ஜாக்கிரதை, நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பது மட்டும் நிச்சயம். நம்மில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
 
அண்மையில் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள ஒரு முடிவு நமது நாட்டின் ஜனநாயக உணர்வுகளின் மீதான தாக்குதலாக அமைந்திருக்கிறது. மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசு என்பது ஆபிரஹாம் லிங்கன் ஜனநாயக அரசுக்குக் கொடுத்த அற்புதமான விளக்கம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை விட்டுச் சென்ற பிறகு நமக்கு அமையும் அரசு இத்தகைய ஜனநாயக உணர்வு கொண்ட அரசாக இருக்கும் என்று நாம் நம்பினோம். கடந்த 70 ஆண்டுகளில் இந்த நம்பிக்கை பல முறை ஆட்டம் கண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது.இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜக, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. 40 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி பெரும்பான்மை வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்திருப்பதாகச் சொல்லிக்கொள்கிறது. பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி செய்வது என்பது வேறு, பெரும்பான்மைவாதம் நாட்டை ஆட்சி செய்வது என்பது வேறு. பதிவாகும் வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகளின் அடிப்படையில் அமைவது ஜனநாயக ரீதியான ஆட்சி. பெரும்பான்மைவாதம் என்பது, எண்ணிக்கை பலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சகல அதிகாரங்களையும் கொண்டது என்னும் கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வது.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது எல்லாத் தரப்பினரின் கருத்தை அறிந்து, அவற்றைப் பரிசீலித்து முடிவுகளை எடுக்கும். இதுவே நிஜமான ஜனநாயக உணர்வு. பெரும்பான்மைவாதமோ எண்ணிக்கையே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்னும் நோக்கில் சர்வாதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும். இதுதான் இவை இரண்டுக்குமான வேறுபாடு. பெரும்பான்மைவாதத்தைப் போல ஜனநாயகத்திற்குச் சாவுமணி அடிக்ககூடியது வேறொன்று இருக்க முடியாது.

பாஜக அரசு எடுத்துவரும் பல முடிவுகளைப் போலவே அது அண்மையில் எடுத்துள்ள ஒரு முடிவு பெரும்பான்மைவாதத்தின் அடையாளமாக இருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கான ஓய்வூதியம் குறித்த விதிகளில் அது ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பிட்ட சில உளவு அல்லது பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் பணிபுரிந்த அதிகாரிகள் ஓய்வுபெற்ற பிறகு புத்தகம் ஏதேனும் எழுத விரும்பினால் அந்த அமைப்பின் தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்று அது குறிப்பிடுகிறது.

ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் தங்களுடைய பணிக்காலம் தொடர்பான நினைவுகளை எழுதுவதும் அவற்றை நூலாக வெளியிடுவதும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வரவேற்கப்படும் வழக்கம். இத்தகைய நூல்களில் பலவும் முக்கியமான ஆவணங்களாகியுள்ளன. அந்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றின் ஒரு பகுதியாகவும் ஆகியுள்ளன. நம்மை ஆளுபவர்களைப் பற்றியும் ஆட்சி அதிகாரத்தின் போக்குகள் பற்றியும் புரிந்துகொள்வதற்கு இவை உதவிகரமாக இருக்கின்றன.

இத்தகைய எழுத்துக்கு முன் அனுமதி பெறுவது என்பது கிட்டத்தட்ட முன் தணிக்கை போன்றதுதான். இதன் மூலம் அரசு எதைத் தடுக்க விரும்புகிறது? இத்தகைய பதிவுகள் வரக் கூடாது என்று நினைக்கிறதா? பணி ஓய்வுக்குப் பிறகு அரசு அதிகாரிகள் வாயைத் திறக்கக் கூடாது என்கிறதா?

அந்தரங்கத்தினுள் ஊடுருவும் வைரஸ்

இந்தச் செய்தி தந்த அதிர்ச்சி அடங்குவதற்கு முன்பு இன்னொரு அதிர்ச்சி தாக்கியது. உடலுக்குள் புகுந்து அச்சுறுத்தும் வைரஸைப் போல நம்முடைய அந்தரங்கத்தினுள் ஊடுருவக்கூடியதொரு வைரஸைப் பற்றிய செய்தி அது. இந்த வைரஸ் உங்கள் மொபைல் போன் வழியாக உங்கள் அந்தரங்கத்திற்குள் பிரவேசிக்கும். அது உங்கள் உரையாடல்களைக் கண்காணிக்கும். உங்கள் புகைப்படங்களைப் பர்வையிடும். உங்களுக்கு வந்துள்ள செய்திகளையும் மின்னஞ்சல்களையும் வாசிக்கும். இவ்வளவும் உங்களுக்குத் தெரியாமலேயே நடக்கும். பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) எனப்படும் இந்த ஆயுதத்தை மிக ஆபத்தான உளவாளி என்றுதான் குறிப்பிட வேண்டும்.

கொரோனாவைரஸ் அல்லது வேறு வைரஸ்களைப் போல் தானாகவே ஊடுரும் வைரஸ் அல்ல இது. பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட இணைய உளவுக் கருவி இது. இதற்காகக் கொடுத்த விலை என்பது வெறும் பணம் மட்டுமல்ல. தார்மிக விழுமியங்களும்தான். உளவு வேலைக்காக உலகளாவிய வகையில் பயன்படுத்தப்படும் ஸ்பைவேர் (உளவு பார்க்கும் மென்பொருள்) இது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் எனப் பலரும் இந்த உளவு வலைக்குள் சிக்கியிருக்கிறார்கள். முன்னாள் தேர்தல் ஆணையரும், பாஜக அமைச்சர்களும்கூட இதில் இருக்கிறார்கள். பல்வேறு ஊடகவியலாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் நேரத்தில் தி வயர் என்னும் இணைய இதழ் இந்த உளவு வேலையை அம்பலப்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தபடியே இதன் எதிரொலி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலுவாகக் கேட்கிறது. பயங்கரவாதிகளைக் கண்காணிப்பதற்கான கருவியைக் கொண்டு தன்னுடைய குடிமக்களை அரசு வேவு பார்க்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பரபரப்புக்காகக் கிளப்பிவிடப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று அரசு அதைப் புறங்கையால் தள்ளிவிடப் பார்க்கிறது. அப்படியானால், இதைச் செய்தது யார்? இதற்காகப் பணம் கொடுத்தது யார்?

இதற்குப் பின்னால் இருக்கும் உண்மை என்னவாக இருந்தாலும் சரி. நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பது மட்டும் நிச்சயம். நம்மில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் அனைவருமாகக்கூட இருக்கலாம்.

Related posts:

வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் தயாரிப்பில் மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம் !
பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜாவான நடிகர் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் !
ஏர்டெல், வோடபோன், ஜியோ தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.!
டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!
விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் 'நொடிக்கு நொடி' பூஜையுடன் துவக்கம் !
சினிமா தொடர்பான படிப்புகள் எப்படிப்பட்டவை?
சவுந்தர்யா எடுத்த இந்த முடிவுதான் இப்போது வரை திமுகவுக்கு சாதகமாகி கொண்டிருக்கிறது..!