் நண்பராக ஜெகதீஷ் நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. வில்லன்களாக வரும் அஜய், சுனில் ஆகியோர் மிரட்டி இருக்கிறார்கள். படத்தில் புஷ்பாவின் தாயாக வருபவரின் நடிப்பும் யதார்த்தமாக உள்ளது. கடைசியில் பகத் பாசில் வந்தாலும் வேற லெவலில் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இயக்குனர் சுகுமார் எடுத்துக்கொண்ட கதைகளம் நல்லாத்தான் இருக்குது. ஆனால், திரைக்கதையை சுருக்கி சொல்லியிருக்கலாம். படம் நீண்டு கொண்டே போவதால் பார்ப்பவருக்கு சலிப்பு தட்டுகிறது. கமர்சியல் வசனங்களும் சண்டைக்காட்சிகளும் பரவாயில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் போர் அடிக்கும் வகையில் உள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை எல்லாம் பக்கபலமாக அமைந்திருக்கிறது. அதிலும் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உடைய ஓ சொல்றியா மாமா பாடல் வேற லெவல்ல உள்ளது. மேலும், முதல் பாகத்தில் புஷ்பா எழுச்சியை காட்டியிருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இரண்டாவது பாகத்தில் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கணும்.